'பிரிவியூ பார்க்கவே யாரும் வரலை' - 'சிக்கல்' ராஜேஷ் சோகம்

ஷூட் முடிஞ்சு சாயந்தரம் சம்பளம் கொடுக்குறதுக்கு பதிலா எல்லாருக்கும் சாயா வாங்கிக் கொடுத்து அனுப்பிருக்கேன். இப்படி கஷ்டப்பட்டு போராடி இந்தப் படத்தை எடுத்து முடிச்சிட்டேன்.
'பிரிவியூ பார்க்கவே யாரும் வரலை' - 'சிக்கல்' ராஜேஷ் சோகம்

'பற்றவன்' என்ற பெயரில், பார்த்தாலே ஷாக் அடிக்கும் சினிமா போஸ்டர் ஒன்று கண்ணில் பட, 'எனக்கே பார்க்கணும்போலிருக்கே' என்று பார்ட்டியைத் தேடிப்பிடித்து பேசினேன்.

"என் பேர் சிக்கல் ராஜேஷ். 'பற்றவன்' படத்தை எடுத்துட்டு அதை ரிலீஸ் பண்றதுக்குள்ள நான் ஏகப்பட்ட சிக்கலை சந்திச்சுட்டேன். 'சிக்கல்'னு டைட்டில் வெச்சு அதையே ஒரு படமா எடுக்கலாம் தலைவா" என சோக மோடில் பேசியவரிடம் "அப்படி என்னதாங்க உங்களுக்குப் பிரச்னை?" என்று பற்ற வைத்தேன்.

சிக்கல் ராஜேஷ்
சிக்கல் ராஜேஷ்

"அந்தக் கதைய நடுவுல இருந்து சொன்னா சரிவராது, ஆரம்பத்துல இருந்தே ஆரம்பிக்கிறேன்" என்றவர் "என் சொந்த ஊர் நாகப்பட்டினம். பத்தாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் ஜாஸ்தி. மேடையிலே மிமிக்ரி பண்றது, டான்ஸ் ஆடுறது எனக்குப் பிடிக்கும்.

சென்னைக்கு போனா சினிமாவுல சேர்ந்திடலாம்னு நம்பி இங்கே வந்தேன். வடபழனி வந்து ஏ.வி.எம் உருண்டைய விட அதிகமா சுத்திட்டேன். ஒரு வாய்ப்பும் கிடைக்கல. வெறுத்துப்போய் வெளிநாடு போய்ட்டேன். குவைத், ஈராக்னு வேலை பார்த்துட்டு திரும்ப ஊருக்கு வந்தேன்.

கல்யாணம் ஆச்சு, ஒரு குழந்தையும் பொறந்துச்சு. அந்த டைம்ல சும்மா இல்லாம டிக்டாக் வீடியோ பண்ணேன். 'பொண்டாட்டி, புள்ள இருக்கு. இப்போ உனக்கு இதெல்லாம் தேவையா'னு ஊர்ல கிண்டல் பண்ணினாங்க. ஒரு வளரும் கலைஞனை இப்படி காயப்படுத்துறீங்களேயானு கவலைப்பட்டேன். என் டிக்டாக் பார்த்தவங்கள்ல ஒரே ஒருத்தர் மட்டும் ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டியிருந்தார்.

அவர் சினிமா தயாரிப்பாளர் சத்யமூர்த்தி ஜெயகுரு. அவர் மூலமா முதல் சினிமா வாய்ப்பு கிடைச்சது. 'கீழக்காடு'னு ஒரு படத்துல எனக்கு வில்லன் கேரக்டர் கொடுத்திருந்தார். நானும் அதுல நல்லாத்தான் நடிச்சிருந்தேன். ஏனோ தெரியல அதுக்கப்பறம் எனக்கு எந்த வாய்ப்பும் வரவே இல்ல. (அப்படி ஒரு படம் வந்ததே நீங்க சொல்லித்தானே பாஸ் தெரியுது)

கீழக்காடு பட போஸ்டர்
கீழக்காடு பட போஸ்டர்

ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்துட்டு ஒரு முடிவெடுத்தேன். 'பற்றவன்'னு டைட்டில் வெச்சு ஒரு கதைய சொந்தமா யோசிச்சி எழுதினேன். நானே ஹீரோ, நானே இயக்கம். ஹீரோயினுக்கு எங்க ஊர்லயே ஆடிஷன் வெச்சேன்.

என்கூட நடிக்க ஆர்வமா 3 பேர் அதுல கலந்துக்கிட்டாங்க. வந்ததுல 'அனுராகவி'னு ஒரு பெண்ணு நல்லா இருந்தாங்க. என் அளவுக்கு இல்லேன்னாலும் ஓகேவா நடிச்சாங்க. ஃபைனலா அவங்கள செலக்ட் பண்ணினேன்.

