"எம்.ஜி.ஆர் தந்த தங்கச் சங்கிலி!"
- பாண்டியராஜனின் நினைவலைகள்!
"நூறுமுறை யோசி...ஆனால் முடிவு ஒருமுறை தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். எனவே முடிவு எடுத்துட்டா பின்வாங்கக் கூடாது!"- இது நடிகர் கம் இயக்குநர் பாண்டியராஜன் சொன்னது. அதற்கான வாழ்க்கை அனுபவத்தை அவர் வார்த்தைகளில் கேட்போமா..?
"என்னுடைய குருநாதர்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்ந்து, மூணுமாசம் கழிச்சுதான் நான் வேலைக்கு சேர்ந்ததே என் அம்மாவுக்குத் தெரியும். லபோதிபோனு அம்மா கத்துனாங்க. 'நீ கண்டெக்டரா சேர்ந்து குடும்பத்தைக் காப்பாத்துவேனு பார்த்தா இப்படி காணாமப் போறதுக்காகவே சினிமால சேர்ந்துட்டியேடா!'னு ஒப்பாரி வெச்சிட்டாங்க.
வீட்டுல சொல்லாம கொள்ளாம பாக்கியராஜ் சாரோட 'தூறல் நின்னு போச்சு' படப்பிடப்பில அசிஸ்டெண்டா வேலை பார்த்துட்டு இருந்தேன். கோபிச்செட்டிப்பாளையத்துல ஷூட்டிங் நடந்தப்போ அம்மா ஒரு தபால் எனக்கு அனுப்பி இருந்தாங்க. பிரிச்சுப் பார்த்தா கண்டெக்டர் வேலைக்கு ஆர்டர் வந்திருந்த லெட்டர்.
ஏற்கனவே, குடும்பத்துல பாதிப்பேரு போக்குவரத்துத்துறையில தான் இருந்தாங்க. அதனால நான் கண்டிப்பா சேர்ந்துடுவேன் என்கிற நம்பிக்கையில அம்மா அனுப்பி வெச்சிருந்தாங்க.
டைரக்டர் அந்த லெட்டரைப் பார்த்துட்டார். 'நீ என்ன பாண்டியா முடிவெடுத்திருக்கே?' என்று கேட்டார். திருதிருனு முழிச்சிட்டு நின்னேன். அவர் அந்தக் கேள்வியைக் கேட்டப்போ உதவி இயக்குநரா என் கழுத்துல விசில் தொங்கிட்டு இருந்துச்சு. பாடலுக்கான ஷூட்டிங் அன்று. விசிலைப் பார்த்தவர் டக்குனு, 'பாண்டியா...அங்கே போயும் பஸ்ல விசில் அடிக்கத்தான் போறே...பேசாம என்கூடவே இருந்துரு!' என்றார்.3
அதன்பிறகு பேய்த்தனமா பல படங்கள் வேலை பார்த்துட்டு என் 'கன்னிராசி' படத்துக்காக அவரிடமிருந்து விலகி, கதை டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயம், 'முந்தானை முடிச்சு' பட ஸ்டில் பத்திரிகையில வந்துட்டு இருந்துச்சு. அதைப் பார்த்த எங்க அம்மா, ' ஏண்டா அந்த புண்ணியவான் கடவுள் மாதிரி மாசாமாசம் கைநிறைய சம்பளம் கொடுத்து பிள்ளை மாதிரி வச்சிருந்தாரே, எதுக்குடா வேலைய விட்டு வந்தே?'னு இப்பவும் திட்டுனாங்க.
"யம்மோவ்...நான் டைரக்டர் ஆகப்போறேன்!" என்று சொன்னதும்,
"என்னது டைரக்டர் ஆகப் போறியா....இது உனக்குத் தேவையா?" என்று கேட்டாங்க. காரணம் என்னுடைய தோற்றம். ஒரு டைரக்டருக்குரிய லுக் என்னிடம் இல்லாததுதான் காரணம். ஆனால் நான் தைரியமாக களத்துல குதிச்சேன்.
அதேபோல 'ஆண்பாவம்' படத்துக்காக சில நடிகர்கள்கிட்ட கால்ஷீட் கேட்டேன். கிடைக்கல. அதுக்கப்புறம் என் உதவி இயக்குநர்கள்கிட்ட, 'நான் தான் ஹீரோ!' என்றேன். மௌனமாக ஒருமாதிரி பார்த்தார்கள். நான் முடிவை மாற்றிக்கலையே..!
ஆனால், என் குருநாதர் ஒரு தீர்க்கதரிஷி... அதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்றேன்...
'இன்று போய் நாளை வா' படப்பிடிப்பில் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணுடன் ஒருவர் பேசிக்கொள்வதாக குட்டியான சீன். அந்த சீன்ல நடிக்கறவருக்கு வசனம் நான் தான் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், டேக்ல அவர் வசனத்தை தப்பா பேசி சொதப்பிட்டார். டைரக்டர் அவரை திட்டிட்டார். 'உங்க அசிஸ்டெண்ட் தாங்க அப்படி பேசச்சொன்னார்!'னு என்னை மாட்டிவிட்டுட்டார். இயக்குநருக்கு என்மேல டவுட். 'பாண்டியா...நீ எப்படி பேசிச் சொல்லிக் கொடுத்தே?' என்று என்னை நடித்துக் காட்டச் சொன்னார்.
டைரக்டர் எதிர்பார்த்தபடி நடித்துக் காட்டினேன். டக்குனு என் கையில் இருந்த க்ளாப் போர்டைப் பிடுங்கினார். 'போய் நில்லு பாண்டியா...நீயே இந்த சீன்ல நடிச்சிரு!' என்றார். ஒரே டேக்கில் நடித்தும் முடிச்சேன்.
டைரக்டர் கார்ல கிளம்பி ஆபிஸுக்கு வந்துட்டார். நான் ஆபிஸுக்கு வந்ததும் என்னைத் தனியாக்கூப்பிட்டார்.
"நீ நடிக்கிறதுக்குத்தான் சினிமாவுக்கு வந்தியா?" என்று கேட்டார்.
நான் நாடகத்தில் நடித்த விஷயத்தை சொன்னேன். 'பின்னே ஏன் இதை என்னிடம் முன்னாடியே சொல்லலை?' என்று கேட்டார்.
"தெய்வாதீனமா உங்ககிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்துட்டேன். நடிப்புல ஆர்வம்னு தெரிஞ்சா விரட்டிருவீங்கனு பயந்துட்டேன் சார்!" என்றேன்.3
உடனே பக்கத்துல நின்ன அவரோட மேனேஜரோட பாக்கெட்டில் கைவிட்டார்.
பதினோரு ரூபாய் இருந்துச்சு. "சீக்கிரமே நீ பெரிய நடிகராகப் போறே...என்னுடைய முதல் அட்வான்ஸ்" என்று வாழ்த்தினார். அவர் என்னிடம் இருந்த நடிகனை ஒரு நிமிடம்கூட வராத காட்சியில நடித்த என் நடிப்பை வெச்சே சரியா கணிச்சிட்டார்.
அதனால நம்ம இலக்கை...நம்ம முடிவை என்றுமே மாத்திக்கக் கூடாது. நடப்பது நிச்சயம் நன்றாகவே நடக்கும். 'ஆண்பாவம்' படம் நூறுநாள் ஓடியதும் இதை டைரக்டரிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லி படத்தை அவரும் பார்த்து ராமாவரம் தோட்ட வீட்டுக்கு வர வைத்து தங்கச் சங்கிலி பரிசளித்தது தனிக்கதை!"
(தூசு தட்டுவோம்..!)