அஜித்குமாரின் தந்தை சுப்ரமண்யம் தன் 85-வது வயதில் மறைந்த செய்தியைக் கேட்டு அரசியல் மற்றும் திரை உலகினர் அனைவரும் அஜித்குமாருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். பெரும்பாலும் தன் குடும்ப உறுப்பினர்கள் பற்றி மீடியாக்களில் அதிகம் பேசாதவர் அஜித். பிரைவசி காரணமாக தன் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றி எங்கும் வெளிக்காட்டியதில்லை.
இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை சுப்ரமண்யம் மறைவுக்கு நெகிழ்வாக ட்வீட் செய்திருக்கிறார் நடிகர் சியான். 'சுப்ரமண்யம் அங்கிள் போல அன்பான, இனிமையான மனிதரைப் பார்க்க முடியாது' என்று குறிப்பிட்டு அஜித்துக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் சியான்.
'உல்லாசம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அஜித்குமார் நன்கு வளர்ந்த இளம் ஹீரோ. விக்ரம் அப்போது தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்த சமயம். பிரபல இயக்குநர்கள் ஜே.டி- ஜெர்ரி இயக்கிய அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்- விக்ரம் நட்பு உருவாகியிருக்கிறது. இருவரும் அதிக விபத்துகளைக் கடந்து வந்தவர்கள் என்கிற ரீதியில் இருவருக்குமான நட்பு இறுக்கமாகியிருக்கிறது. சேர்ந்து நடிப்பதற்கு முன்பே அஜித்தின் ஆரம்பகால படங்களுக்கு விக்ரம் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும் நெருக்கத்துக்கு காரணம்.
ஆரம்ப காலகட்டங்களில் இருவரும் விடுமுறை நாட்களை ஒருவர் வீட்டுக்கு மற்றவர் போகும் அளவுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். கூச்ச சுபாவியான அஜித் அவ்வளவு எளிதில் யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டார். ஆனால், விக்ரம் அதற்கு அப்படியே நேர் எதிர். பிடித்துவிட்டால் நட்பைக் கொண்டாடித் தீர்ப்பார். இருவரும் பிஸியாக தங்கள் கேரியரில் வேறொரு கட்டத்துக்குப் போனாலும் நட்பு அப்படியே தொடர்கிறது.
அப்படி நட்பு உருவான காலத்தில் அஜித்தின் குடும்பம்வரை பழகியிருக்கிறார் விக்ரம். அஜித்தின் தந்தையை உரிமையோடு அங்கிள் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்திருக்கிறது. தங்கலான் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், உடனடியாக அஜித்குமாருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் விக்ரம்.
- எஸ்