கலிபோர்னியாவின் மேற்கு வுட்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் கடந்த மே 22 அன்று , மைக்கேல் ஆர்மஸ் என்னும் நபர் தன் செக்கை டெப்பாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது அதே வங்கியில் நுழைந்த ஒரு நபர் தன் கையில் வெடிப்பொருட்கள் இருப்பதாகவும், அதனால் தனக்கு பணத்தை கொடுக்குமாறு வங்கி நிர்வாகிகளை மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஆர்மஸ் வங்கியை கொள்ளையடிக்க வந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ள, அவர் தனது பழைய இருப்பிடத்தின் அருகே குடியிருந்த 42 வயதான எடுயர்டோ ப்ளாசன்சியா என்று தெரியவர, இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார் ஆர்மஸ்.
இதையடுத்து ஆர்மஸ் ப்ளாசன்சியாவிடம் ," உனக்கு என்ன ஆயிற்று. உனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லையா? " என்று கேட்க, "இந்த நகரில் எனக்கென்று எதுவுமில்லை, நான் சிறைக்கு செல்ல விரும்புகிறேன்", என்று உருகியிருக்கிறார் ப்ளாசன்சியா. அவரை சமாதானம் செய்ய நினைத்த ஆர்மஸ், அவரை வங்கியின் வெளியே அழைத்து சென்றுள்ளார். பின் இறுக்கமாக கட்டியணைத்து ஆறுதல்படுத்தியுள்ளார். ப்ளாசன்சியாவும் உருகி அழ, போலீசார் வரும் வரை ஆர்மஸ் அவரை அணைத்து வைத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் ப்ளாசன்சியாவை கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக கைது செய்து, யோலோ கௌன்டி சிறைச்சாலையில் அடைந்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்கிக்கு கஸ்டமராக சென்ற ஆர்மஸ், இந்த சம்பவத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார்!