நானே தயாரிப்பாளரா மாறி என் கைக்காசை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல பணம் எல்லாம் காலியாகிடுச்சு. கடன் வாங்கி பண்ணினேன். என்கிட்ட ரெண்டு அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் இருந்தாங்க, நான் சரியா சம்பளம் கொடுக்கலைன்னு அதுல ஒருத்தர் பாதிலேயே ஓடிப்போய்ட்டார். நான் என்ன பண்றது, காசு இருந்தா கொடுக்க மாட்டேனா.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன்

பல நேரங்கள்ல ஷூட் முடிஞ்சு சாயந்தரம் சம்பளம் கொடுக்குறதுக்கு பதிலா எல்லாருக்கும் சாயா வாங்கிக் கொடுத்து அனுப்பிருக்கேன். இப்படி கஷ்டப்பட்டு போராடி இந்தப் படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ஆனா, அதுக்கு அப்பறம்தான் பெரிய பிரச்னையே ஆரம்பிச்சது.

தியேட்டர்ல பணம் கட்டி படத்தை ப்ரீவியூ போடுவேன். படத்தை பார்க்க வர்ற மீடியேட்டர்ஸ் கதை சரியில்லை, அதை மாத்துங்க, இதை மாத்துங்கனு கடுப்பேத்துவாங்க. இதுவே எனக்கு பெரிய மன உளைச்சலை உண்டாக்குச்சு. டென்ஷனாகிட்டேன்.

'இது உலகத்தரமா எடுத்த உள்ளூர் படம்'னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவங்க புரிஞ்சுக்கவே இல்ல. இந்தப்படம் என் குழந்தை மாதிரி. அதை குறை சொன்னா எனக்கு கோவம் வருமா வராதா ? ஒரு கட்டத்துல ஏன்டா இந்தப் படத்தை எடுத்தேன்னு என்னையே யோசிக்க வெச்சிட்டாங்க. மறுபடியும் ப்ரீவியூ போட்டேன்.

பற்றவன் பத்திரிகை விளம்பரம்
பற்றவன் பத்திரிகை விளம்பரம்

10 பேர் படம் பார்க்க வரேன்னு சொன்னாங்க கடைசில ஒருத்தர்கூட வரல, தியேட்டருக்கு கட்டின காசு வேஸ்டா போயிடக் கூடாதுன்னு நானும், என் அசிஸ்டண்ட் டைரக்டரும், தியேட்டர் ஓனரும் படத்தை பார்த்து மனச தேத்திக்கிட்டோம். ஒரு கட்டத்துல யாருமே வாங்க ரெடியா இல்லேன்னு தெரிஞ்சதும். சொந்தமா ரிலீஸ் பண்ண முடிவு பண்ணினேன்.

சின்னப் படத்துக்கு விளம்பரம் ரொம்ப முக்கியம் தலைவா. பாதி வெற்றி அதுலதான் இருக்கு. ஸ்டார் வேல்யூ இல்லாத படத்தை தியேட்டர்ல வந்து பார்க்க யாரும் அவ்ளோ ஆர்வம் காட்டுறதில்லை. எப்படி நம்ம படத்தை பார்க்க வைக்கலாம்னு யோசிச்சப்ப கிடைச்ச ஐடியாதான் இந்த புதுமையான போஸ்டர் டிசைன் ஐடியா.

பற்றவன் போஸ்டர்
பற்றவன் போஸ்டர்

நீங்ககூட பார்த்திருப்பீங்க நான் வாயில கத்தி வெச்சிக்கிட்டு பயங்கரமா போஸ் கொடுக்க என் பக்கத்துல ஹீரோயின் கூலா லாலிபாப் சாப்பிட்டுட்டு இருப்பாங்க. இந்த ஐடியா எல்லாரையும் கவனிக்க வெச்சது. ஒருவழியா படம் 13 தியேட்டர்ல ரிலீசாகி நான் எதிர்பார்க்காத அளவு வெற்றி கிடைச்சிருக்கு. (சொல்லவேயில்ல?!)

ஆரம்பத்துல என்னை கிண்டல் பண்ணினவங்க எல்லாம் இப்போ 'நீ பெரிய நடிகனா வருவேன்னு எனக்கு அப்போவே தெரியும்'னு அளந்து விடுறாங்க . இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. அடுத்து 'டபுள் ஏ'னு ஒரு படம் பண்றேன். இதுவும் சின்ன பட்ஜெட் படம்தான்.

பரபரப்பை கிளப்பிய பற்றவன் போஸ்டர்
பரபரப்பை கிளப்பிய பற்றவன் போஸ்டர்

எதிர்காலத்துல பெரிய படத்துல ஹீரோ அல்லது வில்லனா நடிக்கணும். அப்படி ஒரு வாய்ப்பு இந்த சிக்கல் ராஜேஷுக்கு சிக்காமலா போகும். அதுக்குத்தான் காத்திருக்கேன்" என்கிறார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com