ஓடும் ரயிலில் குளிர் தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர்காய்ந்த இளைஞர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது அசாம்பாவிதம் நடந்திருந்தால் மிகப்பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்குமென போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரயில் பயணம் இனிமையானது என பெரும்பாலான மக்கள் சொல்வார்கள். ஆனால் எல்லாருக்கும் இரயில் பயணம் இனிமையானதாக அமைவதில்லை. சிலரின் செயல்களால் எதிர்பாராத விபத்துகளும் அசாம்பாவிதங்களும் ஏற்பட்டு பயணத்தை குலைத்து விடுகிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அசாமில் இருந்து டெல்லிக்கு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 4ஆம் தேதி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. 600ற்கும் மேற்பட்ட பயணிகள் அந்த இரயில் பயணித்தனர்.
இச்சூழலில், 6ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் உத்திரப்பிரதேசத்தின் அலிகாருக்கு அருகே வந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அடுத்த பெட்டியில் இரவுப் பணியில் இருந்த இரயில்வே காவலர் கவனித்துள்ளார்.
மற்ற பெட்டியில் இருந்த பயணிகளும் பதற்றமானதைத் தொடர்ந்து, உடனடியாக அப்பெட்டிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. 30,40 வறட்டிகளை ஒன்று சேர்த்து குவித்து அதில் தீ மூட்டி அதை 16 பேர் சுற்றியிருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டித்து, வெறுப்பை அனைத்து விட்டு, வறட்டிகளை அப்புறப்படுத்தியுள்ளார்.
- மு. இந்துமதி.