தமிழ்நாடே ஆவலுடன் (?) எதிர்பார்த்த லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படம் எப்படியிருக்கிறது?
சரவணன் உலகமே வியந்து போற்றும் இந்திய விஞ்ஞானி. இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க மத்திய அமைச்சரே அழைப்பு விடுக்கிறார். ஆனால் சொந்த ஊர் மக்களுக்கே சேவை செய்வேன் என்று பூஞ்சோலை கிராமத்துக்கு வந்துவிடுகிறார்.
வந்தவருக்கு என்ன சேவை செய்வது, என்ன இடியாப்பம் செய்வது என்று தெரியாமல் தமிழ்க்கலாச்சாரம் தெரிந்த பெண்ணைக் கல்யாணம் செய்வது என்று முடிவெடுக்கிறார். என்னாது, இந்தக் கதையை சிவாஜியில் பார்த்தீங்களா? அதேதான்!
சரவணனின் சின்ன வயசு நண்பர் ரோபோசங்கர். தீபாவளி, பொங்கலுக்கு ஃபேமிலி ஷாப்பிங் என்பதைப் போல் ரோபோஷங்கர், அவர் மனைவி தேவதர்ஷினி ரெண்டு குழந்தைகள் என்று எல்லோருக்கும் சுகர்.
ரோபோ சங்கர் இறந்துபோக இன்சுலினே தேவைப்படாமல் ஒரே ஒரு மருந்தின் மூலம் சர்க்கரை நோயையே தீர்த்துவிடும் மருந்தைக் கண்டுபிடித்து மக்களுக்கு அர்ப்பணிக்க, ஆராய்ச்சியில் இறங்குகிறார், உடல், பொருள், ஆவி, பீரோ சாவி என்று அனைத்தையும் மக்களுக்கே அர்ப்பணித்த சரவணன்.
அவர் ஏற்கெனவே கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியால் பல மருந்து கம்பெனிகள் இண்டர்நேஷனல் லெவலில் திவாலாகி விடுகின்றன. இந்த ஆராய்ச்சியும் சக்சஸ் ஆனால் ஒட்டுமொத்த மருந்துக்கம்பெனிகளுக்கே மருந்து வைத்ததைப் போல் ஆகிவிடும் என்று சதித்திட்டத்தில் இறங்குகிறார்கள். சதியை வென்றாரா சரவணன் என்பதுதான் மீதிக்கதை.
இந்தப் படத்தின் கதை, காட்சிகள், வசனம் என்று எல்லாவற்றையும் எல்லாப் படங்களிலும் பார்த்திருப்பீங்க. பார்க்காத ஒரே விஷயம் 'லெஜண்ட்' சரவணன். மனுஷன் சீரியஸா நடிக்கிறதா நினைச்சு என்னன்னமோ பண்றார். ஆனா ஒட்டுமொத்த தியேட்டரும் அவரைப் பார்த்ததுமே விழுந்து விழுந்து சிரிக்குது.
ஒரு சோகமான, அதிர்ச்சியான காட்சியுடன் இண்டர்வெல் விடுகிறார்கள். கூட்டம் பாப்கார்ன் வாங்குவதை மறந்து சீட்டுக்குள்ளேயே சிரித்துக்கிடக்கிறார்கள்.
படம் முடிந்தபிறகும் ஆரவார உற்சாக சிரிப்புடன்தான் ஆடியன்ஸ் வெளியேறுகிறார்கள்.
சரவணன் எம்.ஜி.ஆர் விக், ஒட்டுமொத்த உலக நாடுகளும் மிரளும் வகையில் ஆளை அடிக்கும் கலரில் கோட்சூட், எம்.ஜி.ஆர் வசனங்கள் இதனுடன் ரஜினி நடையை இமிடேட் செய்து என்னமோ செய்ய முயற்சித்திருக்கிறார்.
'பாஸ் நீங்க பக்கத்துல பார்த்தா எம்.ஜி.ஆர், தூரத்தில பார்த்தா ரஜினி, ரெண்டு சைடிலும் பார்த்தா விஜய், அஜித்' என்று யாரோ அவரை ஆழ்மனத்தில் நம்ப வைத்திருக்கிறார்கள்.
அவரும் அதை நம்பி டூயட், டான்ஸ், சண்டைக்காட்சிகள் என்று என்னென்னவோ செய்கிறார். ஆனால் எல்லாமே தமாஷ் தர்மயுத்தம்தான்!
எம்.ஜி.ஆர், ரஜினி என்றால் ரெண்டு ஹீரோயின் வேண்டுமே? சரவணனின் அழகில் மயங்க ஒரு ஹீரோயின், அறிவில் மயங்க ஒரு ஹீரோயின். இடையிடையே தன்னைப் பற்றிய பஞ்ச் டயலாக்குகளை நம் மூஞ்சி மீது வீசுகிறார். கட்டைப்பை நிறைய காமெடிகள்!
படத்தில் அபத்தங்களுக்குப் பஞ்சமில்லை. விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் ஒரு சிக்கல் விழ, இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணை நடக்கிறது. பூர்ணிமா பாக்கியராஜ்தான் மருத்துவ கவுன்சில் தலைவர். மருத்துவ கவுன்சில் கூட்டத்தில் மருந்து கம்பெனி ஓனர் சுமனும் இருக்கிறார்.
"இப்படி ஆகிப்போச்சே, இனிமே விஞ்ஞானி சரவணன் ஆராய்ச்சிக்கு யார் உதவுவாங்க?" என்று பூர்ணிமா கேட்க, டப்பென்று கதவைத் திறந்து "நான் உதவுவேன்" என்று தேவதர்ஷிணி வருகிறார். அது என்ன இந்திய மருத்துவ கவுன்சில் கூட்டமா, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டமா?
படத்தில் விஜயகுமார், லதா, பிரபு, ரெண்டு ஹீரோயின்களைத் தாண்டி விவேக், யோகிபாபு, முனீஷ்காந்த், மயில்சாமி, தம்பி ராமையா, சிங்கம்புலி என்று ஏராளமான காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் ஒரு காமெடி கூட ஒர்க்-அவுட் ஆகவில்லை. ஆனால் 'லெஜெண்ட்' சரவணன் நடிப்பைப் பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதான் லெஜெண்ட்!