காலையில் ஹோட்டல் திறந்ததும் முதல் ஆளாக சப்ளையரிடம் சப்பாத்தி ஆர்டர் செஞ்சுட்டு வெயிட் பண்ணுவோம். ஆர்டர் கொடுத்து அரைமணி நேராமாகியும் பச்சத் தண்ணிகூட வந்திருக்காது ஏன் லேட்டுனு வெயிட்டரை விசாரிச்சா இதோ ரெண்டு நிமிஷத்துல வந்திடும்னு சப்பையா ஒரு காரணம் சொல்வார்.
கிச்சனுக்குள்ளே போய் எட்டிபார்த்தாதான் தெரியும் அடுப்பே இன்னும் பத்த வைக்கலேன்னு. அந்தக் கடுப்போட வெளியேறும்போது கடை வாசல் போர்ட் கண்ணில்படும். ‘நிறைகளை வெளியில் சொல்லுங்கள். குறைகளை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள்’னு 'நான் ரெண்டையும் வெளியிலேயே சொல்லிக்கிறேன்'னு கிளம்புவோம்.
தனியாளா மட்டும் ஹோட்டல்ல போய் சாப்பிடவே கூடாது. அந்த நேரம் பார்த்து ஏதாவது ஒரு ஃபேமிலி உள்ளே வர, சர்வர் கமுக்கமா நம்மகிட்டே வந்து ‘சார் நீங்க தனியாதானே வந்திருக்கீங்க இவங்க ஃபேமிலியோட வந்திருக்காங்க.
கொஞ்சம் அட்ஜஸ்ட் இடம் மாறி உக்காருங்க ’னு அடுத்த டேபிளுக்கு நம்மள கைமாத்தி விடுவார். கடைசில ஒரு கால் உடைஞ்ச பெஞ்ச்தான் நமக்கு கிடைக்கும்.
கடை சாத்துற நேரத்துல சாப்பிடப்போறவங்க ஒரு புதுவித சுகானுபவத்தை அனுபவிப்பாங்க. சப்ளையர் கொண்டுவந்து வைக்கிற எந்தச் சாப்பாடுமே அதனோட ஒரிஜினல் சுவையோடு இருக்காது.
மிச்சம் மீதி இருக்கிற சட்னி, சாம்பார், பட்டாணி, குருமா, சேர்வா, காரக்குழம்பு எல்லாத்தையும் ஒண்ணா ஒரே வாளியில் ஊத்தி வெச்சிருப்பாங்க. பரோட்டா, தோசை, ஊத்தப்பம் எல்லாம் ‘சூரியவம்சம்’ இட்லி உப்புமா மாதிரி தனி கலர் சுவையில இருக்கும்.
நைட் பஸ் ட்ராவல் பண்றவங்க கண்டிப்பா இதை அனுபவிச்சிருப்பாங்க. யாருமே இல்லாத சுடுகாடு மாதிரி ஓர் இடத்தில் பெருசா பேனர் வெச்ச ஒரு ஹோட்டலில் ஃப்ரீயா கிடைக்கிற கொத்து பரோட்டாவுக்காக பஸ் ட்ரைவர் நம்மை அங்கே பலி கொடுப்பார்.
உள்ளே நுழைந்தவுடன் கவனிப்பு எல்லாம் நல்லாதான் இருக்கும். நாம கேட்ட ஐட்டங்களோடு கேட்காத ஐட்டங்களையும் சேர்த்துக் கொண்டுவந்து வைப்பாங்க ‘நான் எப்போங்க இதை ஆர்டர் பண்ணினேன்?’னு கேட்டா முறைச்சு பாப்பாங்க பயந்து வேற வழியில்லாம அதையும் சேர்த்து தின்னுத் தொலைக்கணும்.
சில கடைகளில் மல்டி பர்பஸ் வேலையாள் இருப்பாங்க. முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருக்க பஜ்ஜி, வடை போடுறது, அதை சப்ளை பண்ணுவது, டேபிளை துடைப்பது மாதிரியான வேலைகளைத்தனி ஒருவனாய் செய்துகொண்டிருப்பார் ஒருத்தர்.
அடுப்புல பஜ்ஜி சுடும்போது யாரவது டீ கேட்டு வந்தா, கடலை மாவு கையை அப்படியே கைலியில் துடைச்சுட்டு சப்ளையரா கன்வெர்ட் ஆகிவிடுவார்.