தொடர்: நான் நிருபன்... சொல்ல மறந்த சம்பவங்கள்! - 1

வாராவாரம் பிரபலங்களை பேட்டி கண்ட அனுபவத்தை பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். பேட்டிக்குப் பின்னான விஷயங்கள் இதுவரை நான் எங்கும் பொதுவெளியில் ஷேர் செஞ்சதில்லை.
நான் நிருபன்
நான் நிருபன்டைம்பாஸ்

என் பெயர் என்னனு சொல்லணுமா என்ன..? இப்போதைக்கு சுமார் மூஞ்சி குமார்னோ அல்லது அஞ்சாத நிருபர் வீரபத்திரன்னோ எதுவா வேணும்னாலும் வெச்சிக்கங்க. பத்திரிகை உலகத்துல ஆகச்சிறந்த நிருபர்னு சொல்ல முடியாட்டியும் தமிழ் சினிமால ஆரம்பிச்சு அரசியல், விளையாட்டு, ஹியூமன் ஸ்டோரீஸ்னு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ ஒருவகையில கண்டெண்ட் கொடுத்து பிஸியான நிருபனா வாழ்ந்துட்டு இருக்கேன்.

காதோரம் நரை விழுந்த ஆளுங்கிறதால ரிட்டையர்டு கேஸுனு கேஸூவலா டீல் பண்ணிடாதீங்க மக்கா. வயசுங்கிறது நம்பர்ஸ் கணக்குதான். நாமள்லாம் என்றும் 16 தான் மக்கா. வாராவாரம் பிரபலங்களை பேட்டி கண்ட அனுபவத்தை உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.

பேட்டிக்குப் பின்னான சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை நான் எங்கும் பொதுவெளியில் ஷேர் செஞ்சதில்லை. அதைவிட முக்கியமான விஷயம் இதில் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் பெயரை மறைச்சே நான் சொல்றேன். ஏன்னா சில சம்பவங்கள் எசகுபிசகானது. சரி இந்தவாரம் ஒரு நடிகையை பேட்டி கண்ட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்குறேன். இது கதையல்ல நிஜம்கிறதை மட்டும் சொல்லிட்டு ஓவர் டூ ஈச்சம்பாக்கம்..!

நான் நிருபன்
சினிமாவில் நடிக்கிறார் விக்ரம் தம்பி - நடிகர் அரவிந்த் ஜான் பேட்டி

பத்து வருடங்களுக்கு முன் அந்த முன்னாள் ஹீரோயினை பேட்டி எடுக்க ஈசிஆரில் ஈச்சம்பாக்கத்திலிருக்கும் ஒரு பிரைவேட் வில்லாவுக்குப் போயிருந்தேன். 2000களில் பலரின் கனவுக்கன்னி அவர்.

எப்பவுமே ஒரு பாட்டு காலையில மனசுல எனக்குள்ள வந்துச்சுன்னா அன்னிக்குப்பூரா அதையே ஹம் பண்ணிட்டு இருப்பேன். அப்படி ஒரு வியாதி எனக்கு. அப்படித்தான் அந்த ஹீரோயினைப் பார்க்கப் போற ஜோர்ல அந்தப் பாட்டைப் பாடிட்டே இருந்தேன்.

அந்த நடிகை இப்போ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாலும் சீரியல் பக்கம் அவங்களுக்கான ஸ்பெஷல் மரியாதையோட அழைச்சிட்டு வந்திருந்தாங்க. ஒருவகையில அது அவங்க செகண்ட் இன்னிங்ஸ். சுமாரா போன அந்த சீரியல்ல அவங்க சூப்பராவே நடிச்சிருந்தாங்க.

முன்னணி நடிகையா இருந்தாலும் செம மீடியா ஃப்ரெண்ட்லினு கேள்விப்பட்டிருக்கேன். அன்னிக்கு அதனால ஓவர் குதூகலத்தோட போயிருந்தேன். எனக்கும் நடிகைகளுக்கும் எப்பவும் ஏழம்பொருத்தம். ஆனால், இவர் விஷயத்தில் அது பொய்யானது.

