'ரஜினியை கட்டிவெச்சு அடிச்சேன்' - மண்டபத்ரம் சக்திவேல் பேட்டி

ஸ்பாட்ல 'பாளையங்கோட்டை ஜெயில்லதான் படிச்சதே'னு வடிவேலு சார் டயலாக் சொல்றப்போ சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாம சிரமப்பட்டேன். அவர்கூட நடிக்கும் போது நிறைய சொல்லிக்கொடுப்பார்.
மண்டபத்ரம் சக்திவேல்
மண்டபத்ரம் சக்திவேல்டைம்பாஸ்

வைகைப்புயல் வடிவேலுவுடன் நடித்து பிரபலமானவர்கள்ல முக்கியமானவர் சக்திவேல். மண்ட பத்ரம் சக்திவேல்னு இவருக்கு இன்னொரு பேரும் இருக்கு. ஒரு பெரிய இடைவெளிக்கு அப்பறம் இப்போ ஹரியின் 'யானை'யில் நடித்தவரிடம் பேசினேன்.

"கோயம்புத்தூர்ல இருக்கிற வெள்ளக்கிணறுதான் என்னோட சொந்த ஊர். நான் ஸ்கூல் படிக்கும் போது தினமும் வாலிபால் மேட்ச் வேடிக்கை பார்க்கப் போவேன். ஆரம்பத்துல அங்கே பந்து பொறுக்கிப்போட ஆரம்பிச்சேன்.

அப்படியே அவங்ககூட பழகி நானும் வாலிபால் விளையாட கத்துக்கிட்டேன். ஸ்கூல், காலேஜ்ல விளையாடி ஒரு கட்டத்துல ஸ்டேட் பிளேயர் ஆனேன். என்னுடைய விளையாட்டுத் திறமையைப் பார்த்த இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் எனக்கு இன்ஸ்பெக்டரா வேலை கொடுத்தாங்க.

நான் படிச்ச கோவை கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் சத்யராஜ் சாரும் படிச்சார். அந்த காலேஜ்ல படிச்சதால எனக்கும் அவரை மாதிரியே நடிகராகனும்னு ஆசை வந்துச்சு.

சென்னை வந்து இன்கம்டாக்ஸ்ல இன்ஸ்பெக்டரா வேலை பார்த்துக்கிட்டே சினிமா சான்ஸ் தேடிக்கிட்டு இருந்தேன். அப்படி கிடைச்ச முதல் சினிமா வாய்ப்புதான் 'கிராமத்து மின்னல்' அதுல நடிச்சேன்னு சொல்ல முடியாது. சும்மா ரெண்டு சீன்ல வந்துபோவேன்.

மண்டபத்ரம் சக்திவேல்
'இது வாலிப வயசு' - Retro வடிவேலு | Photostory

அடுத்து 'சத்ரியன்'லயும் நடிச்சேன். தொடர்ந்து அடியாளா நடிக்கத்தான் சான்ஸ் வந்துச்சு. நான் சண்டை போடாத தமிழ் சினிமா ஹீரோக்களே கிடையாது. ஃபைட் சீனா, சக்திவேல கூப்பிடுங்கனு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி 150 படத்துக்கு மேல நடிச்சேன். அப்பறம்தான் எனக்கு மெயின் வில்லன் கேரக்டரே கிடைக்க ஆரம்பிச்சது.

'கட்டபொம்மன்' படத்துல சரத்குமார் சார்கூட வில்லனா நடிக்கும் போது என்னை அவர் தூக்குல தொங்க விடுறது மாதிரி ஒரு சீன். என் கழுத்துல டம்மி சுருக்கு போட்டு சரத்குமார் சார் தூக்குறார். 30 ஆடி உயரத்துல கயிறு கழுத்துல நிஜமாவே மாட்டிக்கிச்சு. நான் பாதி உசுரோட தொங்குறேன்.

''செத்தவன் மாதிரியே நடிக்கிறான்யா இந்த சக்திவேலு"னு டைரக்டர் பாராட்டுறார். அங்க என் கண்ணு உள்ளே போய்க்கிட்டு இருக்கு. இதை எப்படியோ கவனிச்ச சரத்குமார் சார் கயிற உடனே இறக்கி என்னை காப்பாத்தினார். அன்னைக்கு அவர் காப்பாத்தலைன்னா நான் இன்னைக்கு உயிரோட இல்ல. இப்படி கஷ்டப்பட்டுத்தான் நான் நடிகனானேன்

அப்படி கஷ்டப்பட்டதுக்குப் பலனா 'தளபதி' படத்துல ரஜினி சார் கூட நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அந்தப்படத்துல ரஜினி சார தலைகீழா கட்டி அடிச்சேன்னு அவரோட ரசிகர்கள் என் மேல செம கோவத்துல இருந்தாங்க "எங்க தலைவரையே கட்டி வெச்சு அடிக்கிறயா உனக்கு அவ்ளோ தில்லா?"னு திட்டினாங்க.

