வணக்கம்... எல்லோருக்கும் Childhood crush என்றொரு தேவதையின் மீதான ஈர்ப்பு இருந்திருக்கும். வளர்ந்த பிறகு அந்த தேவதை, பேரிளம்பெண்ணாய் முதுமையின் சுருக்கங்கள் விழுந்து பெருங்கிழவியாய் மாறி நிற்பதைக் காண்பதைப்போல ஒரு பெருங்கொடுமை வேறில்லை. அப்படி என்னுடைய டவுசர் காலத்து தேவதை அந்தப் பெண்.
அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை சித்ரஹாரும், சனிக்கிழமை மாலைகளில் இந்திப் படங்களும் ஒளிபரப்புவார்கள்.
மொழி புரிகிறதோ இல்லையோ அந்தப் படங்கள் மீது ஏனோ இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு உண்டு. ஏரியாவில் டிவி இருக்கும் ஏதோ ஒரு வீட்டுக்குள் அவர்கள் படம் பார்க்கும்போது நுழைந்து, ஓரமாய் பூனையைப் போல் உட்கார்ந்து பார்த்துவிட்டு வருவது வழக்கம். அதில் தான் அந்த நடிகையை முதன்முதலில் பார்த்தேன். ப்ளாக் அண்ட் ஒயிட்டானாலும் சரி, ஈஸ்ட்மேன் கலரானாலும் சரி அந்த நடிகை நடித்த படங்கள் அந்நாட்களில் எனக்கு பெருவிருப்பமாய் இருந்தன. 'ஃபேவரைட் நடிகை'.!
அழுத்தம் திருத்தமான முகம், தெக்கத்திய சாயல், கண்களில் வசீகரம், எல்லாவற்றுக்கும் மேலாக குறும்பு கொப்பளிக்கும் நடிப்பு என அப்போது பாலிவுட்டின் கனவுக்கன்னி அவர்! அதன்பிறகு திருமணம் முடித்து 2 குழந்தைகள் பெற்று வயதாகி, ஃபீல்டில் இருந்து ஒதுங்கி அரசியலில் நுழைந்த வரலாறு அவருக்கு உண்டு. அது இப்போது தேவை இல்லை.
சரி...விஷயத்துக்கு வருகிறேன். நான் பத்திரிகை உலகுக்கு வந்த புதிது அது. சென்னை வந்திருந்த அந்த முன்னாள் பாலிவுட்டின் கனவுக்கன்னியை பத்திரிகைக்காக பேட்டி எடுக்க அந்த பிரபலமான ஓட்டலுக்கு சென்றிருந்தேன். குட்டிப்பையனாய் ஒன்றாம் வகுப்பு பாடம் எடுத்த ஸ்வர்ணலதா டீச்சருக்கு அடுத்து அப்போது என்னுடைய க்ரெஷ்ஷாக இருந்த பெண்மணி அவர் என்பதால் பார்க்க ஆர்வமாக இருந்ததை சக மேன்ஷன் மேட் நண்பனிடம் காலையில் கிளம்பும் போது யதேச்சையாக சொன்னேன். அவன் கொடுத்த ரியாக்ஷன் கொஞ்சம் ஓவராக இருந்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அந்த கனத்த அமைதி எப்போதும் எனக்கு அலர்ஜிதான். மருந்துக்குக்கூட ஒரு ஆள் அங்கு இல்லை. புலித்தோல் போன்ற தரைவிரிப்பில் அழுந்த நடந்து, மெல்ல மெல்ல ஒவ்வொரு அறையாய் கடந்து 306-க்கு முன்புபோய் நின்றேன். கதவு பாதி திறந்திருந்தது. மெதுவாக கதவைத் தட்டினேன். உள்ளே போனில் யாரிடமோ இந்தியில் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் அந்த நடிகை. குரல் மட்டும் எனக்கு சன்னமாகக் கேட்டது.
மனதுக்குள் அந்த மேனேஜர் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர வெடுக்கென உள்ளே நுழைந்தேன்.
