பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் காவிய நாவலான 'பொன்னியின் செல்வனை' படமாக்க தமிழ் சினிமாவில் சிலர் முயற்சித்து தோல்வியான நிலையில் இப்பொழுது வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்த பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை பேர் படமாக்க வேண்டுமென்று விரும்பினார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை திரைப்படமாக்க பல திரைப்பட தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாகக் கூறிய மணிரத்னமே மூன்று முறையாக 1980 களில் ஒரு முறை, பின்னர் 2000 இல் மற்றும் மூன்றாவது முறையாக 2010 இல் முயற்சித்ததாகக் கூறினார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை எம்.ஜி.ஆரும், கமல்ஹாசனும் எடுக்க முயன்று தோல்வியடைந்தனர்.
நாடோடி மன்னன் வெற்றிக்குப் பிறகு கல்கியின் பொன்னியின் செல்வனை வெற்றித் திரைப்படமாக மாற்ற விரும்பிய எம்.ஜி.ஆர் முதல் முயற்சியை மேற்கொண்டு புத்தகத்தின் உரிமையை ஆசிரியரின் குடும்பத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பெற்றிருந்தார். மேலும் படம் 1959 இல் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், எம்.ஜி.ஆரின் பிஸி ஷெட்யூலால் இந்த படத் தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. அதனால் புத்தகத்தின் மீதான இவரது உரிமையும் முடிந்தது.
கமல்ஹாசனும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை பெரிய திரைக்கு மாற்ற முயற்சித்து முடியவில்லை என்று பொன்னியின் செல்வனின் இசைவெளியீட்டு விழாவில் கூறினார். ஆனால் இத்தனை பேரின் உண்மையான கனவை மணிரத்னம் இறுதியாக பெரிய திரைப்பட குழுவுடன் நிறைவேற்றினார்.