தமிழ்த் தொலைக்காட்சி உலகில் ஆறாண்டுகளுக்கு முன் அறிமுகமாகி தொடர்ந்து ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்று வரும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.
நடிகர் கமல்ஹாசனின் தொகுப்பாளர் முகத்தைக் காட்டிய இந்த நிகழ்ச்சியை, அவர் இல்லாமல் வேறு யாராவது தொகுத்து வழங்கியிருந்தால் இந்தளவு சக்சஸ் ஆகியிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
கடந்த ஆறு சீசன்களிலும் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் சிலர் இந்த நிகழ்ச்சி மூலம் பரவலான கவனத்தையும் புகழ் வெளிச்சத்தையும் பெற்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
வணிக ரீதியில் நிகழ்ச்சியானது சேனலுக்கு நல்ல வருமானத்தைத் தருகிறது என்பதால் இதில் கலந்து கொள்பவர்களுக்குமே அவர்களின் பிரப்லயம் மற்றும் வேறு சில தகுதிகளை அடிப்படையாக வைத்து ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது. தொகுப்பாளர் அர்ச்சனா, நடிகை ரம்யா பாண்டியன், ஷனம் ஷெட்டி உள்ளிட்ட சிலர் அதிக சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்டது. பிக் பாஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியான போது டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸுக்கு பிக்பாஸ் 4வது சீசனில் வழங்கப்பட்ட ஊதியம் வெறும் எட்டாயிரம்தான் என்றார்கள்.
நாளொன்றுக்குப் பத்தாயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை அது வித்தியாசப்படுமென்கிறார்கள்.
போட்டியாளர்கள் தவிர்த்துப் பார்த்தால், நிகழ்ச்சியில் பிக் பாஸ்க்கு வாய்ஸ் தரும் டப்பிங் கலைஞர் மற்றும் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் சம்பளம் தனி. (நிகழ்ச்சிக்காகப் பின்னணியில் உழைக்கும் பணியாளர்கள் இதில் வரவில்லை)
இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் என சமூக வலைதளங்களில் நாளொரு அப்டேட் வெளியாகி, விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த விவகாரத்துக்குள் போகும் முன், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 முறைப்படி தொடங்கப்பட்டது குறித்துச் சொல்லி விடலாம்.
ஆம், கமல் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ ஷூட் கடந்த வாரம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
கமல்ஹாசனுக்கு அடுத்த சில தினங்களில் சினிமா வேலைகள் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் இருபப்தால்,பி.பா ப்ரோமோ ஷூட்டிங்கை சீக்கிரமே எடுத்து விடலாம் என முடிவெடுத்துப் பண்ணியிருக்கிறார்கள்.
அதேநேரம் பிக் பாஸ் தொடங்குகிற தேதி இன்னும் முடிவாகவில்லை. அநேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கலாமெனத் தெரிகிறது.
சரி, கமலின் சம்பள விவகாரத்துக்குள் செல்வோம்.
போட்டியாளர்களும் சரி, கமலும் சரி வாங்குகிற சம்பளம் அவர்களுக்கும் சேனலுக்கும் மட்டுமே தெரியும் என்பதுதான் யதார்த்தம்.
இருந்தாலும் சில போட்டியாளர்கள் சேனலுடன் போடும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியில் கசிய விடுவதன் மூலமே ’இவருக்கு இவ்வளவு சம்பளமாம்’ என்கிற பேச்சு கிளம்பி, அதுவே தாறுமாறாக டெவலப் ஆகி வலம் வருகிறது.
கமலைப் பொறுத்தவரை படங்களுக்கு கோடிகளில் சம்பளம் வாங்குகிற நடிகர்தான். ரஜினியைப் போலவே இன்றும் அவரது மார்க்கெட் அப்படியேதான் உள்ளது.
கடந்த ஆறாவது பிக் பாஸ் சீசனில் இவரது சம்பளம் நூறு நாட்களுக்கும் சேர்த்து 60 கோடி எனச் சொல்லப்பட்டது.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாங்கிய அதிக சம்பளமும் இதுதான்.
இதனிடையே சென்ற ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மிகப்பெரிய வசூல் காரணமாக இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அவரது சம்பளம் கணிசமாக உயரும் என்பது எதிர்பார்த்ததுதான்.
‘வடக்கே சல்மான்கானெல்லாம் இருநூறு கோடிக்கு மேல் வாங்குகிறார்’ என்கிற செய்திகளையும் நாம் பார்க்கிறோம்.
இந்தப் பின்னணியில் பிக் பாஸ் சீசன் 7க்கான கமலின் சம்பளம் குறித்து தினமொரு தகவல் வெளியானபடி இருக்கிறது.
கமல் 150 கோடி கேட்கிறார்; சேனல் 130 கோடி தரச் சம்மதித்திருக்கிறது என ஒரு சோர்ஸ் சொல்ல, இன்னொரு சோர்ஸோ, ’கமல் எப்போதுமே ஓரளவு நியாயத்துடனேயே ஊதியம் கேட்பார், இந்த சீசனுக்கு அவரது சம்பளமாக 100 கோடி பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனச் சொல்கிறது.
நூறோ அதைத் தாண்டியோ, சம்பள விஷயம் இறுதி செய்யப்பட்டு விட்டது என்பதால்தான் ப்ரொமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த நூறு ப்ளஸ் பணத்துக்குக் கமல் ஷூட்டிங் செல்லும் நாட்கள் எத்தனை தெரியுமா? 12 முதல் 15 நாட்களே
பாருப்பா எனப் பெருமூச்சு விடுகிறீர்களா?
’பல்லு இருக்கிறவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார்கள்’
அடுத்த வாரம் பார்க்கலாம்.