காலையில் 10 மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட். பொதுவா நடிகைகள் பேட்டினா காலையில 7 மணிக்கே எண்ணெய் தேய்ச்சு குளிச்சு 8 மணிக்கெல்லாம் அரக்கப்பரக்க ரெடி ஆகி வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். ஏன் என்பதற்கு குட்டியா ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு.

முன்னொரு காலத்துல பெண்கள் பத்திரிகையில வேலை பார்த்தப்போ ஒரு பழம்பெரும் நடிகையைப் பேட்டி காணப் போயிருந்தேன். 11.15-க்கு மணிக்கு வரச் சொல்லியிருந்தாங்க. 'அதென்ன 11.15-11.20னு ஒரு குந்தாங்கூறான டைமிங்னு செம எரிச்சலா இருந்துச்சு. நான் 11.45-க்கு அந்தம்மாவோட அட்ரெஸ் கண்டுபிடிச்சு போயிட்டேன்.

நான் நிருபன்
'மைக்கில் ஜாக்சன் மாதிரி ஆடுவேன்' - டான்ஸர் ரமேஷ் பேட்டி

ஃபுல் மேக்கப்ல பொம்மை மாதிரி அந்தம்மா தழையத் தழைய பட்டுப்புடவைலாம் கட்டி கண்கள் சிவக்க செம கோபத்தோட உட்கார்ந்திருந்தாங்க. ரிட்டையர்டு ஆனாலும், செல்வச்செழிப்பா கழுத்துல காதுலனு பாம்புபோல தடிமனான தங்க நகைகள் போட்டிருந்தாங்க.

மூன்று ஸ்டேட் ப்ளாக் அண்ட் ஒயிட் சூப்பர் ஸ்டார்களோடு ஜோடி போட்டு நடிச்ச நடிகைங்கிறதால நல்லாவே செட்டில் ஆகியிருந்ததை அந்த வசதியான பங்களாவே உணர்த்தியது.

''என்னை யார்னு நினைச்சே தம்பி... இதான் நீ பேட்டி எடுக்க வர்ற லட்சணமா..? நாங்கள்லாம் அந்தக் காலத்துல அவ்ளோ பங்சுவாலிட்டி கீப் அப் பண்ணுவோம். சிவாஜி கணேசனே எங்கிட்ட மன்னிப்பு கேட்பார். அவ்ளோ டைமிங் பார்ப்பேன். நீ என் நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டே. ஒழுங்கா ஸாரி கேளு!'னு எள்ளு வயலே முகத்துல வெடிச்சது. நான் நிஜமாலுமே பயந்துட்டேன்.

கிட்டத்தட்ட அரைமணிநேரமா நான் லேட்டா போனதுக்காகவே என்னை திட்டித் தீர்த்துட்டுதான் பேட்டி கொடுக்கவே ஆரம்பிச்சாங்க. அன்னிக்கு வாங்குன திட்டுனாலேயே பொதுவா நடிகைகள் பேட்டிக்கு அரக்கப்பரக்க ஓடிருவேன்.

ஹீரோயின் வீட்டுக்கு முன்னாடி போயி டீக்கடைல டீ குடிச்சு டைம்பாஸ் பண்ணிட்டு, கரெக்ட்டா அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்குறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி போன்ல கூப்பிட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு விருட்டுனு உள்ளே போறதை வழக்கமா வெச்சிருந்தேன். சரி நம்ம ஸ்லிம் நடிகை பேட்டி அனுபவத்துக்கு வர்றேன்.

நான் நிருபன்
'ஸ்டாலின் மாதிரி பேசுவோம்; சித் ஶ்ரீராம் மாதிரி பாடுவோம்' - மிமிக்கிரி கலைஞர்கள் பேட்டி

ஷார்ப்பா பத்து மணி ஆனதும் அந்த நடிகையை பேட்டிக்கு ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்த தனியார் தொலைக்காட்சியின் கிரியேட்டிவ் ஹெட்டான பெண்மணிக்கு போனைப் போட்டேன்.

