நம் அனைவருக்கும் கொஞ்சம் முடி இருந்தாலே அதனை பராமரிக்க ஒரு வழி ஆகிடுவோம். ஆனால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சிதக்தீப் சிங் சாஹல், இளம் பருவத்தினருக்கான மிக நீளமான கூந்தல் வளர்க்கும் பிரிவில் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை அந்த சிறுவனின் வாழ்நாளில் தான் ஒருமுறைகூட வெட்டப்படாத தலைமுடியின் நீளம் எவ்வளவு தெரியுமா..? சுமார் 4 அடி மற்றும் 9.5 அங்குல நீளம் மட்டுமே... யம்மாடியோவ்!
மேலும், சாஹல் தனது நீளமான தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை 'துவைப்பதன்' மூலம் விடாமுயற்சியுடன் பராமரிக்கிறார். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை செலவிடுகிறார். அதாவது, தனது தலைமுடியைக் கழுவுதல், உலர்த்துதல் மற்றும் துலக்குதல் ஆகியவற்றை மிகக் கவனமாகச் செய்கிறார். இதில் தன் அம்மாவின் உதவி இல்லாவிட்டால் ஒரு நாள் முழுவதும் கூட தலைமுடிக்கான நேரம் எடுக்கும் என்கிறார்.
``எங்கள் மத வழக்கப்படி நான் முடியை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் தலைமுடியை வெட்ட வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. இதனால் நாளுக்கு நாள் முடி அதிகமாக வளர்ந்ததால், அதை வெட்ட ஏனோ தயக்கம். அப்படியே விட்டுவிட்டேன். பின்னர் குல வழக்கப்படி, தனது தலைமுடியை ஒரு துணியில் கட்டி அதை ஒரு தலைப்பாகையாகக் கட்டி கொள்வேன். ஒருநாள் என் தலைப்பாகையைக் கழற்றி கூந்தலை அளந்து பார்த்தபோதுதான் இவ்வளவுதூரம் வளர்ந்த விஷயமே தெரிந்தது. கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்து அவர்களும் என்னை அங்கீகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது!'' என்கிறார்.
சாஹலின் குடும்பம் மற்றும் அவரது நண்பர்கள் யாருக்கும் இவரைப் போல நீளமான முடி இல்லை. அவரது முடி இவ்வளவு நீளமாக வளர்ந்துள்ளது என்பதை அறிந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஆச்சரியமடைந்ததாக சாஹல் சொல்கிறார்.
'' நிறைய பேர் என்னிடம் வந்து இந்த மாதிரி முடியை எப்படி பராமரிக்கிறாய்?'' என்று டிப்ஸ் கேட்கிறார்கள் பலர் பொறாமையுடன் முடியைத் தொட்டுப்பார்த்துச் செல்கிறார்கள். உண்மையில் இதை பராமரிக்க அதிகம் செலவு செய்வதில்லை. பிரத்யேகமாக எதையும் தலைக்கு எடுத்துக் கொள்வதில்லை. சாதாரண சீயக்காய், தேங்காய் எண்ணெய் தான் நானும் பயன்படுத்துகிறேன்.
எனது குழந்தைப் பருவத்தில், தலைமுடியை உலர்த்துவதற்கு மொட்டை மாடியில் நின்றால் நண்பர்கள் என்னை பயங்கரமாக கிண்டல் செய்வார்கள். ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். ஆனால், அதன்பிறகு தலைமுடியைக் கேலி செய்பவர்களை நினைத்துப் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஆரம்பத்தில் எனக்கு வயதாகும்போது தலைமுடியை வெட்டிவிடலாம் என்று எனக்கு நானே அறுதல் கூறிக் கொள்வேன், ஆனால் இப்போது எனது அடையாளமாகவே முடி மாறிவிட்டது. கேலி செய்தவர்களே என்னுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்!'' என்று சிரிக்கிறார்.
எந்தவொரு 'தலை'யாய பிரச்னைக்கும் வெற்றிகரமான 'முடி'வு உண்டு!
- மு.குபேரன்