Tamil Cinema : பட்டையைக் கிளப்பின ’பட்டாசு’ படங்களும் வராமல் ஏமாற்றிய படங்களும் !

’நாயகன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’ ன்னு தீபாவளின்னா கமல், கமல்னா தீபாவளின்னு இருந்த காலம் ஒண்ணு இருந்தது. ஆனா.. சில வருஷங்களா.. கமலுக்கும் தீபாவளிக்கும் எந்த சம்பந்தம் இல்லாத மாதிரி ஆகிருச்சு.
tamil cinema
tamil cinematimepass

அன்னையிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் தீபாவளின்னாலே யூத்துங்க குதூகலமா குத்தாட்டம் போட ஆரம்பிச்சுடும். புதுத் டிரெஸுக்கோ, ஸ்வீட்டுக்கோ, நல்லி எலும்புக்கோ இல்ல, தங்களோட ஹீரோக்கள் நடிச்சி வெளியாகிற நியூ ரிலீஸ் மூவிய முதல்நாள் முதல் ஷோ பார்த்துடணும். பேவரைட் ஹீரோ கையைக் காலை ஆட்டி ஸ்டைல் பண்றது, பறந்து வந்து உதைக்கிறது, ஸாங்குல போடுற டான்ஸ் ஸ்டெப்புக்கு விசிலடிச்சி தெறிக்கவிடணும்.

இல்லன்னா தீபாவளி திரிஞ்சுபோன பால் மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாம போயிடும். ஆம்பளை பசங்கதான் அப்படின்னா.. இப்போ அவங்களுக்கு நிகரா பொம்பளை பசங்களும் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்டி இப்போ, இதுக்கு முன்னால வந்த சில ஹீரோக்களோட தீபாவளி ஹிட்ஸ்தான் இதெல்லாம்.

1 . ’தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் படம் இல்லன்னா குளிக்க மாட்டோம், சாப்பிட மாட்டோம், புது டிரஸ் போடமாட்டோம்’னு ரசிகர்கள் அடம்புடிச்சி அழுத காலமெல்லாம் இருந்துச்சி. அப்றம்.. ரஜினி அதிக படங்கள் நடிக்கிறதை குறைச்சிட்டார். ஆனாலும், சம்பளம் மட்டும் ஏறிக்கிட்டுட்டேதான் இருந்துச்சி. பசங்களுக்கு வீட்டுல அப்பா – அம்மா, தாத்தா திங்கறதுக்குத் தீனி வாங்கக் கொடுத்த காசையெல்லாம் ரஜினி படத்துக்குன்னு ஜாமெண்ட்ரி பாக்ஸ்ல சேர்த்து வெச்சி படம் பார்த்த கூட்டம் இன்னமும் இருக்குது.

ரொம்ப வருஷமா சூப்பர் ஸ்டாரோட படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகாம இருந்துச்சி. அப்றம், சமீபத்துல் அண்ணன் தங்கை சென்டிமென்டை பிழியப் பிழிய சாரெடுத்துக் கொடுத்தா படம்தான் ’அண்ணாத்த.’ ஒவ்வொரு தீபாவளிக்கும் வால் பிடிச்ச மாதிரி வரிசையா வராட்டியும் இப்பவாச்சும் வந்து கண்ணுல பாசத்தை ஊத்துச்சேன்னு சந்தோஷப்பட்டாங்க. சரி, இவ்ளோ நாள் கழிச்சி தலைவர் படம் வந்திருக்கு ரசிகருங்க தீபாவளிய கொண்டாடி தீர்த்திருப்பாங்கன்னு பார்த்தா ’அண்ணாத்த’ என்னாத்த..? ங்கிற மாதிரி ஆகிருச்சி.

2 . ஒரு காலத்துல கமல் – ரஜினி படங்கள் ரிலீஸாகி பட்டையக்கிளப்பும். ஒரு பக்கம் கமல் கட்டவுட்டுன்னா, இன்னொரு பக்கம் ரஜினிக்கு பெரிய பெரிய போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்துவாங்க. அதுலயும் தீபாவளி பொங்கல் ரிலீஸ்னா சொல்லவே வேணாம். ஏதோ அவங்க வீட்டுல விஷோசம் மாதிரி குதூகலத்துல குதிப்பாங்க.

அதுலயும் கமலோட ’நாயகன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’ ன்னு தீபாவளின்னா கமல், கமல்னா தீபாவளின்னு இருந்த காலம் ஒண்ணு இருந்தது. ஆனா.. சில வருஷங்களா.. கமலுக்கும் தீபாவளிக்கும் எந்த சம்பந்தம் இல்லாத மாதிரி ஆகிருச்சு. இத்தனை வருஷமா கொண்டாடாத ஒட்டு மொத்த தீபாவளியையும் ஒண்ணா சேர்த்து ’இந்தியன் – 2’ படத்தை கொண்டாடுவோம்னு ’மய்யம்’ உறுப்பினர்கள் மைண்ட்ல மேண்டலின் வாசிக்க, ’இந்தியன் – 2’ இந்த தீபாவளிக்கும் இல்லைன்னு ஆனதும் அப்செட்டுல ’டக்அவுட்’ ஆன ஓப்பனிங் பேட்ஸ்மேன் மாதிரி டல்லாயிட்டாங்க.

’தீபாவளி போனா என்ன அதான் பொங்கல் வருதுல்ல அன்னைக்கு பாத்துக்கலாம்’னு நம்மவர் ரசிகருங்க மனச தேத்திக்கிட்டு, டிக்கெட்டுக்கு காசு தேத்திட்டு இருக்காங்க. ஷங்கரோட டைரக்‌ஷன்னா சும்மாவா டிரைலரே அள்ளுது படம் பிச்சுக்கும்னு வெற்றிவிழா கொண்டாட்டத்துக்கு இப்பவே வெடி வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. எப்டியோ வர்ற பொங்கலுக்காச்சும் எந்த வம்பும் இல்லாம படம் ரிலீஸானா போதும்.

