கடந்த சனிக்கிழமை 8-ம் தேதி 'Airforce Day'-வை இந்திய பாதுகாப்புத்துறையும் நம் விமானப்படையும் கொண்டாடியது. இந்த நாளைப் பற்றித் தெரிந்த நாம் கண்டிப்பாக ஒருவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்... அவர் பெயர் ஜம்போ... இனி பறந்து கடந்த காலத்துக்குப் போகலாமா?
1932-ல் கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த வாலிபன் லண்டனின் ராயல் ஏர்ஃபோர்ஸ் கல்லூரியிலிருந்து பட்டப்படிப்பை முடித்துவிட்டு கம்பீரமாக வெளியே வந்தான். அவனது முழுப்பெயர் கருண் கிருஷ்ண மஜூம்தார்!
ஆறடிக்கும் மேலான ஆஜானுபாகுவான தோற்றத்தால் அவனுக்கு அந்த ராணுவக்கல்லூரியில் 'ஜம்போ' என்ற பட்டப் பெயர் இருந்தது. மஜூம்தார் என்ற பெயரையே பலர் மறந்து 'ஜம்போ ஜம்போ' என்றே அழைத்தனர்.
நாமும் ஜம்போ என விளிப்போம். இந்தியா திரும்பிய ஜம்போவை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ்- முதலாம் படையணி'யில் நட்சத்திர பைலட்டாக சேர்த்துக் கொண்டது. குறுகிய நாளில் அந்தப் படையணியின் கமாண்டராக பதவி உயர்த்தப்பட்டார். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கியமான போர் வாளாக மாறினார் ஜம்போ.
சுதந்திரத்துக்கு முன்பு ஒரு இந்தியர் இத்தனை முக்கியத்துவமான பணிகளில் அப்போது சேர்த்துக்கொள்ளப்பட்டது கிடையாது. இது முழுக்க முழுக்க ஜம்போவின் அசாத்தியமான விமானத்தை செலுத்தும் திறமையாலும், புத்திகூர்மை மற்றும் உடல்வலிமையாலும் சாத்தியப்பட்டது.
1942-ல் இரண்டாம் உலகப்போரில் இம்பீரியல் ஜப்பான் படை தன் ஆதிக்கத்தை பர்மாவில் செலுத்தியது. அங்கு காலனி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் படைக்கு செம அடி விழுந்தது. ஜப்பானிய படையின் கொரில்லா போர் தாக்குதலால் பல பிரிட்டிஷ் காலாட்படை வீரர்கள் கபால மோட்சம் பெற்றார்கள். அவர்களின் போர் தந்திரத்தை பிரிட்டிஷ் ராணுவத்தால் யூகிக்க முடியவில்லை.
வேறு வழியின்றி பிரிட்டிஷ் ராணுவம் முதலாம் படையணியின் உதவியை நாடியது.
அடர்ந்த காடுகளில் ஒளிந்திருக்கும் ஜப்பானியப் படையை வான்வழியில் தேடி அழிப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம். ஆனால், ஜம்போ அதை சாதுர்யமாகக் கையாண்டார்.
விமானங்கள் இருக்கிறது என விமானத்திலேயே பறந்து பறந்து தேடாமல் அவர் அடர்ந்த காட்டுக்குள் இருந்த 'டாங்கோ' என்ற பகுதியில் தங்கள் விமானங்களை தரையிறக்கி காட்டுக்குள் தரை வழியாக தேடித்தேடி ஜப்பானியப் படையினரின் கொரில்லா தாக்குதலைப் போலவே தன் வீரர்களோடு இணைந்து ஜப்பானியர்களை எதிர்த்து போரிட்டார்.
எதிரியை வெல்ல அவன் பலத்தையே நம் ஆயுதமாக்கிக் கொள்ள வேண்டும்!' என்பதே அவர் எடுத்த முடிவு. இதற்கு அப்போதைய பிரிட்டிஷ் அதிகாரிகளில் சிலர் இந்தியாவிலிருந்து கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்கள். ஆனால், அதையெல்லாம் புறக்கணித்து, சிலரின் ஆதரவோடு அந்தப் போரில் வெற்றி பெற்றதோடு தன் விமானங்களையும் மயிரிழையில் ஜப்பானியர்களின் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொண்டார்.
