'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 6

கங்கை அமரன் இப்பாடல் குறித்து கூறும்போது, “இதை எழுதும்போது கவிஞர் கண்ணதாசன் முதலில், ‘செந்தாழம்பூவில் உட்காரும் தென்றல்’ என்றுதான் எழுதினார். அப்போது அருகிலிருந்த நான், “கவிஞரே…
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில்டைம்பாஸ்
Published on

நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி ஒரு கேள்வியை கேட்பதுண்டு. ‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த காலகட்டம் எது?’ என்று கேட்பேன். அதற்கு அனைவரும் பால்ய காலம், கல்லூரிக்காலம், காதல் காலம்… என்று வெவ்வேறு காலங்களைக் குறிப்பிடுவர். ஆனால் இன்று வரையிலும் ஒருவர் கூட, “தற்போது நான் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டம்” என்று சொன்னதே இல்லை. ஏன் ஒருவர் கூட தற்போதைய வாழ்க்கையை கூறவில்லை என்பது ஒரு தனிக் கட்டுரைக்குரிய விஷயம்.

இதேக் கேள்வியை ஒரு நாள் என் சின்ன தம்பி முரளியிடம் கேட்டேன். முரளி சிறிதும் யோசிக்காமல், “நான் குன்னூர்ல இருந்த ஒரு வருஷ காலம்…” என்றான். வங்கிப்பணியில் இருக்கும் அவன், ஓராண்டு காலம் குன்னூரில் பணிபுரிந்திருக்கிறான்.

“டேய்… நான் ஊரக் கேக்கலடா… வாழ்க்கைல ஒரு குறிப்பிட்ட பீரியட்…” என்றேன்.

“அதைத்தான் சொல்றேன். குன்னூர்ல இருந்தப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.”

“ஏன்?”

“ஏன்னா… பொதுவா மலைப்பகுதி வாழ்க்கைல ஒரு பரபரப்பே இருக்காது.  இங்க யாரும் வேகமா நடந்து நீ பாக்கமுடியாது. எல்லாமே ஒரு நிதானத்துல இருக்கும். காலைல நிதானமா எந்திரிச்சு, நிதானமா கிளம்பி… அது ஒரு தனி லைஃப். நீ குன்னூர்ல இருந்து பாத்தாதான் அதோட அருமை தெரியும். இன்னொரு ஆச்சர்யமான விஷயம் கேளு… போலீஸ் கிரைம் ரெக்கார்ட்ஸ எடுத்துப் பார்த்தா, நீலகிரி மாவட்டம்தான் தமிழ்நாட்டுல குற்றங்கள் குறைவா நடக்கிற மாவட்டம். ஏன்னா மலைப்பகுதி லைஃப்ல கோபம், டென்ஷன்ல்லாம் பெருசா வராது. நான் குன்னூர்ல இருந்தப்ப எவ்வளவு நெருக்கடிலயும் பெருசா கோபம்  வராது. மனசு ஃபுல்லா அமைதி… அமைதி… அமைதி”

“ஏன்?” 

“நிச்சயமா அதுக்கு குளிர் ஒரு காரணம். அப்புறம் பாக்கிற திசையெல்லாம் தெரியற பசுமை. இந்த பசுமை… குளிர்… மழை… எல்லாம் சேந்துதான் அந்த அமைதியான மனநிலையை உருவாக்குதுன்னு நினைக்கிறேன். அமெரிக்கன் போலீஸ் ஒரு ரிசர்ச்ல, வெயில் காலத்துலதான் அமெரிக்காவுல நிறைய குற்றங்கள் நடக்கிறதாவும், குறிப்பா வெயில் அதிகமா இருக்கிற நண்பகல் நேரத்துல குற்றம் ரொம்ப அதிகமா நடக்கிறதாவும் அவங்க டேட்டாஸ வச்சு கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால… மலைப்பகுதில மனசு அமைதியா இருக்கிறதால, நேச்சுரலா கோபமும் குறையும். கோபம் குறையறப்ப குற்றங்களும் குறையும்…” என்றான். 