3 . இளைய தளபதியாச்சும் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ன்னு இந்த தீபாவளிக்கு வருவார்னு பார்த்தா அவரும் கொஞ்ச காலம் தீபாவளிய விட்டு விலகியே இருக்காரு. 2017 - ல ‘மெர்சல்’, 2018 - ல ’சர்கார்’, 2019 - ல ’பிகில்’னு வரிசையா வந்துட்டு இருந்திச்சி. தளபதி ரசிகர்களும் ஒவ்வொரு தீபாவளிக்கும் விசிலும் கையுமா தியேட்டரை வலம் வந்தாங்க. சரி.. இப்போ ரிலீசான ’லியோ’ வை கொஞ்சம் தள்ளி இந்த தீபாவளியில வெளியிட்டிருந்தா இன்னும் மஜாவா இருந்திருக்கும்னு ஏங்கித்தான் போனாங்க.

’தீபாவளிக்குன்னு இல்ல என்னைக்கு தளபதி படம் ரிலீஸாகுதோ அன்னைக்குதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல், ஆடி அமாவாசை எல்லாம். விஜய் படம் வருஷத்துக்கு ரெண்டு வரணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நாங்க தியேட்டர்ல வெடிவெடிச்சி கொண்டாடணும். அதுவும் அரசியல்ல வேற தளபதி கால்தடம் பதிக்கப்போறதால இன்னும் நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு ’மாஸ்’ காட்டுடணும்கிறதுதான் எங்க எய்ம், லட்சியம், கடமை’ னு காலரை ஏத்திவிட்டு கெத்து காட்டுறாங்க ரசிகர்கள்.

4 . இளைய தளபதி படம் எப்போ ரிலீஸ் ஆகுதோ அந்த தேதிதான் அவர் ரசிகர்களுக்கு பண்டிகைனா.. ’தல’ ரசிகருங்களுக்கும் அதேதான். தல படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகாத துக்கத்துல ஸ்வீட் கசந்து, பாயாசம் புளிச்சு, பஞ்சு மிட்டாய் துவர்க்கும்ங்கிற ரேஞ்சுலதான் ஃபீல் பண்ணுவாங்க. ’தல’ யோட ’வேதாளம்’ படம் 2015 தீபாவளியில வெளியானதுலேர்ந்து இதுவரைக்கும் தீபாவளிக்கு படம் ரிலீஸாகல. ’தல’ ரசிகருங்க வெண்ணீர்ல விழுந்த பல்லி மாதிரி வேதனைல துடிச்சாலும், படம் வெளியாகிற நாளை தீபாவளியா ’பட்டாஸ்’ வெடிச்சி ஜாலி பண்ற மனநிலைக்கு வந்துட்டாங்க.

இந்த தீபாவளிக்கு கடும் முயற்சியில ’விடாமுயர்ச்சி படம் தியேட்டருக்கு வரும்னு கருப்பு கண்ணாடிய கண்ணுல மாட்டிக்கிட்டு கலக்கலாம்னு ஆசைய அக்குள்ல வெச்சிருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளியும் புஸ்வானமாத்தான் போயிடுச்சு. ஆனாலும், படம் என்ன.. ‘தல’யோட ’விடாமுயற்சி’ பட ஸ்டில்லை பார்த்துக்கிட்டே கொண்டாடுவோம்கிற ரேஞ்சுல சீனாப்போட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க. ’தல’ யோட தளபதிங்க.

5 . இந்த 2023 ஆண்டு தீபாவளிக்கு பெரிய படம்னு வந்து மக்களை மகிழ்ச்சிக் கடல்ல ஆழ்த்தும்னு பார்த்தா பெரிய ஹீரோக்களோட எந்த படமும் வராம, அடுத்தக்கட்ட ஹீரோக்களோட படங்கள்தான் வெளியாகுது. அப்டி வெளியாகிற ஒவ்வொரு படத்தோட டீஸரைப் பார்த்தா நம்மள குந்தவெச்சி குலுங்கி.. குலுங்கி சிரிக்க வெச்சிருவாங்க போலருக்கு.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் ’அயலான்’ னு ஏலியனை வெச்சுக்கிட்டு தமாஷ் பண்ணிக்கிட்டு இருக்க, இன்னொரு சைடுல ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’னு லாரன்ஸும் - எஸ்.ஜே.சூர்யாவும் கிச்சுகிச்சு மூட்டுறாங்க. அடுத்ததா.. ’ஜப்பான்’ னு கார்த்தி உள்ள பூந்து விதவிதமான கெட்டப்புல தங்கப்பல்லைக் கட்டிக்கிட்டு டாலடிக்கிறாரு.

இந்த மூணு படங்களுமே காமெடி ஜானர் படங்களா இருக்கும்னு மண்டைக்குள்ள லைட்டா லைட் எரியுது. நமக்கு இந்த தீபாவளியில இருக்கிற பெரிய சந்தோஷம் என்னென்னா.. தியேட்டர் வாசல்ல ஆர்ப்பாட்டம் இருக்காது, கூச்சல், இருக்காது, பேப்பர் பறக்காது, நெரிசல் இருக்காது. முக்கியமா ஸ்கிரீன்ல பேசுற டயலாக் தெளிவா கேட்கலாம். படத்தை எப்படியும் வீட்டுல சாப்பிட்டுப்போன தீபாவளி பலகாரங்கள் சிரிக்கிற சிரிப்புல ஜீரணமாயிரும்.

- உத்தமபுத்திரன்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com