

சுப்ரமணியபுரம் ரிலீஸ் ஆகி இன்னையோட 14 வருஷமாச்சு. தமிழ்ல வந்த முக்கியமான ட்ரெண்ட் செட்டர் படங்கள்ல இந்த படமும் ஒண்ணு. இந்த படத்தைப் பத்தி ஏற்கெனவே போதுமான அளவுக்கு தெரிஞ்சு வச்சுருப்பீங்க. ஆனாலும் எங்க கிட்ட சில சுவாரசிய தகவல்கள் இருக்கு. அது என்னனு பாப்போம்.
'கண்கள் இரண்டால்'னு ஒரு பாட்டப் போட்டு எல்லாரையும் கட்டி இழுத்தவரு இந்த படத்தோட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர் வேற யாரும் இல்ல, கொடைக்கானல்ல இருக்கும் புனித பீட்டர் பள்ளில சசிகுமாரோட மியூசிக் டீச்சர்தானாம்.
"சூப்பரா வாசிக்கிறீங்க சார். நான் எடுக்கப் போற படத்துக்கு நீங்கதான் ம்யூசிக் டைரக்டர்னு சசி சொல்லுவான். சொன்ன மாதிரியே செஞ்சுட்டான். வைராக்கியம் புடிச்சவன்"னு ஜேம்ஸ் வசந்தன் தன்னோட மாணவரும் இயக்குனருமான சசிகுமாரைப் பத்தி ஒரு பேட்டியில் நெகிழந்தார்.
அதுமட்டுமில்ல, சசிகுமாருக்கு சினிமா ஆசைகள வளர்த்ததும் இவர்தானாம். சத்யஜித்ரே போன்ற சினிமா ஜாம்பவான்களோட திரைப்படங்கள சின்ன வயசில சசிகுமாருக்கு போட்டுக் காட்டியிருக்கார்.
சுப்ரமணியபுரம் படத்தோட முக்கியமான தூண்கள்ல ஒருதர் அந்த படத்தோட ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். ஆனால், எஸ்.ஆர்.கதிருக்கு முன்னாடி, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளரா கமிட் ஆனவர் ராம்ஜி.
அப்பவே ராம், மௌனம் பேசியதே, டும்டும்டும் போன்ற படங்கள் மூலமா தன்னை நிரூபிச்சவர். அமீரோட பருத்திவீரன் ஷூட்ல ராம்ஜி மாட்டுனதால, எஸ்.ஆர்.கதிர் சுப்ரமணியபுரம் படத்துக்குள்ள வந்து, பட்டய கிளப்பிருக்கார்.
சுப்ரமணியபுரம் படத்தோட ஹீரோயின் ஸ்வாதிக்கு படத்தோட க்ளைமேக்ஸ் முன்னாடியே தெரியாதாம். ரெண்டு பேரும் கடைசில சேந்துருவாங்கனே சொல்லி, இயக்குநர் சசிகுமார் வேலை வாங்கியிருக்கார்.
கடைசில க்ளைமேக்ஸ் எடுக்கும்போதுதான், தன்னாலதான் அழகர் சாகப் போறான்ற விஷயமே ஸ்வாதிக்கு தெரியுமாம்.
ஸ்வாதி இந்த க்ளைமாக்ஸை ஏத்துக்கவே இல்லையாம். 'நான் படத்துலருந்து விலகிக்கிறேன். இந்த க்ளைமாக்ஸ் பாத்துட்டு எல்லாரும் என்ன திட்டுவாங்க'னு கோபத்தின் உச்சத்துக்கே போய்ருக்காங்க. எவ்ளோ நல்ல புள்ளைய போய், ஏன் சசி சார்?
'சுப்ரமணியபுரம்' படம் பாத்தவுங்களுக்கு, படத்தோட க்ளைமேக்ஸ் ஷாட் மறக்கவே முடியாது. ஆத்தல பரமன போட்டு அடிச்சுட்டு இருப்பாங்க, இன்னொரு பக்கம் காசியா வரும் கஞ்சா கருப்பு நடந்துவர லாங் ஷாட் வரும்.
இந்த ஷாட் முதலில் சசி எழுதுன ஸ்கிரிப்ட்ல இல்லையாம், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் சொல்லிதான் எடுத்ததாம்.