
கோவை மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகரும் பிரபல மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 54. கோவை குணாக்கு ஜூலி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கோவை மாவட்டத்தை பூர்வீக கொண்டு தனது தனித்துவமான மிமிக்ரி கலை மூலம் தமிழக முழுவதும் பிரபலமான நகைச்சுவை நடிகர் குணா "கோவை குணா" என்று அன்பாக அழைக்கப்பட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் கோவை குணா. அதன் பிறகு அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தார். நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த இவர் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நகைச்சுவை கலைஞராக திகழ்ந்தார். சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்திருக்கிறார். தொடர்ந்து உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை தனது மிமிக்கிரி பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
பல நாட்கள் கழித்து கடந்த மாதம் விகடன் டைம் பாஸ்க்கு கோவை குணா பிரத்தியேக பேட்டி அளித்திருந்தார். " 25 வருடங்களுக்கு மேலாக மேடையில் நான் நடத்திய நிகழ்ச்சிகள் எல்லாம் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அந்த ஒரு நிமிடத்தில் கிடைத்தன. "ஒரு சிறியக் கற்பனை" என்ற டெம்ப்ளேட்டில் என்னைப் பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து ரசித்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
சத்யராஜ், கவுண்டமணி, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்துள்ளார். எம் ஆர் ராதாவின் சித்தாள் காமெடி கோவை குணாவின் பிரபலமான ஒன்று.
இந்நிலையில் சமீப காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா மாரடைப்பால் காலமானார். இவரது இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறுகிறது. மிமிக்ரி கலைஞர் கோவை குணா மறைவையொட்டி பல்வேறு சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.