நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்டத்திற்கு பின், மைதானத்தில் வைத்தே விராட் கோலியும், கவுதம் கம்பீரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கண்ட அணி வீரர்களும் நடுவர்களும் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இக்காணொளிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. விராத் கோலிக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிடைத்தது.
இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டோரி ஒன்றில், “ஒரு விஷயத்தை ஒருவர் சொல்லக் கேட்கிறோம் எனில், அது அவருடைய கருத்துதானே தவிர, அது உண்மை என்று அல்ல. அதேபோல ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம் என்றால் அது ஒருவருடைய கண்ணோட்டமே தவிர அதுவும் உண்மை என்று அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, பெங்களூர் அணி வீரர்களிடையே அவர் பேசிய காணொளி ஒன்றும் வைரலாகி வருகிறது.
அக்காணொளியில்,“உங்களால் ஒன்றைக் கொடுக்க முடியுமென்றால், அதைத் திருப்பி வாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் கொடுக்காதீர்கள்” என கோலி பேசியிருக்கிறார். மைதானத்தில் நடந்த வாக்குவாதங்கள் குறித்தே விராத் கோலி இதை பேசியிருக்கிறார் என நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டுள்ளனர்.
மறுபுறம், நவீன் உல் ஹக்கும் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில், "நீங்கள் எதற்கு தகுதியானவரோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். அதுதான் இங்கே நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.