பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் இன்று மாலை திருமணம் நடக்கவுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இத்திருமணம் நடக்கவுள்ளது. நேற்றே (ஜனவரி 23) திருமண சடங்குகள் தொடங்கிவிட்டன. நேற்று இரவு நடந்த இசை நிகழ்ச்சிக்கு, பாலிவுட் நடிகர் கிருஷ்ணா ஷெராப் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணிக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்கு, ஜாக்கி ஷெராப், சல்மான் கான், அக்ஷய் குமார், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்று சுனில் ஷெட்டி அறிவித்திருந்தார். நேற்றே வந்த விருந்தினர்கள் திருமண வீட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருமணத்தில் தென்னிந்திய முறைப்படி வாழை இலையில் சாப்பாடு வழங்கப்படும் என்று சுனில் ஷெட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பையிலும் திருமண பார்ட்டி ஒன்றுக்கு சுனில் ஷெட்டி ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் பாலிவுட் மற்றும் விளையாட்டுத்துறையில் இருக்கும் 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காதல் திருமணத்திற்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.