''ஹாய் தம்பி... மேடம் இன்னும் அரைமணிநேரத்துல ரெடி ஆகிருவாங்க. எங்கே இருக்கீங்க?''

''மேம்... நான் நீங்க சொன்ன லொக்கேஷன்லதான் இருக்கேன்..!'

''ஓ..வந்துட்டீங்களா..? அப்படின்னா செக்யூரிட்டிகிட்ட என் பேரைச் சொல்லி உள்ளே வாங்க. ரிசப்ஷன்ல உட்கார்ந்திருந்தங்க தம்பி!''

''ஓ.கே மேடம்!''

இந்த மேடம் எங்கே இருக்காங்கனு தெரியாது. ஆனா, தூரமாய் கேட்கும் கடல் அலையின் சன்னமான சத்தம் காதில் விழுந்தது. வீட்டினுள் ஏதோ வட இந்திய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டு அந்த சூழலை ரம்மியமாக்கியிருந்தது. போகன்வில்லா பூக்கள் சிதறிக்கிடக்கும், கொரியன் புல் வளர்ந்த அந்த அழகான பங்களாவின் முகப்பிலிருந்த குட்டியான ரிஷப்ஷன் ரூமில் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.

இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பர்களோட டெபொனெய்ர் போன்ற கில்மா புத்தகங்களும் டீப்பாய்ல வைக்கப்பட்டிருந்தது எனக்கே ஆச்சர்யம். செக்யூரிட்டி என்னை உட்கார வெச்சுட்டு வெளியே கேட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழிச்சு, நைட்டியில் வந்து நின்னாங்க ஒரு அம்மா, இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கோமேனு நெற்றியை சுருக்குன எனக்கு பயங்கர ஆச்சர்யம். அது அந்த முன்னாள் தேவதை தான். இதென்னடா கோலம்?னு நான் அப்டியே ஷாக் அகிட்டேன். அப்புறமாத்தான் தெரியுது. மேக்கப் இல்லாம இருந்திருக்காங்க அந்த நடிகை.

நான் நிருபன்
'Johnநிதி, விஜய் reigns, வைகை Taker, தல Rock' - இது தமிழ் சினிமா வெர்ஷன்

''ஹாய்...நீங்கதான் பேட்டி எடுக்க வந்தவரா..?'' -அழகாவே தமிழ்ல பேசுனாங்க. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வீட்டுக்குள் அழைத்தார். உள்ளே போனால் வீட்டின் ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. அப்புறமாத்தான் புரிந்தது அது ஷூட்டிங்கிற்காகவே கட்டிய வீடு என்று.

''என் வீடுதான். இதை ஷூட்டிங்குக்காக வாடகைக்குக் கொடுக்குறேன். இன்னிக்கு என் சீரியல் ஷூட்டிங்கே இங்கே நடக்குது! பக்கத்து தெருவுலதான் என் வீடு இருக்கு. காலையில வாக்கிங் வர்றப்போ வீட்டுல இருந்து நடந்தே வந்துட்டேன். ஏன்னா இன்னிக்கு நைட்டிலதான் ஷூட். கதைப்படி நான் தூங்கி எந்திரிச்சு கோலம்போடுற மாதிரி சீன்!''னு சொன்னதும் தான் எனக்கு மூச்சே வந்துச்சு.

ஒரு முன்னாள் கனவுக்கன்னி நைட்டியில் தூங்கு மூஞ்சியாய் மேக்கப் இல்லாமல் பார்ப்பதெல்லாம் வரமா சாபமா தெரியவில்லை.

