பிரபல நகைச்சுவை நடிகர் சூப்பர்குட் லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
'வஞ்சிரம் மீன் இருக்குங்கிறான், வாளைமீன் இருக்குங்கிறான், ஜாமீன் மட்டும் கிடைக்கவே இல்லை, கடல்லேயே இல்லையாம்' என்ற டயலாக்கைச் சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் முகம்தான் சூப்பர்குட் லட்சுமணன். 'புதுவசந்தம்' முதல் 'சூர்ய வம்சம்' வரை சூப்பர்குட் பிலிம்ஸ் கம்பெனியில் புரொடக்ஷன் மானேஜராக வேலை பார்த்ததால் லட்சுமணன் பெயருக்கு முன்னால் சூப்பர் குட் ஒட்டிக்கொண்டது.
இவர் சிறுவயதிலேயே 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் சுருளிராஜன் மகனாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு நடிகராக அடையாளம் கொடுத்தது 'மாயி' படத்தில் வரும் 'வாம்மா மின்னல்' வசனம்தான். அதேபோல் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' திரைப்படத்தில் திருடனாக நடித்திருப்பார்.
இவர் நடிப்பைப் பார்த்த மம்மூட்டி, ''உனக்கு நடிப்பு நல்லா வருது. நீ புரொடெக்ஷன் மானேஜர் வேலையை விட்டுட்டு நடிகனாகிடு" என்றார். அதற்குப்பிறகு சூப்பர்குட் லட்சுமணன் முழுநேர நடிகராகிவிட்டார். வடிவேலு, விவேக்குடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கிறார். அதிலும் வடிவேலுடன் மட்டும் 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
சூப்பர்குட் லட்சுமணன் இரட்டைச் சகோதரர்களில் ஒருவர். இவரது இன்னொரு ட்வின்ஸ் சகோதரரின் பெயர் ராமன். இவரது பேட்டி நம்ம விகடன் டைம்பாஸ் இதழில் வந்துள்ளது. ஒருகாலத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சூப்பர்குட் லட்சுமணனுக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லை.
2011 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு வடிவேலுவுக்கும் பட வாய்ப்புகள் இல்லை. விவேக்கும் இறந்துவிட்டார். மேலும் சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் தனி காமெடி டிராக் என்பது குறைந்துவிட்டது. இந்தக் காரணங்களால் வடிவேலு, விவேக்குடன் நடித்த ஏராளமான சின்னச்சின்ன காமெடி நடிகர்களுக்குப் பட வாய்ப்புகளே இல்லை. அதில் சூப்பர்குட் லட்சுமணனும் ஒருவர்.
சமீபத்தில் லட்சுமணன் கொடுத்த பேட்டியில் ‘தனக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதாகவும், யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து கிடைப்பதுதான் வருமானமாக உள்ளது' என்றும் தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா சமயத்தில் தான் செத்துப் போய்விட்டதாக போஸ்டர் ஒட்டினார்கள்’ என்றும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
தான் இறந்ததாக தகவல் வெளியானபோது சந்தானம் உள்ளிட்ட பலரும் போன் செய்து கேட்டார்கள். அனால் வடிவேலு மட்டும் போன் செய்யவில்லை என்றும் வருத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பாவா லட்சுமணன் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் காரணமாக அவர் கால் விரல் நீக்கப்பட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்குட் லட்சுமணன் மட்டுமல்ல, பல சின்னச்சின்ன காமெடி நடிகர்களின் தற்போதைய நிலை இதுதான். இவர்களுக்கு உதவி செய்ய முன்னணி நடிகர்களும் திரையுலகினரும் முன்வருவார்களா?