அன்புமணி  timepass
Satire

அன்புமணி எனும் 'வருங்கால முதல்வரே' - அது ஒரு டவுசர் காலம் | Epi 5

டிவியில் ரஜினிகாந்தின் 'பாபா' படம் போட்டால், அதை உடனே மாற்றிவிட்டு, மக்கள் டிவியில், 'பாட்டாளி' படத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்.

Aravindraj R

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

இந்த வாரம், அன்புமணி ராமதாஸ் என அனைவராலும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிற, 'வருங்கால முதல்வரே'-வின் பள்ளிக் காலத்தை பார்ப்போம்.

'பெரியவனாகி என்ன ஆவீங்க?' என டீச்சர் கேட்டதற்கு, மற்ற மாணவர்கள் 'மருத்துவர் ஆவேன், இஞ்சினியர் ஆவேன்' என கூறும்போது, அன்புமணி மட்டும் 'முதலமைச்சர் ஆவேன் டீச்சர். அதுவரைக்கும் மாநிலங்களவை எம்.பி-யாக இருப்பேன்' எனச் சொல்லி மாஸ் காட்டியிருப்பார்.

எக்ஸாம் பேப்பரில் மற்ற மாணவர்கள் பிள்ளையார் சுழிப் போட்டு எழுத ஆரம்பிக்கும்போது, அன்புமணி மட்டும் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற ஸ்லோகத்தை எழுதியே ஒவ்வொரு எக்ஸாமையும் ஆரம்பித்திருப்பார்.

அட்டென்டன்ஸ் எடுக்கும்போது, இவரின் பெயரை டீச்சர் கூப்பிட்டால், "அன்புமணி ஆகிய நான் ப்ரெசண்ட் மிஸ்' எனச் சொல்லியிருப்பார். அதுமட்டுமல்ல, "அன்புமணி ஆகிய நான் தண்ணி குடிச்சுட்டு வந்துடுறேன் மிஸ்", "அன்புமணி ஆகிய நான் ஹோம் ஒர்க் நோட்ட தைலாபுரத்திலேயே வச்சுட்டு வந்துட்டேன் மிஸ்", "அன்புமணி ஆகிய என்னை இவன் கிள்ளுறான் மிஸ்" என்றுதான் பேசியிருப்பார்.

டீச்சர் மறுத்தால், "தண்ணீர் குடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்", "ஹோம் ஒர்க் செய்ய எனக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்", "என்னைக் கிள்ளியவனை மீண்டும் கிள்ள எனக்கு ஒருமுறை மட்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என 'ஒரு வாய்ப்புகளை' நிறைய கேட்டிருப்பார்.

வகுப்பறை போர்ட், பென்ச், கேன்டீன் சுவர் என எல்லா இடத்திலும் #Anbumani4Cm என எழுதி வைத்துவிட்டு ஓடிப்போய் இருப்பார்.

ஆண்டு  விழாவில் மற்ற மாணவர்கள் போக்கிரி பொங்கல் பாட்டிற்கு நடனம் ஆடும்போது, அன்புமணி மட்டும் சோலோவாக 'மாம்பழமாம் மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்' பாட்டிற்கு நடனம் ஆடியிருப்பார்.

எல்லா பண்டிகைக்கும் மஞ்சள் கலரிலேயே புது ட்ரெஸ் எடுத்திருப்பார். 'மஞ்சக்காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா' பாட்டுதான் ஃபேவரைட் பாடலாக இருந்திருக்கும்.

டிவியில் ரஜினிகாந்தின் 'பாபா' படம் போட்டால், அதை உடனே மாற்றிவிட்டு, மக்கள் டிவியில், 'பாட்டாளி' படத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்.

பள்ளியில் நடக்கும் எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் பங்கேற்றிருப்பார். ஒரே ஆட்டத்தில் ஒன்பது முறை அணி மாறியிருப்பார். திடீரென்று, "எந்த அணியுடனும் கூட்டணி இல்லை. நான் மட்டும் தனித்து விளையாட போகிறேன். முதல் ஓவர் முதல் பால் சிக்சர்" எனக் கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பார்.

எந்த அணி வெற்றி பெற்றாலும், "இது ஐயாவிற்கு கிடைத்த வெற்றி" எனக் குதித்திருப்பார்.

பள்ளியில் ஓவியா என்ற பெயருடைய மாணவி வந்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயிருப்பார்.