நம்பர் ஒன் News Channel எது தெரியுமா? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 23

சன் நியூசின் செய்தி வழங்கும் தன்மையிலிருந்து இந்த வகையில்தான் வித்தியாசம் காட்டி, நம்பர் ஒன் இடத்தை அதனிடமிருந்து பறித்தது இந்த சானல்.
News channel
News channelTimepassonline

இன்றைய தேதியில் செய்திச் சேனல்களில் நம்பர் ஒன் எது தெரியுமா?

நியூஸ் 7 தொலைக்காட்சியிலிருந்து முக்கியமான ஒரு செய்தித் தொகுப்பாளர் வெளியேறி இருக்கிறார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சேர இருக்கிறாராம் அவர்.

மீடியாவில் இதுபோன்ற இடப்பெயர்வுகள் புதிதில்லை. 

அதேநேரம் இந்த மாற்றங்களின் பின்னணியில், செய்திச் சேனல்களிடையேயான பிசினஸ் போட்டி குறித்த பேச்சுகளும் கேட்கின்றன.

இப்போதைய செய்திச் சேனல்களின் டி.ஆர்.பி. பந்தயம், எந்தச் சேனல் நம்பர் ஒன்? சேனல்கள் ஒளிபரப்பும் செய்திகளின் தரம் என்பன போன்ற விவரங்களைப் பார்க்கலாமா?

சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்பெல்லாம் 24 மணி நேரச் செய்திச்சேனல்கள்தான் பரபரப்பாக இருந்தன. சீரியல்கள் மூலம் என்டர்டெய்மென்ட் சேனல்கள் பெண்களைக் கவர்ந்திழுத்தன என்றால், இந்தச் செய்திச் சேனல்களின் முக்கியப் பார்வையாளர்கள் ஆண்கள்.

செய்திகளுடன் நடப்புச் சம்பவங்களை எடுத்து மாலை நேரங்களில் விவாதங்களாக ஒளிபரப்பினார்கள். முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள். தேர்தல் நேரங்களிலெல்லாம் இந்த விவாதங்களுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தன.

சேட்டிலைட் சேனல்களில் தமிழின் முன்னோடியான சன் டிவியே வழக்கம் போல் இங்கும் தன்னுடைய 'சன் நியூஸ்' சேனல் மூலம் ஆதிக்கம் செலுத்தியது.

சன் டிவிக்குப் போட்டியாக விஜய், ஜீ தமிழ் என பிறகு வந்தது போலவே, செய்திச் சேனல்களிலும் புதியவை வரத் தொடங்கின.

ஜெயா, ராஜ், கலைஞர் போன்ற சேனல்கள் செய்திக்கெனத் தனிச் சேனல்களைக் கொண்டு வந்த போதும், சன் நியூஸ் இவர்களால் நெருங்க முடியாததாகவே இருந்தது.

ஆனால், பிறகு செய்திகளை மட்டுமே முதன்மையாகக் கொண்டு சேனல்கள்  வரத் தொடங்கியதும்தான் களம் மாறத் தொடங்கியது.

தந்தித் தொலைக்காட்சி, நியூஸ் 7, நியூஸ் 18, பாலிமர், கடைசியாக நியூஸ் தமிழ் என இப்போது செய்திச் சேனல்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

எண்ணிக்கை கூடினால் போட்டி வரத் தானே செய்யும்?

போட்டியில் வெல்ல சேனல்கள் செய்திகளை வெளியிடுவதில், செய்தார்களோ இல்லையோ வித்தியாசங்களைப் புகுத்துவதாகச் சொன்னார்கள்.

நகரம் தாண்டி சேனல்களைக் கொண்டு செல்ல உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தன சில சேனல்கள்.

சன் நியூசின் செய்தி வழங்கும் தன்மையிலிருந்து இந்த வகையில்தான் வித்தியாசம் காட்டி, நம்பர் ஒன் இடத்தை அதனிடமிருந்து பறித்தது பாலிமர்.

அதேநேரம் 'செய்தித் தொகுப்பு' என்கிற பெயரில் பாலிமர் ஒளிபரப்பும் செய்திகள் சமயங்களில் விமர்சனங்களைச் சந்திக்கின்றன.

இதே செய்தித் தொகுப்பு ஸ்டைலைத்தான் சில ஆண்டுகளுக்கு முன் உதயமான 'நியூஸ் தமிழ்' சேனலும் கடைபிடிக்கிறது.

இன்றைய தேதியில் தமிழ் செய்திச் சேனல்களில் பாலிமர்தான் தொடர்ந்து முதலிடத்திலிருப்பதாகத் தெரிகிறது.

ஆரம்பித்த புதிதில் சில வாரங்கள் டி.ஆர்.பி.யில் முதலிடத்தைப் பிடித்த 'நியூஸ் தமிழ்' பிறகு பின்னால் சென்று விட்டது.

ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சன் நியூஸ் இந்தச் சேனல்களுக்குப் பிறகுதான்.

தந்தி தொலைக்காட்சி, நியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை என் இந்த வரிசையிலேயே ஒவ்வொரு வாரமும் நீள்கிறது டி.ஆர்.பி. பட்டியல்.

இந்த டி.ஆர்.பி. போட்டியே முக்கியமான செய்தியாளர்களைப் போட்டி போட்டு தங்கள் பக்கம் இழுக்கக் காரணமாகிறது.

'நியூஸ் 18' சேனலிலிருந்து சன் டிவிக்கு சென்றார்கள் சிலர். இன்னொருபுறம் புதிய தலைமுறை சேனலிலிருந்த முக்கியமான செய்தியாளர் அங்கிருந்து வெளியேறி   'நியூஸ் 18' வந்தார்.

சேனல்கள் பெருகப் பெருக, இது மாதிரியான இடமாற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஆனால் பார்வையாளர்களுக்கு?

செய்திகளை முந்தித் தருவது முக்கியம்தான். அதை விட உண்மையான, தரமான செய்திகளைத் தருவது ரொம்பவே முக்கியம். 

அடுத்த வாரம் பார்க்கலாம்.

News channel
கோவில்பட்டி : பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர் குடும்பத்துடன் சிக்கினார் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com