இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்ர். கிரிக்கெட் மட்டுமின்றி இன்ஸ்டாமிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிக நபர்கள் பின் தொடரும் இந்தியர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை 256 மில்லியன் நபர்கள் பின் தொடருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ஒரு பதிவின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், முதல் இரண்டு இடங்களில் கால்பந்து நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சி உள்ளனர்.
இந்தியர்கள் தரப்பில் விராட் கோலி 14-வது இடம் பிடித்துள்ளார். முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியர் கோலி மட்டுமே. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார்.
மேலும் பிற நிறுவனங்களை விளம்பரபடுத்தும் பதிவிற்கு ரூ.14 கோடி பெறுகிறார். இதில் முதலிடத்தில் உள்ள ரொனால்டோ ஒரு பதிவிற்கு ரூ.26.75 கோடி வருமானம் பெறுகிறார். அதே வேளையில் மெஸ்சி ரூ.21.49 கோடி பெறுகிறார். இந்தியர் தரப்பில் கோலியை அடுத்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29-வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு பதிவிற்கு ரூ.4.40 கோடி பெறுகிறார்.