டி.டி.வி.தினகரன் டைம்பாஸ்
அரசியல்

'Sleeper cell புகழ் டி.டி.வி.தினகரன்' - அது ஒரு டவுசர் காலம் | Epi 11

சமூக அறிவியல் பரிட்சையில், அசோக பேரரசைப் பற்றி இரண்டு மார்க் கேள்வி கேட்டால், 'மன்னார்குடி பேரரசு' பற்றி பத்து பக்கத்திற்கு விடை எழுதியிருப்பார்.

Aravindraj R

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

இந்த வாரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சியின் நிறுவனர் டி.டி.வி.தினகரனின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

சமூக அறிவியல் பரிட்சையில், அசோக பேரரசைப் பற்றி இரண்டு மார்க் கேள்வி கேட்டால், 'மன்னார்குடி பேரரசு' பற்றி பத்து பக்கத்திற்கு விடை எழுதியிருப்பார்.

மாறுவேட போட்டியில், தொப்பி போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆர் வேடத்தில் வருவார் என பள்ளியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, மாறாக எம்.ஜி.ஆர் போட்ட தொப்பியை எடுத்து வந்து, 'தொப்பி சின்னத்தில் வாக்களித்து, எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கொடுங்கள்' என கேட்டிருப்பார்.

குக்கர் வேடம் போட்டு இரண்டாம் பரிசையும், பரிசுப் பெட்டி வேடம் போட்டு மூன்றாம் பரிசையும் அள்ளியிருப்பார்.

விளையாட்டு விழாவில் மாணவர்களை Yellow House, Green House, Blue House என பிரிக்கக் கூடாது என அடம்பிடித்து, 'சின்னம்மா ஹவுஸ்', 'தினகரன் ஹவுஸ்', 'திவாகரன் ஹவுஸ்', 'எம்.நடராஜன் ஹவுஸ்', 'சுதாகரன் ஹவுஸ்', 'பாஸ்கரன் ஹவுஸ்' என பிரிக்க சொல்வதோடு, 'எந்த ஹவுஸும் போட்டிப் போட்டுக்கொள்ள கூடாது. ஒற்றுமையாக இருந்து போயஸில் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்' என்று பி.டி. வாத்தியாரிடம் கோரிக்கை வைத்திருப்பார்.

முழு ஆண்டு பரிட்சை விடுமுறையில் சக வகுப்புத் தோழர்கள் பாட்டி வீட்டிற்குப் போனதைப் பற்றியும், கொடைக்கானல் ரோஜா தோட்டத்துக்கு சுற்றுலா போனதைப் பற்றியும் கட்டுரை எழுதும்போது, தினகரன் மட்டும், தன் அத்தை சசிகலாவோடு சேர்ந்து போயஸ் தோட்டத்திற்கு அம்மாவைப் பார்க்க போனதைப் பற்றியும், இராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்க போனதைப் பற்றியும், ஆர்.கே.நகர் ரோப் கார் சுற்றுலா பற்றியும், கொடநாடு குலுகுலு சுற்றுலா பற்றியும், சுதாகரன் கல்யாணத்திற்கு வாங்கிய புது ட்ரெஸ்ஸைப் பற்றியும் கட்டுரையாக எழுதியிருப்பார்.

தனது பேரே தினகரன்தான் என்றாலும், வடை வைத்து சாப்பிடக் கூட தினகரன் பேப்பரைத் தொட்டிருக்க மாட்டார். மாறாக, வடை, பஜ்ஜி, சமோசாக்களைச் சாப்பிட 'நமது எம்.ஜி.ஆர்' தினசரியையே பயன்படுத்தியிருப்பார்.

எத்தனை கேபிள் டிவி சானல்கள் இருந்தாலும், ஜெயா டிவியை மட்டுமே பார்த்திருப்பார். முக்கியமாக, விசுவின் மக்கள் அரங்கம், தேன்கிண்ணம், குஷ்புவின் ஜாக்பாட் நிகழ்ச்சிகளையே கண்கொட்டாமல் பார்த்திருப்பார்.

தங்களுடைய பிறந்த நாளுக்கு மற்ற மாணவர்கள் மிட்டாய் கொடுக்கும்போது இவர் மட்டும், மாணவர்களின் டேபிளுக்கு அடியில் 'இருபது ரூபாய் நோட்டு' ஒன்றை வைத்து விட்டு ஓடியிருப்பார். அந்த இருபது ரூபாய் நோட்டை கேன்டீனில் கொடுத்து, 5 ரூபாய் ஃபைவ் ஸ்டார் மிட்டாய் வாங்கிக் கொள்ள சொல்லியிருப்பார்.

எல்லா பரிட்சையிலும் பிள்ளையார் சுழிக்கு பதில், 'தியாகத் தலைவி சின்னம்மா துணை' என்றே எழுதி இருப்பார்.

தனது பழைய தோஸ்தான பெரியகுளம் பெரியப்பா மகன் பன்னீரை எப்போது திட்டிக்கொண்டே இருந்திருப்பார்.