ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்துள்ளது. அதில், சிறந்த நடிகர் விருது மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த வில்லன் விருது அதே படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்படவுள்ளது.
இவர்களுடம், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்படவுள்ளது.
சிறந்த படம் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.
மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயரிக்கும் நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றே இந்த விருது அறிவுப்பு வந்தது விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமைந்தது.