ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், புதிய வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், நான்காவது நாளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் போட்டியை வெல்ல வெற்றிக்கு வித்திட்டார்.
யார் இந்த ஷமர் ஜோசப் ?
ஷமர் ஜோசப் ஆகஸ்ட் 31, 1999 ஆம் ஆண்டு கயானாவின் கிழக்கு பெர்பிஸ்-கோரென்டைனில் உள்ள ஒரு ஏழ்மை சமூகமான பராகாராவில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில் ஐந்து சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் ஒரு சிறிய வீட்டில் வளர்க்கப்பட்டார். இவர் கிராமத்தில் ஒரே ஒரு கருப்பு & வெள்ளை தொலைக்காட்சியும் லேண்ட்லைன்களையும் தவிர வேறு எந்த நவீன சாதனங்களும் இல்லை.
இவரின் கிராமம் பல போராட்டங்களுக்கு பிறகு முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு இணைய வசதியப் பெற்றது. கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி, ஒரு சிறிய சுகாதார மையம் மட்டுமே இருந்தது. குக்கிராமத்தில் மேல்நிலை பள்ளிக்கு இடவசதி இல்லாததால் பள்ளி படிப்பை முடிப்பதற்கு பல இன்னல்களை எதிர்கொண்டார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தொடக்கப் பந்துவீச்சாளர்களான கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கர்ட்னி வால்ஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்ட ஜோசப் சிறுவயதில் குக்கிராமத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து டேப் பால் கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாக அவரின் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். சிறுவயதில் உருகிய பாட்டில்களையும் பழங்களையும் கிரிக்கெட் பந்துகளாகப் பயன்படுத்தும் அளவுக்கு ஜோசப்பின் பொருளாதார நிலை இருந்தது.
மேலும் இவரின் குடும்பம் பெரியது என்பதால் சிறுவயதில் இருந்தே பல்வேறு துறைகளில் தினசரி கூலி வேலைகளை செய்தார். அவரது ஆரம்ப நாட்களில், அவரது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர் பக்காராவில் மரக்கட்டைகளை வெட்டுவது மற்றும் வெட்டிய மரங்களை காஞ்சே நதி வழியாக நியூ ஆம்ஸ்டர்டாமுக்கு கொண்டு வருவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
ஒருமுறை வழக்கம்போல் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக வெட்டிய மரம் அவர் மேல் விழுந்து காயத்துக்குள்ளானார். பிறகு ஜோசப் பக்காராவை விட்டு வெளியேற முடிவு செய்து, அவரது குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க நியூ ஆம்ஸ்டர்டாமுக்கு சென்றார். ஷமர் ஜோசப் நியூ ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்று கட்டுமானத் துறையில் ஒரு தொழிலாளியாக பணியமர்த்தப்பட்டார்.
பின்னர் பாதுகாவலராக அவரது வேலையில் பகல் மற்றும் இரவு என 12 மணிநேரம் நீண்டது, இது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தடையாக இருந்தது. எனவே ஜோசப் இறுதியில் தனது வருங்கால மனைவியின் உதவியுடன் தனது வேலையை விட்டுவிட்டு தனது கிரிக்கெட் லட்சியத்திற்காக முழுநேரமும் தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்தார்.
ஷமர் ஜோசப்பின் கிரிக்கெட்டில் முதல் தொடக்கம் ரோமாரியோ ஷெப்பர்ட் என்ற கிரிக்கெட் வீரர் மூலம் கிடைத்தது. ஜோசப் டிவிஷன் 1 போட்டிகளில் 6/13 என்ற அறிமுக புள்ளிகளுடன் கிரிக்கெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். பிறகு வெற்றிகரமாக முதல்தர கிரிக்கெட் போட்டிகளான லிஸ்ட்-ஏ அணியில் நுழைந்தார். ஷமர் ஜோசப் 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் காயத்திற்குப் பதிலாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் சேர்ந்தார்.
அவர் முதலில் நெட் பவுலராகக் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு சிறப்பாக பந்து வீசினார். அவர் திறமையை பார்த்த சாரணர் பிரசன்னா அகோரம் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர தூண்டப்பட்டார். பின்னர் செப்டம்பர் 17, 2023 அன்று பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிராக லீக் போட்டியில் ஜோசப் தனது 20 ஓவர் போட்டிகளில் அறிமுகமானார். அப்போது 2023 இல் கரீபியன் பிரீமியர் லீக்கின் கோப்பையை வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முக்கிய அங்கமாக ஜோசப் இருந்தார்.
அதே லீக்கில் வாரியர்ஸ் அணிக்காக இரண்டே இரண்டு ஆட்டங்களில் விளையாடிய போதிலும், ஜோசப் வழக்கமாக மணிக்கு 140 கிமீ வேகத்திற்கு மேல் வேகத்தில் பந்து வீசியதன் திறமையால் அனைவராலும் ஈர்க்கப்பட்டார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக 2023 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் ஒருவராக சேர்க்கப்பட்ட ஷாமரின் ஜோஷப் சர்வதேச போட்டிகளில் தனது பயணத்தை தொடங்கினார்.
ஜனவரி 17, 2024 அன்று, அடிலெய்டு ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஒரே ஒரு சுற்றுப்பயண போட்டியில் அவரது பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் தேர்வாளர்களை கவர்ந்தது.
இத்துடன் நின்று விடாமல் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், புதிய வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் நான்காவது நாளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. 24 வயதான கயானீஸ் ஆஸ்திரேலிய இன்னிங்ஸை 207 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் கடைசியாக ஆஸ்திரேலியாவில் 1997 இல் பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் வென்றது. அந்த டெஸ்டில் புகழ்பெற்ற கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஏழு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
- மு.குபேரன்.