'நான் பூஜை போட்டாலே, அந்தப் படம் ஹிட்டு' - மங்களநாத குருக்கள் பேட்டி

என் அசிஸ்டன்ட்ஸ் கூட்டத்தை பார்த்துட்டு சந்தானம் சார் ஆச்சரியப்பட்டார். "நானும் உங்களுக்கு அசிஸ்டன்ட்டா வந்துடவா"னு கலாய்ச்சார்.
மங்களநாத குருக்கள்
மங்களநாத குருக்கள்டைம்பாஸ்
Published on

புதுப்பட பூஜையா கூப்பிடுங்க மங்களநாத குருக்களைனு சொல்ற அளவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். சினிமாக்கள், சீரியல்களிலும் திருமணக் காட்சிகளில் மங்களநாதனைப் பார்க்கலாம்.

"திண்டிவனம் பக்கத்துல மேல் சேவூர்னு ஒரு சின்ன கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். அங்கிருந்து நான் வந்த இடம்தான் மைலாப்பூர். மைலாப்பூர்ல வலம்புரி விநாயகர் கோவில் ரொம்ப ஃபேமஸ். அங்கேதான் நான் பூஜை பண்ணிட்டு இருந்தேன். அப்போ தினமும் ஒரு சாஸ்திரிகள் கோவிலுக்கு வருவார். அவர் சினிமா சம்பந்தப்பட்டவர்னு தெரிஞ்சிக்கிட்டேன். அவர்கிட்ட எனக்கும் ஏதாவது சினிமா சான்ஸ் இருந்தா சொல்லுங்கோனு சொல்லி வெச்சேன்.

அப்போ நான் பங்க் ஹேர் ஸ்டைல் விட்டிருந்தேன். சினிமாவுக்காக அதை குடுமியா மாத்தி கட் பண்ணிக்கிட்டேன். "ரொம்ப ஆர்வமா இருக்கியே"ன்னு பாராட்டின சாஸ்திரிகள் முதல் முறையா ஏ.வி.எம் ஸ்டுடியோல 'நம்பிக்கை'னு ஒரு சீரியலுக்கு பூஜை பண்ண வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

கொஞ்சநாள் கழிச்சு பக்திசரண்னு ஒருத்தர் போன் பண்ணி "சூர்யா சார் படத்துக்கு பூஜை பண்ண வரமுடியுமா?"னு கேட்டார். "இது அக்ரஹாரத்துல நடக்கிற கதை அதனால வரும்போது 50 மாமிகளையும் ஷூட்டிங் கூட்டிட்டு வாங்க"னு சொன்னார். அதுதான் சூர்யா சார் நடிச்ச 'ஸ்ரீ' படம். அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் 20 வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். அஜித், விஜய்னு பெரிய பெரிய ஸ்டார்ஸ் படங்களுக்கு எல்லாம் பூஜை போட்டாச்சு.

மொத்தமா 500 படங்களுக்கு மேல பூஜை போட்டிருக்கேன். 400 படத்துக்கு மேல நடிக்கவும் செஞ்சிருக்கேன். நான் பூஜை போட்டா அந்தப் படம் பெரிய ஹிட்டாகும்னு ஒரு நம்பிக்கை.

எனக்கு 10 அசிஸ்டன்ட்ஸ் வேற இருக்காங்க. ஏன்னா சிலநேரம் பல படத்தோட பூஜைகள் ஒரே நாள்ல வரும். நான் போகமுடியாத இடங்களுக்கு அவங்களை அனுப்பி வைப்பேன். என் அசிஸ்டன்ட்ஸ் கூட்டத்தை பார்த்துட்டு சந்தானம் சார் ஆச்சரியப்பட்டார். "நானும் உங்களுக்கு அசிஸ்டன்ட்டா வந்துடவா"னு கலாய்ச்சார்.

சினிமா தவிர வேறு எதுக்கெல்லாம் உங்களை பூஜை பண்ண தேடி வருவாங்க?

நிறைய லவ்வர்ஸ் அவங்க காதல் ஜெயிக்க பூஜை பண்ணச்சொல்லி வருவாங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ? மைலாப்பூர்ல நிறைய லவ் மேரேஜ் நான் பண்ணி வெச்சதுதான். சட்டப்படி அவங்க கல்யாணத்துக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்தெல்லாம் போட்டிருக்கேன்.

இப்படி எவ்வளவோ பேருக்கு நான் நல்லது பண்ணிருக்கேன். ஆனா சிலர் கெட்டது மட்டும்தான் எனக்கு பண்றாங்க, போன வருஷம் லாக்-டவுன்ல யாரோ ஒரு புண்ணியவான் நான் இறந்துட்டதா சோசியல் மீடியால ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

அதை பார்த்துட்டு எல்லாரும் என்ன ஆச்சுன்னு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு பெரிய மன உளைச்சலாகிடுச்சு.. உடனே போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தேன். ஆனா இதுவரை அது யார்னு கண்டுபிடிக்கவே இல்ல. இதுல காமெடி என்னன்னா ஒரு டிவி சேனல் "மங்களத்துக்கே மங்களம் பாடிட்டாங்க"ன்னு நியூஸ் போட்டாங்க பாருங்கோ!

சினிமாவில் மறக்க முடியாத சம்பவம்?

"விஜய் சார் நடிச்ச 'பைரவா' படத்துக்கு பூஜை போட போயிருந்தேன். நான் காலம்பர எந்திரிச்சு போனதால அசதில செட்லயே தூங்கிட்டேன். திடீர்னு என் காதுல யாரோ குச்சி வெச்சு குடையிற மாதிரி இருந்தது, எந்திரிச்சு பார்த்தா விஜய் சார் என் காதுல குச்சி விட்டு விளையாடிக்கிட்டு இருந்தார்.

அதே மாதிரி 'வரலாறு' ஷூட்டிங்ல பைக் சாவிய விரல்ல மாட்டிக்கிட்டு மந்திரம் சொல்லிட்டு இருந்தேன். அதை கவனிச்ச அசின் மேடம் அஜித் சார்கிட்ட சொல்ல "அவரு ஹைடெக் ஐயர் அப்படித்தான் இருப்பார்"னு அஜித் சார் சொல்லிருக்கார்."

"சரி எனக்கு நாழியாயிடுத்து விநாயகர் கோவில் பூஜைக்கு போகணும்" என்ற குருக்கள் தன்னுடைய பல்சர் பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com