கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் என பிசியாக இயங்கியவர்.
2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்றார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் துணை ஆட்சியராக பணிபுரிந்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக இருந்துள்ளார். ஆஷா அஜித்தின் கணவர் விஷ்ணு சந்திரன், நாகர்கோவில் துணை ஆட்சியராக பணிபுரிந்தார். தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷா அஜித்தின் தந்தை அஜித் குமார், கேரள மாநில தகவல் மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநகராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த மாவட்டங்களில் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.