விஜய் படத்திற்கு 'லியோ' என்று பெயர் வைத்ததில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என லியோ காஃபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநகரம், விக்ரம் போன்ற வெற்றி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தற்போது லியோ படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'லியோ' இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும். இந்த படம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும் படம் ஆகும். ஆனால் தற்போது இந்த படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் குறித்து சர்ச்சை ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பெயரிலேயே பல வருடங்களாக இயங்கி வரும் லியோ காஃபி நிறுவனம் அப்பெயருக்கு காப்புரிமை எங்களிடம் தான் உள்ளது என தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படத்திற்கு டைட்டில் வைக்கும் முன் எங்களிடம் எந்த வித அனுமதியும் வாங்கவில்லை என்று லியோ காஃபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்த லியோ ஃபில்டர் காஃபி 'லியோ' என்ற பெயரில் 1910லேயே சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கிளைகள் சென்னையின் முக்கிய இடங்களான மயிலாப்பூர், அசோக்நகர் பகுதிகளிலும் உள்ளது.
மேலும் படத்திற்கு இந்த செய்தி இலவச ப்ரமோஷனாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிலர் லியோ என்ற காஃபி இருப்பது இப்போது தான் தெரிகிறது, விஜய் அண்ணா படம் என்பதால் பிரச்சனை செய்கிறீர்களா?, அப்படியானால் லியோ என்று பெயர் வைத்த அனைவரும் உங்களிடம் பர்மிஷன் கேட்க வேண்டுமா என்று கேளிக்கையான கமெண்ட்ஸ்களும் செய்துள்ளனர்.