அவங்களுக்குப் பயந்து தியேட்டர்ல அந்தப் படத்தை நான் பாக்கவே இல்ல, படத்துல ரஜினி சார் என் கையை வெட்டுற சீன் பெருசா பேசப்பட்டுச்சு, அடுத்து 'மன்னன்'லயும் அவர்கூட சேர்ந்து நடிச்சேன். இப்படி சண்டை, அடிதடின்னு போய்க்கிட்டிருந்த என் சினிமா வாழ்க்கை சுந்தர்.சி சார் மூலமா மாறுச்சு

நான் ரெகுலரா ஜிம்முக்குப்போற ஆள். அப்படி ஒருநாள் போகும்போது சுந்தர்.சி சார் அங்கே வந்தார் 'நான் 'ரெண்டு'னு ஒரு படம் பண்றேன் அதுல நீங்க நடிக்கிறீங்களா?'னு கேட்டார். நானே வாய்ப்பு இல்லாம சும்மாதான் சார் இருக்கேன் பண்றேன்"னு சொன்னேன்.

வடிவேல் கூட உங்களுக்கு காம்பினேஷன்னு சொன்னார். நான் குஷியாகிட்டேன். அந்த அநியாயத்தைக் கண்டா பொங்குற காமெடிலதான் வடிவேல் சார் கூட முதல் முறையா நடிச்சேன். அடுத்து 'வாத்தியார்'ல அவரை துவைச்சு கொடியில காயப்போடுற காமெடி, 'வெடிகுண்டு முருகேசன்'ல பாக்கெட்ல கைவிடுற காமெடின்னு அவர்கூட நிறைய பண்ணினேன்.

மண்டபத்ரம் சக்திவேல்
'வடிவேலு சார் கூட நடிச்சா சிரிப்ப அடக்க முடியாது' - நடிகை பிரியங்கா பேட்டி

குறிப்பா 'முருகா' படத்துல மண்ட பத்திரம் காமெடில நடிச்சதுக்கு அப்பறம்தான் நான் ரொம்ப ஃபேமஸானேன். உளவுத்துறை டிஐஜியா அதுல வருவேன். ஸ்பாட்ல 'பாளையங்கோட்டை ஜெயில்லதான் படிச்சதே'னு வடிவேலு சார் டயலாக் சொல்றப்போ சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாம சிரமப்பட்டேன்.

அவர்கூட நடிக்கும் போது நிறைய சொல்லிக்கொடுப்பார். அவர் ஒரு நடிப்பு யுனிவர்சிட்டி. அவர் கூட நடிக்காம இருந்திருந்தா நான் இவ்ளோ தூரம் வெளியே தெரிஞ்சிருக்க மாட்டேன். தினமும் டிவில வடிவேல் சார் காமெடில நானும் வர்றதால மக்கள் இன்னும் என்னை மறக்காம இருக்காங்க

உங்களை காமெடியை வெச்சு வர்ற மீம்ஸ்களை பார்க்கிறதுண்டா ?

" 'மண்டபத்திரம்' காமெடியை வெச்சு நிறைய மீம்ஸ் வரும். அதெல்லாம் பார்த்து ரசிப்பேன். டிராபிக் போலீஸ் ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு இந்த காமெடியை பயன்படுத்துறாங்க. அது ரொம்ப நல்ல விஷயம்.

உடம்புல மத்த இடத்துல அடிபட்டா தப்பிச்சிடலாம் ஆனா மண்டையில அடிபட்டா கஷ்டம். இது காமெடி டயலாக்கா இருந்தாலும் இதுல ஒரு ஆழமான கருத்து இருக்கு. அதனால எல்லாரும் கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க மண்ட பத்திரம்.

முன்ன மாதிரி சினிமா வாய்ப்பு இப்போ அவ்வளவா வர்றதில்ல லாக்டவுனுக்கு அப்பறம் இன்னும் மோசமாகிடுச்சு. அதனால கோயம்புத்தூர்ல என்னோட நிலத்துல விவசாயம் பார்த்துட்டு இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு ஹரி சார் யானையில நடிக்க கூப்பிட்டார். இதுக்கு முன்னால அவரோட 'சிங்கம்','அருள்','சேவல்' படங்கள்லயும் நடிச்சிருக்கேன்.

இப்போ உள்ள புது இயக்குனர்கள் படங்கள்ல நடிக்க எனக்கு ஆசை. வடிவேல் சாரும் இப்போ திரும்ப வந்துட்டார். அவருடைய படங்கள்லயும் நடிக்க ஆவலா இருக்கேன். ரெண்டு படம் கமிட்டாகி இப்போ பண்ணிக்கிட்டு இருக்கேன். மறுபடியும் ஒரு ரவுண்டு வருவேன். நம்பிக்கை இருக்கு" என்கிறார் சக்திவேல்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com