ராம நாராயணன் டைம்பாஸ்
Rewind

ராம நாராயணன் vs ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் - சிறுகுறிப்பு வரைக

டைம்பாஸ் அட்மின்

எத்தனை நாளைக்குத்தான் உள்ளூர் கைகளையே கலாய்க்கிறது. கொஞ்சம் கண்டம் விட்டு கண்டம் தாண்டலாமா பாஸ். விலங்குகளை வித்தியாசமான ஜீவராசிகளையும் தங்கள் படைப்பு பொருளாக படமெடுத்த ஹாலிவுட் கோலிவுட் இயக்குனர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ராம நாராயணன் ஆகியோர். இருவருக்குமான வித்தியாசங்களைப் பார்ப்போம்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் :

  • சயின்ஸ் பிக்சன் படங்கள் மூலம் உலகையே உச்சா போக வைத்தவர்.

  • டைனோசர் என்ற அழிந்து போன இனத்தை தன் படங்களில் காட்டியவர்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
  • நம்பியாரையும் பொன்னம்பளத்தையும் பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு 'இதுங்க நம்மள நோக்கிதான் வருது' வகையான வில்லன்களை அறிமுகப்படுத்தியவர்.

  • ஜுராசிக் பார்க், ஈடி, ஜாஸ் போன்ற படங்களில் விநோத ஜந்துக்கள் இராட்சத சுறா மீன்கள் என தத்துருவமாக காட்டி மக்களை தியேட்டருக்குள்ளேயே அலறவிட்டவர்.

  • அழிந்துபோன டைனோசர்களை கண்முன் காட்டினாரே தவிர, அவை ஆடையில்லாமல் அலைகின்றன என்று கவலைப்படாதவர்.

  • கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறார். ஆனால், 33 படங்களைத்தான் இயக்கியிருக்கிறார்.

  • ஏழு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறை வென்றுள்ளார்.

ராம நாராயணன்

ராம நாராயணன்:

  • ஜீவராசிகளை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளாக ஆக்கி ப்ளூ கிராஸ் இயக்கம் தமிழகத்தில் வேரூன்ற காரணமாக அமைந்தவர்.

  • பாசக்கார பாம்பு 'பாம் டிப்யூஸ்' பண்ணும் பரபர காட்சியை முதன்முறையாக உலக சினிமாவில் காட்டினார்.

  • நாயும் குரங்கும் 'இணைந்த கைகள்' ராம்கி, அருண் பாண்டியன் போல கைகுலுக்கி வில்லன்களை துவம்சம் செய்யும் க்ளைமாக்ஸ் எந்த உலக சினிமாவிலும் இல்லாதது.

  • ஆடி வெள்ளி போன்ற படங்களுக்காக தியேட்டர் வாசலில் வேப்பிலைக்கட்டி ஸ்கிரீனுக்கு முன் சூடம் காட்டி பெறும் பெண்கள் கூட்டத்தை இன்ஸ்டன்ட்டாக சாமி ஆட வைத்தவர்.

ஜெகதீஸ்வரி திரைப்பட காட்சி
  • யானைக்கும் குரங்குக்கும் காஸ்ட்யூம் கொடுத்து உலக சினிமாவில் விலங்குகளுக்கு முதன்முறையாக காஸ்ட்யூம் டிசைனரை உருவாக்கி கொடுத்த பெருமையையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஒருசேர காப்பாற்றியவர்.

  • 1980 முதல் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் இவர், 125 படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

    - ஆர்.சரண்.