

என்னதான் அரிச்சந்திரனின் அண்ணன் பையனாக இருந்தாலும் இந்த டெலி மார்க்கெட்டிங்காரர்களால் குறைஞ்சது ஒரு நாளைக்கு ஒரு பொய்யாவது சொல்ல வேண்டியிருக்கு. அப்படி டெலி மார்க்கெட்டிங்காரங்ககிட்ட என்னென்ன பொய்யெல்லாம் சொல்வோம்?
ஃபைனான்ஸ் போட்டு வாங்கிய பைக்கை டியூ கட்டலைனு தூக்கிட்டுப் போய்க்கிட்டிருப்பாங்க. அந்த நேரம் ‘நாங்க ராம்கோ பில்டர்ஸ்ல இருந்து பேசுறோம்’னு போன் வரும். ‘ஸாரிங்க. நான் டிரைவிங்ல இருக்கேன்’னு சொல்லிட்டு, கன்னத்துல கையை வெச்சு கவலையை கன்டினியூ பண்ணுவோம்.
மதியம் பொன்னுச்சாமி ஹோட்டலில் ஃபுல் கட்டு கட்டிட்டு தூங்கும் நேரத்தில் போன் வந்தாலும், ‘ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக் கிறேன்’னு அள்ளி வுட்டுட்டு தூக்கத்தை கன்டினியூ பண்ணுவோம்.
‘ஓ இந்த ப்ராடெக்டா? இப்போதான் போன வாரம் வாங்கினேன்’னு ஒரு பொய்யை ஒரு நேரம் சொன்னா, இன்னொரு நேரம் ஆளே இல்லாத ஊர்ல யாருக்குடா டீ ஆத்துறேங்கிற மாதிரி மிஸ்டு கால் விடுறதுக்கு ஒரு பொண்ணுகூட இல்லாட்டியும் ‘ரொம்ப முக்கியமான காலுக்கு காத்துட்டு இருக்கேன்’னு கெத்தா பொய் சொல்வோம்.
உண்மையாகவே கடன்கேட்டு செஞ்ச காலுக்கான ரிப்ளைக்குக் காத்துக்கிட்டு இருப்போம். அந்த நேரத்தில் அது வேணுமா இது வேணுமான்னு கேட்டு போன் வரும்போது ‘அடுப்புல ஏதோ தீயுறாப்புல வாசனை வருது. அப்புறம் பேசுங்க’னு வயித்தெரிச்சலை மேட்ச் பண்ணுவோம் பாருங்க. அதாங்க கில்லாடித்தனம்!