“அப்ப… ஹில்ஸ்டேசன்ல மாமியார்-மருமகள் சண்டைல்லாம் கூட கம்மியாதான் இருக்குமா?” என்று நான் குறும்பாக கேட்டவுடன் முரளி கொஞ்சம் கூட யோசிக்காமல், “அது எப்படி? அவங்கள அண்டார்டிகாவுல கொண்டு போய் விட்டாலும் அடிச்சுக்குவாங்க…” என்றவுடன் நான் சத்தமாக சிரித்தேன்.

அவன் சொன்னது குறித்து நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். நான் மலைப்பிரதேசத்தில் வசித்ததில்லை என்றாலும், எனது பிரம்மச்சாரி காலத்திலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி வரை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது, நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் மலைப்பகுதிகளுக்குச் சென்று வருகிறேன். 

எனது நண்பர்கள் ராமச்சந்திரன், சிவக்குமார், அசோக்குடன்  மலைப் பகுதிகளுக்கு சென்று வந்த நாட்கள் எல்லாம், அட் எ டைமில் மூன்று காதலிகளுடன் கேரளா சென்று வந்தது போல் அப்படி ஒரு இனிமையான நாட்கள். மேகமலை மணலாறு டேமுக்கு எதிரே கெஸ்ட் ஹவுஸ் மாடியில் நாங்கள் சிரித்து களித்த கணங்களும், இடுக்கி அணைக்கட்டின் அடிவாரப் பகுதியிலிருந்து, அவ்வளவு பரந்து விரிந்த ஆற்று நீரைப் பார்த்ததும், வயநாட்டில் ஒரு மலைமுனை திருப்பத்தில் தனித்திருந்த கள்ளுக்கடையிலிருந்தபடி பள்ளத்தாக்கில் ஒரு அலையாய் இறங்கிய பனிப்புகையைப் பார்த்து சிலிர்த்ததும், மூணாறில் ஸ்வெட்டர் இல்லாமல் சிறிது தூரம் நடந்துவிட்டு, பின்னர் திடீர் குளிரில் உடம்பு வெடவெடக்க ஹோட்டலுக்கு ஓடி வந்த கணங்களும், இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒரு மழைமாத காதல் காலம் போல் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.

ஊட்டிக்குச் செல்லும்போது, மேட்டுப்பாளையத்தில் ஊட்டி பஸ் பிடித்து ஏறும்போது கூட பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் முக்கால் மணி நேரம் பயணித்து, கல்லாறு பார்க்கில் டீக்காக இறங்கி, மலைப்பிரதேச  மென்குளிரை அனுபவிக்கும்போது சட்டென்று மனம் அமைதியாகிவிடும். மனதுக்குள் இத்தனை நிமிடங்கள்… இத்தனை மணித்துளிகள்… இத்தனை ஆண்டுகள் இருந்த அத்தனை பரபரப்பும் ஓய்ந்து, மனத்திற்குள் மிகத்தெளிவாக ஒரு அமைதியை உணரமுடியும். கொஞ்சம் முயன்றால், அந்த அமைதியைக் கையில் எடுத்து அருகில் இருப்பவர்களுக்கு காட்டலாம் என்பது போல், அந்த அமைதியில் அப்படி ஒரு துல்லியம். 

சூடான டீயுடன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, உடலில்  குளிர் காற்று ஊடுருவ… பள்ளத்தாக்கின் பசுமையையும், பெயர் தெரியாத பறவைகளின் கீச்சொலிகளையும் கேட்கும்போது மனத்தில் ஏற்படும் பரிசுத்தமான அமைதியை வேறெங்கும் நான் உணர்ந்ததில்லை. 

இன்னும் புரியும்படி சொல்வதென்றால் பொல்லாதவன், வடசென்னை, மெட்ராஸ், புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களின் கதைகள், நீலகிரி மாவட்டத்தில் நடப்பது போல் கற்பனை செய்து பாருங்கள். கொஞ்சமாவது ஒட்டுகிறதா? அந்தக் கதைகளுக்கு அந்தப் பிரதேசம் எவ்வளவு அன்னியமாக இருக்கிறது.