இவரது புகழை விரும்பாத பிரிட்டிஷாரில் சிலர் இவரை டம்மியான பிரிவில் நியமித்தார்கள். வெறும் இரண்டு Buffalo Fighters எனப்படும் நியூஸிலாந்து வீரர்கள் இருவரை இவருக்கு பாதுகாப்பாக அடுத்த மிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள். இவர் செலுத்தும் விமானம்கூட 'லைசாண்டர்' எனப்படும் போர்க்கான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத சாதாரண இலகு ரக விமானங்கள் தான். ஆனாலும், அந்த மூன்று லைசாண்டரை வைத்து 'மே ஹாங் சூன்' என்ற ஜப்பானிய ராணுவத்தின் முக்கியமான தளத்தை வெடிகுண்டுகளால் அழித்தார் ஜம்போ!'லைசாண்டரில் குண்டுகள் சுமக்கும் அமைப்பு இல்லையே?' என்று நீங்கள் நினைப்பீர்கள் தானே? அங்குதான் ஜம்போ தான் மிகப்பெரிய புத்திகூர்மையான பொறியியல் அறிவு உள்ள நபர் என்பது உங்களுக்குப் புரியும். லைசாண்டரின் இரண்டு இறக்கைகளின் அமைப்பில் சிறு மாற்றம் செய்து அதில் கணமான குண்டுகளை பாதுகாப்பாகக் கொண்டு சென்றார். இலக்கினை வேகமாக நெருங்கி வானிலிருந்தே கணித்து கீழ் நோக்கி கழட்டி விடப்பட்டு, குண்டுகள் சரியான இலக்கினைத் தாக்கி அழித்தது. இதற்கு அந்நாளில் அசாத்தியமான பொறியியல் அறிவு இருக்க வேண்டும், கூடுதலாக சமயோசிதமும் இருக்க வேண்டும். தவறுதலாக அந்நியப் பொருள் ஏதேனும் இறக்கை மீது பட்டால் அந்த லைசாண்டர் விமானமே வெடித்து சுக்குநூறாகி விடும். ஆனால், தன் வசமிருந்த 3 விமானங்களை வைத்தே சாதுர்யமாக ஜப்பானிய ராணுவ தளத்தை அழித்துக் காட்டி பிரிட்டிஷ் அரசை வியப்பில் ஆழ்த்தினார்.
பர்மா மிஷனை முடித்துவிட்டு முதலாம் படையணி இந்தியா திரும்பும்போது இரண்டு வீரர்களை மட்டுமே போரில் அந்த அணி களப்பலியாக்கி இருந்தது. 'இரண்டு வீரர்களின் தியாகத்தால் இந்த வெற்றி சாத்தியமானது!' என தன் வீரர்களுக்காக கண்ணீர் சிந்தினார் ஜம்போ.
இந்தியா திரும்பியதும் படையணி வீரர்கள் சொல்லித்தான் அவரது Aggressive மற்றும் strategical தந்திரங்கள் உலகுக்குத் தெரிய வந்தது. போரில், அடர்ந்த 'ஷான்' பர்மியக் காடுகளில் அவர் எதிரிகளின் குண்டுகள் துளைத்து 4 நாட்கள் நீர் மற்றும் உணவின்றி மயங்கிய நிலையில் கிடந்து, பழங்குடியினரால் மீட்கப்பட்டு பிறகு பாதுகாப்பாய் தன் படையைக் கண்டறிந்து வந்து சேர்ந்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் என எல்லோரும் புகழ, அவருக்கு 'விங் கமாண்டர்' பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். தான் பங்கு பெற்ற 65 ஆபரேஷன்களிலும் வெற்றி கண்டது தான் அதற்குக் காரணம்!
நிறைய விழுப்புண்கள் மற்றும் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஜம்போ என்ற மஜூம்தார் 1944-ல் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சிலரின் சூழ்ச்சியால் டம்மி பதவியான கண்காட்சிப் படையில் வீரராக இணைக்கப்பட்டார். அதாவது சாகசங்கள் செய்து காட்டும் படைப்பிரிவு. ஆனாலும், அதையும் சிறப்பாகவேக் கையாண்டார் ஜம்போ. இவரின் விமான சாகசங்களைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். 1945- பிப்ரவரி 17-ம் தேதி லாகூர் நகரத்தின் அருகே உள்ள பைசலாபாத்( தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகரம்) விமானத்தில் சாகசங்களை செய்துகாட்டியபோது நடுவானில் விபத்துக்குள்ளானது. அதில் துரதிருஷ்டவசமாக பலியானார் ஜம்போ. சாகும்போது அவர் வயது வெறும் 31.
தன் வீரதீர செயல்களால் ஈர்க்கப்பட்டவரின் கல்லறை இப்போது லாகூரில் இருக்கிறது. பரம வைரியான பாகிஸ்தான் கூட அந்நாளில் அவரது கல்லறையில் ராணுவ மரியாதை செய்கிறது. அவர் வாங்கிய மெடல்களும் பிரிட்டிஷ் ராணுவ மியூசியத்தில் இருந்தது. ஜம்போவின் உறவினர்கள் அதை இந்திய அரசாங்கம் மீட்க வேண்டும் என குரல் கொடுத்து ஓய்ந்தே விட்டார்கள். இந்திய அரசும் அந்த பதக்கங்களை கொண்டுவர பல ஆண்டுகளாக சுணக்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க... நம் விமானப்படையே களத்தில் குதித்து நிதி திரட்டிக் கொடுத்து, இங்கிலாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதன்பலனாக சமீபத்தில் பதக்கங்களை லண்டனிலிருந்து வாங்கியிருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் அரசியல் சர்ச்சையாகும் என்பதால் எந்த மீடியாவுக்கும் லீக் ஆகாமல், இதை செய்தியாக்க விடாமல் கமுக்கமாக வைத்திருக்கிறது நம் விமானப்படை!
(தூசு தட்டுவோம்..!)
லைசாண்டர் விமானம்
ஜம்போ ஓட்டிய லைசாண்டர் விமானம்
ஜம்போவின் கல்லறை
ஜம்போ அடிப்பட்டுக் கிடந்த 'ஷான்' காடு