கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தில் புதன்கிழமை காலை 6:15 மணியளவில் சுமார் 5 மில்லியன் தேனீக்களை கொண்டு சென்ற டிரக்கில் இருந்து தேனீ கிரேட்ஸ் (Bee Crates) ஒன்டாரியோவில் உள்ள Guelph லைன் சாலையில் விழுந்து சிதறியது. இதனால் சாலை முழுவதும் தேனீக்களால் நிரம்பி காணப்பட்டது.
காவலர் ரியான் ஆண்டர்சன் கூறுகயில், சாலை முழுவதும் தேனீ கூட்டங்கள் நிறைந்து இருந்ததாகவும், காற்றில் தேனீக்கள் பறந்து கொண்டே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தேனீக்களைக் கையாளக் காவல்துறை அதிகாரிகள் தேனீக்கள் வளர்ப்பவர்களைத் தொடர்புகொண்டது, இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 6 முதல் 7 தேனீ காப்பாளர்கள் தேனீக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட தொடங்கினர். கிட்டத்தட்ட 3 மணி நேர பணிக்கு பிறகு பெரும்பாலான தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இருப்பினும் நூற்றுக்கணக்கான தேனீக்கள் இறந்துவிட்டன. சில தேனீக்கள் உதவ வந்தவர்களில் சிலரையும் டிரக் ஓட்டுநரையும் கடித்தன. இருப்பினும் யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை.
இதற்கிடையில் நடைபாதையாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இந்த பகுதியை தவிர்க்குமாறும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் ஜன்னல்களை மூடி விட்டு பாதுகாப்பாக இப்பகுதியை கடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- மு.குபேரன்.