எனவே மலைப்பயணம் என்பது, எப்போதும் அமைதியின் பயணம். மகிழ்ச்சியின் பயணம்… நிதானத்தின் பயணம். இது போன்ற நம் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களுக்கும் மிக மிகப் பொருத்தமான இசைப்பாடல்களை வழங்குவதற்கென்றே கடவுள் ஒருவரை படைத்திருக்கிறார். அவர் பெயர் இளையராஜா. 

1978-ல் வெளிவந்த இயக்குனர் மகேந்திரனின், “முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…” பாடலைப் போல, மலைப்பாதை பயணத்திற்கேற்ற அமைதியான, மிக இனிமையான இசைப்பாடல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

‘செந்தாழம் பூவில்’ பாடல் “ம்…ம்..ம்…” என்று ஒரு மலைப்பிரதேச நிதானம் போன்ற அமைதியான ஹம்மிங்குடன் துவங்குகிறது. ஹம்மிங்கிற்கு பிறகு வரும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை, மலையைக் காற்றுத் தழுவுவது போன்ற உணர்வைத் தர… பின்னர் இளையராஜா நம்மை அலேக்காக தூக்கி, சரத்பாபு ஓட்டும் அந்த ஜீப்பிற்குள் நம்மையும் ஏற்றிவிடுகிறார். 

 இளையராஜா, கண்ணதாசன், ஜேசுதாஸ், கேமிராமேன் பாலுமகேந்திரா, இயக்குனர் மகேந்திரன்… என்ற ஐந்து மாபெரும் கலைஞர்களும் இணைந்து நமக்களித்த அற்புதமான விருந்துதான் ‘செந்தாழம் பூவில்’ பாடல். அப்பாடலில் ஒலித்த ஜேசுதாஸின் குரலும், மாறி மாறி உயிரை உலுக்கும் புல்லாங்குழலும் வயலினும், லேசாக முகத்தையும், மூக்கையும் சுருக்கியபடி நடிகை ஷோபா விதம் விதமாக காட்டும் க்ளோஸ்அப் முகபாவங்களும், மலைப் பிரதேசக் காட்சிகளும் சேர்ந்து இப்பாடலை தமிழர்களின் ‘டாப் 100 பாடல்களுள்’ ஒன்றாக ஆக்கியிருக்கிறது. 

இப்பாடலை எழுதும்போது கண்ணதாசனின் அருகில் இருந்த கங்கை அமரன் இப்பாடல் குறித்து கூறும்போது, “இதை எழுதும்போது கவிஞர் கண்ணதாசன் முதலில், ‘செந்தாழம்பூவில் உட்காரும் தென்றல்’ என்றுதான் எழுதினார். அப்போது அருகிலிருந்த நான், “கவிஞரே… உட்காரும் தென்றல்’ என்பதற்கு பதிலாக ‘வந்தாடும் தென்றல்” என்று வந்தால் நன்றாக இருக்குமே” என்று கூற… கவிஞர் கொஞ்சமும் ஈகோ பார்க்காமல், ‘அருமையா இருக்குப்பா…”  என்று சொல்லி அந்த வரியை மாற்றிவிட்டார்…” என்று சொல்லியிருக்கிறார். 

இவ்வளவு அற்புதமான இந்தப் பாடல், நடிகர் கமல்ஹாசன் இல்லாவிட்டால் திரைக்கே வந்திருக்காது. வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும், அதற்கேற்ப தமிழ் சினிமாவின் போக்குகள் மாறவேண்டும் என்பதில் தணியாத தாகம் கொண்ட கமல் 70-களின் இறுதியில் மகேந்திரன், பாரதிராஜா, ருத்ரய்யா, பாலுமகேந்திரா போன்ற பல இயக்குனர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

அதன் அடிப்படையில் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்” படம் எடுப்பதற்கு நடிகர் கமல் பல வகையிலும் உதவி புரிந்தார். படம் முழுவதும் எடுக்கப்பட்டு, ‘செந்தாழம் பூவில்” பாட்டிற்கான லீட் காட்சி மட்டும் இன்னும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் படத்தை ரஷ் பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார், “அய்யோ… என் தலைல மண்ண அள்ளிப் போட்டுட்டியே… இப்படி கொறஞ்ச வசனத்தோட மெதுவா எடுத்து வச்சிருக்கியே… இந்தப் படம் ஓடவே ஓடாது…” என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 

இந்தச் சூழ்நிலையில் ‘செந்தாழம் பூவில்’ பாடலுக்கான லீட் காட்சியை கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அப்பாடல் திரைப்படத்தில் இடம் பெற முடியாது. இதை வேணு செட்டியாரிடம் மகேந்திரன் சொன்னபோது, “அதெல்லாம் எடுக்கவேண்டாம்… ஏற்கனவே நிறைய செலவாயிடுச்சு.” என்றார்.

