TV Serials : உதவி கேட்டு நிற்கும் விக்ரம் பட மகேந்திரனின் உறவினர் !

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைவராக இருந்த போது இந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.12000 நிதியுதவி கிடைக்கும்படி செய்திருக்கிறார்.
Vikram
VikramTimepassonline
Published on

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தைப் போல' தொடரில் ஹீரோவாக நடிப்பவர் நடிகர் ஶ்ரீ. இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன்.
இந்த சீரியல் மட்டுமல்ல இதற்கு முன்பும்  'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட ஏராளமான ஹிட் சீரியல்களில் நடித்தவர். சின்னத்திரை ஏரியாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்து வருகிறார்.
அதேபோல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் மகேந்திரனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 'விஜய் டிவி' மகேந்திரன் என்பதுதான் இவரது அடையாளம்.

தொண்ணூறுகளின் இறுதியில் விஜய் டிவி-யில் மக்கள் தொடர்பாளராக பணியில் சேர்ந்தவர், ஒருகட்டத்தில் அதன் துணைத்தலைவர் பொறுப்பு வரை உயர்ந்தார்.
ஆரம்பத்தில் விஜய் டிவியில் சினிமா பிரபலங்களின் பேட்டிகளை ஒழுங்குசெய்துதரும் பணியில் இருந்ததால் தொடர்ந்து சினிமாகாரர்களுடன் பழக்கமாகி, அவர்கள் மூலம் சேனலிலும் நல்ல பெயர் எடுக்க, விஜய் டிவியில் இவரது மதிப்பு உயர ஆரம்பித்திருக்கிறது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என எல்லா பிரபல நிகழ்ச்சிகளிலும் சினிமா பட ப்ரமோஷன்களைக் கொண்டுவந்து சினிமா உலகத்தினரின் குட்புக்கிலும் இடம்பிடித்தார்.

இவரது தலைமையில்தான் ஒவ்வொரு ஆண்டும் விஜய் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதுத்தவிர விஜய் டிவி நடத்திய மிகப்பெரிய நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் இவர்தான் பொறுப்பாளர். அப்படித்தான் ‘கமல் 50’ நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட மிக முக்கியக் காரணமாக இருந்தார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடிக்க கமல்ஹாசனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் சென்றார். பிறகு விஜய் டிவியில் இருந்து வெளியேறியவர், தற்போது கமலுடனேயே இருக்கிறார். 'சமீபத்திய ஹிட் படமான 'விக்ரம்' படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் இவரே கவனித்துக் கொண்டார்.

இந்த இரண்டு டிவி பிரபலங்களும் எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’ உள்பட பல பெரிய படங்களைத் தயாரித்த ஜி.என்.வேலுமணியின் பேரன்கள்.

ஜி.என்.வேலுமணி 'சரவணா' ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்தவர். 'படகோட்டி' மட்டுமல்ல, சிவாஜியின் 'பாகப்பிரிவினை', 'கலங்கரை விளக்கம்', 'அன்னை அபிராமி', 'எதிரொலி' என பல படங்களைத் தயாரித்தது இவரது நிறுவனம். வேலுமணிக்கு சரவணன் என்கிற மகனும் இரண்டு மகள்களும் உண்டு. அந்த இரண்டு மகள்கள்தான் முறையே மகேந்திரன் மற்றும் நடிகர் ஶ்ரீயின் அம்மாக்கள்.

இப்போது மேட்டருக்குள் செல்லலாம்.

ஜி.என்.வேலுமணியின் மகன் சரவணனின் குடும்பம் தற்போது மிகவும் வறுமையில் வாடுகிறதாம். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைவராக இருந்த போது இந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.12000 நிதியுதவி கிடைக்கும்படி செய்திருக்கிறார். ஆனால் விஷால் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்தத் தொகையும் நின்று விட்டதாம்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து அந்த உதவியைத் தொடர உதவுமாறு கேட்டிருக்கிறார், சரவணனின் மகள் புவனா.

அவரிடம் பேசினோம்.

''அம்மாவும் நானும்தான் வாடகை வீட்டுல இருக்கோம். அம்மாவுக்கு முதுமைக் கால நோய்களுடன் கேன்சருக்கான அறிகுறியும் தெரிய, அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துட்டு வர்றாங்க. தயாரிப்பாளர் சங்க நிதி பெரிய உதவியா இருந்தது. அதனாலத்தான் அதைத் தொடர நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டோம். முதலமைச்சர் கவனத்துக்கு எங்க நிலைமை தெரிஞ்சா ஏதாவது உதவி கிடைக்கும்னு நம்புறோம்' என்றவரிடம்,

'மகேந்திரன், சங்கர் கணேஷ் குடும்பங்களுடன் உறவு சுமூகமான முறையில் இல்லையா' எனக் கேட்டோம்.

'எங்களுக்கும் அவங்களுக்கும் சண்டை சச்சரவெல்லாம் ஏதுமில்லை.  தலைமுறை கடக்கிற போது சொந்தபந்தங்களுக்குள் ஒரு இடைவெளி விழுமில்லையா, அந்த மாதிரிதான் கொஞ்சம் கொஞ்சமா பேச்சுவார்த்தை குறைஞ்சிடுச்சு. அவங்களுக்கு எங்களை மாதிரி ஒரு சொந்தம் இருக்கறது ஞாபகம் இருக்கான்னு தெரியலை.'' என்கிறார்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com