
இயக்குநரும், வசனகர்த்தாவும், நடிகருமான ஈ.ராமதாஸ் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். ராஜா ராஜாதான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கவுண்டமணி உட்படத் திரையுலகில் பலரின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர் ராமதாஸ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கவுண்டமணி நடிப்பில் வெளியான, 'எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது' என்ற திரைப்படத்தின் விழா மேடையில், கவுண்டமணி குறித்து ஈ.ராமதாஸ் பேசிய காணொளி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அந்த மேடையில் பேசிய ஈ.ராமதாஸ், "கவுண்டமணி அண்ணனைப் பார்க்க அவருடைய வீட்டிற்கு போயிருந்தேன். "வா ராமதாஸ்.. உக்காரு" என்று வரவேற்றார். அவர் பக்கத்தில் நாய் ஒன்று அமர்ந்திருந்தது. "இதுக்கு என்னங்க பேரு?" எனக் கேட்டேன். அதுக்கென்ன பேரு நாய்தான். அதுக்கு ஒரு பேரு வச்சு. அத வேற ஞாபகம் வச்சு. கூப்டுனுக் கெடக்கணுமா?னு கவுண்டமணி சென்னார்" என்று தன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார்.
அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "இவ்ளோ ஜாலியான மனுஷனா இந்த ராமதாஸ் சார்" என்று ஆச்சரியத்தோடு, தங்கள் அஞ்சலிப் பதிவை எழுதி வருகின்றனர்.