Leo : லியோ படத்தில் வரும் Honey Badger விலங்கை கவனித்தீர்களா? - சுவாரஸ்ய பின்னணி !

அதே படத்தில் லியோ தாஸின் தந்தையான ஆன்டனி தாஸ், பார்த்திபனிடம், “இது நீ உருவாக்குன “டீஸ்லேஸ்” சிகரெட், இத நீ “ஹனிபேட்ஜர்” ன்னு தான் சொல்லுவ, ஞாபகம் இருக்கா?” என்று கேட்பார்.
Leo
Leo timepass

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் லியோ படத்தால் கழுதைப் புலி சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது. கழுதைப்புலி குறித்த தேடுதல்களும், அவற்றை குறித்த மீம்ஸ்களும் இணையத்தை கலக்கிவருகிறது.

அதே படத்தில் லியோ தாஸின் தந்தையான ஆன்டனி தாஸ், பார்த்திபனிடம், “இது நீ உருவாக்குன “டீஸ்லேஸ்” சிகரெட், இத நீ “ஹனிபேட்ஜர்”ன்னு தான் சொல்லுவ, ஞாபகம் இருக்கா?” என்று கேட்பார். இதையடுத்து, தற்போது அந்த ஹனிபேட்ஜர் (HoneyBadger) என்றால் என்ன என்பது குறித்துதான் விஜய்யின் ரசிகர் பட்டாளத்தினர் இணையத்தில் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.

ஆம், அது என்ன ஹனிபேட்ஜர் (HoneyBadger) எனத் தேடினால், அது ஓர் வித்தியாசமான, வீரமான விலங்கு என்று தெரிய வந்தது. எந்த விலங்குக்கும் அஞ்சாமல், எதிர்த்துப் போராடி வெல்லும் ஓர் விலங்கினம். இவ்விலங்கின் குணம் லியோ படத்தில் முன்பகுதியில் வரும் பார்த்திபனின் கதாபாத்திரத்தோடும் ஒன்றி வருகிறது. பிற்பகுதியில் வரும் லியோ தாஸின் கதாபாத்திர குணத்தோடும் அருமையாக ஒன்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனிபேஜர் எனப்படும் தேன் வளைக்கரடி (honey badger) என்றதும் நாம் ஏதே மிகப்பெரிய சைசில் கரடியாக எதிர்பார்ப்போம். ஆனால் அதுதான் இல்லை. அது  நாம் சாதாரணமாக பார்க்கும் கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது பார்ப்பதற்கு மர நாயைப் போன்ற தோற்றத்தில் காணப்படும் ஓர் சிறிய சைஸ் விலங்குதான். ஆனால் உருவம்தான் சிறிதே தவிர, மூர்க்கத்தனமோ மிகப் பெரிது.

தன் எதிரே இருப்பது காட்டின் ராஜா சிங்கம், கடும் விஷமுள்ள பாம்பு, கொடும்புலி, யானை என்றெல்லாம் பார்க்காது, எதிர்த்து நின்றால் மட்டுமல்ல, எதிரில் நின்றாலே எதிரி என்பது போல, தன் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், மிக ஆக்ரோஷமாக போரிட்டு, எதிரியை வீழ்த்தி விடும் விலங்கு. இதேபோல, அவ்வளவு எளிதில் தனது வளையை விட்டு வெளியில் வராது. வெளியில் வந்தால் எதிர்ப்பது எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் “இரண்டில் ஒன்று” பார்க்காமல் விடாது என்பதே இதன் சிறப்பு.

மேலும், இதற்கு இதுதான் உணவு என்றெல்லாம் தனியாக எதுவும் கிடையாது. இதற்கு எது கிடைத்தாலும் உணவுதான். இந்த உயிரினம் குறித்து வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாது. இதனை விலங்குலகின் “ஸோம்பி” என ஒரு வரியில் கூறலாம். இது சண்டையிட்டு, எதிரியை கொன்றபின், சுமார் அரைமணி நேரம் அங்கேயே தூங்கி, ஓய்வெடுத்துவிட்டு, பின்பு ஆற, அமர தன்னுடைய இரையை சுவைத்துண்ணும் இயல்புடையது.

இதேபோலத்தான், படத்தின் முன்பகுதியில் தானுண்டு, தன் குடும்பம் உண்டு என இருக்கும் “பார்த்திபன்” விஜய், கொள்ளைக் கும்பலால் தன் மகள் மற்றும் கடையில் பணிபுரியும் பெண் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து என்றவுடன், சிலிர்த்தெழுந்து, அவர்களை கொன்று குவிப்பார். கதையின் பின்பகுதியில் வரும் “லியோதாஸ்” விஜய் தன் தொழிலுக்கு இடையூறு செய்யும் நண்பனையே கொல்வதில் தொடங்கி, தன் தந்தையே தன் உடன்பிறந்த இரட்டைச் சகோதரியான எலிசாவை நரபலி கொடுக்க முயலும்போது, தன் தந்தை, சித்தப்பா, நண்பர்கள் என அனைவரையும் கொன்று குவித்து விடத் துடிக்கும் குணம் போன்றவை ஹனிபேட்ஜரின் குணத்தோடு அப்படியே ஒத்துப் போகிறது.

இந்த ஹனிபேட்ஜர் எனப்படும் தேன்வளைக் கரடிகள் தென்மேற்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. மிக அரிதாக காணப்படும் விலங்கான இது இதுவரை, கர்நாடக மாநிலம், கனகபுரா தாலுகாவின் தொட்டாலஹல்லி என்ற கிராமத்தில் கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்டு, மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டு, அடுத்த சில தினங்களிலேயே உயிரிழந்துவிட்டது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இவ்விலங்கு காணப்பட்டதாக புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

சுமார் 24 ஆண்டுகள் வரை வாழும் இந்த தேன்வலைக்கரடிகளின் இனப்பெருக்க காலம் 6 மாதங்களே ஆகும். இது ஒரே நேரத்தில் 2 குட்டிகளை மட்டுமே ஈனும். இது தன் குட்டிகளுக்கு வேட்டையாடுதல், தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதற்காக 2 ஆண்டுகள் வரை தன்னுடனேயே வைத்துக் கொள்ளும். அதன்பிறகே குட்டிகள் தனியாக பிரிந்து சென்று வாழத் தொடங்கும்.

தேன்வளைக்கரடிகள் குறித்து, வல்லநாடு வனத்துறை ரேஞ் ஆபிசர் பிருந்தா நம்மிடம் தெரிவிக்கையில், “ஹனிபேட்ஜர் என்பது மிகவும் அரிதான, ஆபத்தான விலங்கினம். இதை நான் ஒரு முறை தெலுங்கானாவில் நேரில் பார்த்திருக்கிறேன். இங்கும் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கலாம். ஆனால் இது அவ்வளவு எளிதில் தனது வளையை விட்டு வெளியே வராது. அப்படியே வெளியே வந்தாலும், தான் எதிர்கொள்ளும் ஆபத்து எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அஞ்சாமல், போராடி வெல்லும் குணம் கொண்டது. இதன் தாக்குதல் முறையே வித்தியாசமானது. இது எதிரி விலங்கின் முக்கிய உயிர்நிலைகளை குறி வைத்து தாக்கும். இதில் அந்த எதிரி நிலைகுலைந்து இறந்துவிடும் அல்லது தோற்று ஓடி விடும். பெரும்பாலான நேரங்களில் ஹனிபேட்ஜர்தான் வெற்றியாளர்” எனத் தெரிவித்தார்.

- மு. ராஜதிவ்யா.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com