“அந்த லீட் ஸீன எடுக்கலன்னா அந்தப் பாட்டு படத்துல சம்பந்தமில்லாம இருக்கும்”

“அப்பன்னா நான் அந்தப் பாட்டையே தூக்கிடுறேன்…” என்றவுடன் மகேந்திரன் அதிர்ந்துவிட்டார். 

அந்தப் பாடல் இல்லாவிட்டால் சரத்பாபு-ஷோபா சந்திப்பு இல்லை. அந்தக் காதல் இல்லை. படமே பாழாகிவிடும் என்று மகேந்திரன் எவ்வளவோ கெஞ்சினார். ஆனால் இந்தப் படத்துக்காக இனிமேல் நான் செலவு பண்ணமாட்டேன் என்று வேணு மறுத்துவிட்டார். 

இந்த விஷயத்தை டைரக்டர் மகேந்திரன் கமலிடம் சொல்ல… கமல் மகேந்திரனுக்காக தயாரிப்பாளர் வேணு செட்டியாரை நேரில் சந்தித்துப் பேசினார்.  அப்போதும் மறுக்க… கமல், “இந்தக் காட்சியை எடுப்பதற்கான ஃபிலிம், கேமிரா செலவையெல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு ஓகேவா?” என்று கேட்க… தயாரிப்பாளர் மௌனமாக இருந்தார். தொடர்ந்து கமல், “மகேந்திரன் முதல் முறையா டைரக்ட் பண்றாரு. அவருடைய திறமையில எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்கள் சம்மதிக்காவிட்டால் அவரோட எதிர்காலம் மட்டுமல்ல. இந்தப் படத்தோட சம்பந்தப்பட்ட பலரோட எதிர்காலமும் ஸ்பாயிலாயிடும்” என்று நீண்ட நேரம் பேசினார்.

நீண்ட யோசனைக்கு பிறகு வேணு செட்டியார், “எல்லாம் உன் செலவுதானே… எனக்கென்ன? எப்படியோ போங்க…” என்று சம்மதித்தார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம். சத்யா ஸ்டுடியோவில் ஜீப்பை நிற்க வைத்து அந்த லீட் காட்சி எடுக்கப்பட்டது. அதற்கான செலவுகள் மற்றும் பணிகளுக்கான பொறுப்பையும் கமலே ஏற்றுக்கொள்ள… இரண்டு மணி நேரத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. கமலின் இந்த முயற்சியாலேயே இன்று நம்மால் ‘செந்தாழம் பூவில்’ பாடலைப் பார்த்து ரசிக்க முடிகிறது. இத்தனைக்கும் கமல் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. அந்தப் படத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை. இருப்பினும் சினிமா என்ற கலையின் மீதிருந்த கமலின் தீவிரமான ஈடுபாடே, அந்தப் பாடல் வெளிவரக் காரணமாக இருந்தது.

இன்று நாம் ரசிக்கும் கலையின் உன்னதங்கள் பலவும், மகேந்திரன் போன்ற உண்மையான கலைஞர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே நமக்கு கிடைத்திருக்கிறது. அப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதே நாம் இளையராஜாவிற்கும், மகேந்திரனுக்கும் அளிக்கும் கௌரவம். 

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்என் மீது மோதுதம்மா[செந்தாழம்பூவில்...]

பூ வாசம் மேடை போடுதம்மாபெண்போல ஜாடை பேசுதம்மாஅம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுதுஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுதுகாடுகள் மலைகள் தேவன் கலைகள்[செந்தாழம்பூவில்...]

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்மலையின் காட்சி இறைவன் ஆட்சி[செந்தாழம்பூவில்...]

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
[செந்தாழம்பூவில்...]

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com