அங்கு நான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன். அவரும் என்னைப் பார்த்து ஹைடெசிபலில் சினிமாவில் வருவது போல, 'வீல்' என அலறினார். எனக்குப் புரிந்து விட்டது. அழையா விருந்தாளி நாம். அந்த ஸ்வீட் ரூமில் பெரிய மெத்தையில் படு ரிலாக்ஸாக புடவையைக் கடாசிவிட்டு, மேலாடை மற்றும் பாவாடையோடு மெத்தையில் படுத்தபடி போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். இங்கு யார் வரப் போகிறார்கள் என அவர் ரிலாக்ஸாக இருந்திருக்கிறார் பாவம். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஷாக். அலறி எழுந்து புடவையைச் சுற்றிக் கொண்டு இந்தியில் படபடவென ஏதேதோ பேசினார். நானாக அப்போது மொழிபெயர்த்துக் கொண்டது இதுதான்: ''ஹலோ யாருங்க நீங்க.? யார் உங்களை உள்ளே வரச் சொன்னா..? கதவைத் தட்டிட்டு வரத் தெரியாது..?'' என்று பொரிந்து தள்ளியவர், ஒரு நிமிடத்தில் நிதானத்துக்கு வந்தார்.
நான் ரிப்போர்ட்டர் என்று தன்னிலை விளக்கம் கொடுத்ததும், என்னை வெளியே இருந்த லௌஞ்ச் ரிசப்ஷனில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மேனேஜரை அழைத்தார். மேனேஜருக்கு டோஸ் விழுந்திருக்க வேண்டும். அந்தப்பெண்மணி வேகமாக என்னிடம் வந்து, ''சார்...நான் இங்கேதான் வெய்ட் பண்ணச் சொன்னேன். நீங்க பொசுக்குனு அவங்க ரூமுக்குள்ள போயிட்டீங்க. பாவம் அவங்க பயந்துட்டாங்க. நான் உங்களுக்கு ரூம் நம்பரை ஏன் சொன்னேன்னு தெரியலை!'' என்று ஏகத்துக்கும் புலம்பினார். எனக்கு கலவையான உணர்வு. அதிர்ச்சியாகவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது... லேசாக அவமானமாகவும் இருந்தது.
சிறிது நேரம் கழித்து, சேலை கட்டி வெட்கத்தோடு அந்த நடிகை வந்தார். வயதானாலும் நீலாம்பரி போன்ற ஒரு மிடுக்கு. என்னைப் பார்த்ததும் கலகலவென குலுங்கி சிரித்து,
''ஸாரி...படபடனு பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க. நீங்க ரிப்போர்ட்டர்னு தெரியாது. சொல்லி இருந்தீங்கன்னா கோபப்பட்டிருக்க மாட்டேன்.! திடீர்னு ஒருத்தர் நான் படுத்திருக்கப்போ வந்துவுடன் பயந்துட்டேன்!'' என்றார். ''நானும் பயந்துட்டேன் மேடம்!'' என்றதும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
''ஹலோ நான் என்ன பேய் மாதிரி பயமுறுத்துற அளவுக்கா இருக்கேன்? '' என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அதன்பிறகு பேட்டி துவங்கி முடியும் வரை பத்துமுறையாவது சிரித்தபடி 'ஸாரி' கேட்டார். பதிலுக்கு, 'நான் தான் ஸாரி கேட்கணும்' என நானும் அசடு வழிந்தேன்.
பேட்டி முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியாக மாறியிருந்தார். கிளம்பும்போதும் அதே சிரிப்போடு கைகொடுத்து வழியனுப்பி வைத்தார்.
மேன்ஷனுக்கு வந்ததும் இந்த சம்பவத்தை ரூம் மேட்டிடம் சொன்னேன்.
''பாஸ்... எனக்கு அல்ரெடி காது குத்திட்டாங்க. போயி யார்கிட்டயாவது சொல்லுங்க!'' என்றான்.
(சம்பவங்கள் Loading..!)