காலையில் எழுந்து கோலம்போடும் சீனை மதியம் 2 மணிக்கு மேலே தான் எடுத்தார்கள். அதுவரை அந்த ஷூட்டிங் வீட்டில் பெட்ரூமில் அந்த நடிகை கட்டிலில் தலையணையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து பேட்டி கொடுக்க, நான் கட்டிலின் இன்னொரு ஓரத்தில் தலையணையை மடியில் வைத்தபடி பேட்டி எடுத்தேன். சீரியலில் ஆரம்பித்து அரசியல் வரை மனம் திறந்து பேசினார்.

'ஒரு பிரதர் மாதிரி ஷேர் செய்றேன்!' என்று சொல்லியபடி பல சம்பவங்களைச் சொன்னார். 'ஒரேயொரு காதல் இருந்து அது பிரேக்-அப் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் என் கணவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!' என்றார்.

அந்த நடிகையின் கணவர் வந்ததும் அறிமுகப்படுத்தி வைத்தார். நன்கு சமைப்பார் என்றும் 'உங்களுக்காக ஒரு டிஷ் செய்யச் சொல்றேன்!' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். மீன் குழம்பும் மீன் ஃப்ரையும் லஞ்ச் அவருடன் சாப்பிட்டேன்.

நான் நிருபன்
சினிமா பன்ச் டயலாக்குகள Google Translator பேசுன இப்டிதான்!

பேட்டியின் போது ஒரு கட்டத்தில் ஒளிவுமறைவின்றி தன்னுடைய பெர்ஷனல் பக்கங்களையும், ஆஃப் தி ரெக்கார்டு விஷயங்களையும் ஷேர் செய்தார்.

''உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?'' என கேட்டு சாய்ஸாக அவருடன் அதிகப் படங்களில் நடித்த நான்கு பேரை மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இதில் அந்த சீனியர் நடிகரையும் சேர்த்து 5 பேர். அந்த சீனியர் நடிகருக்கு இவர் மீது கிரஷ் என்றெல்லாம் முன்பு மீடியாவில் கிசுகிசு அடிபட்டது. அதனால் அவரைப் பற்றியும் கேட்டேன். 'கிசுகிசுல்லாம் அந்த சீனியர் நாயகனின் கைங்கர்யம்!' என்று என் பேட்டியில் சிரித்தபடியே அந்த நாயகரை கிண்டலடித்தபடி சொன்னார்.

நான்கு ஹீரோக்களின் பெயரைச் சொன்னதும் ''உவ்வேக்'' என்றார். ''அவங்கள்லாம் எனக்கு பிடிக்காது..!''

"என் ?'' என்று கேட்டதும், ''குட் டச் பேட் டச்லாம் பேச வேண்டி வருமே...!'' என அதிர அதிரச் சிரித்தார். ''பேட் டச் பண்றவங்களைப் பிடிக்காது சார்!'' என்றார். தூக்கி வாரிப்போட்டது. பிறகு அவர் சமாளித்தவாறு, ''ஜோக்கா சொன்னேன். இதை எழுத வேணாம்... ஆனா, எனக்கு எங்கூட நடிச்சவங்கள்ல ஒருத்தரைத் தவிர யாரையும் புடிக்காது! '' என்று சொன்னபடி, தன் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார். அடப்பாவிகளா என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் நிருபன்
'இது அரசியல் டி.ஆர்.. லட்சிய டி.ஆர்'

``அந்த கேள்விக்கான பதில் என்ன போட்டுக்க மேம்?'' - என்று கேட்டேன். கொஞ்சமும் யோசிக்காமல் டக்கென தற்போது மார்க்கெட்டில் இல்லாத அவருடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த ஒருவரின் பெயரைச் சொல்லி ''ஆத்மார்த்தமான நண்பர்...குட் டச் உள்ள மனிதர்'' என்றார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் பேசிய அத்தனை விஷயங்களையும் நாங்கள் அமர்ந்திருந்த கட்டிலின் மற்றொரு முனையில் தலையணை வைத்து படுத்தபடி முகத்தில் சிரிப்புடன் குழந்தையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தார் அவரின் கணவர்.

(தொடரும்..)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com