சீறிவர்ற பந்துகள பேட்டோட ஸ்வீட் ஸ்பாட்ட மீட் பண்ண வச்சு சிதறடிச்சு சிக்ஸர்களாக்குறது கரிபீயன் கிரிக்கெட்டர்களோட பழக்கம். அதையும் தாண்டி அவங்களுக்குள்ள இருக்க இன்னொரு ஒற்றுமை, இருக்குற இடத்த கலகலப்பாக்கி, ஃபுல்டைம் ஹ்யூமர் பேக்கேஜா வலம் வர்றது.
அதுவும், யுனிவர்சல் பாஸ், கிறிஸ் கெய்ல், "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியோட எல்லா சீசன் டைட்டில் வின்னர்களையும் உருக்கி டெஸ்ட் ட்யூப்ல ஊத்தி செஞ்ச கலவையாலான கலக்கல் காமெடி கிங்.
அவரோட வெரைட்டியான செஞ்சுரி செலிப்ரேசன் பத்தி ஏற்கனவே பார்த்துருக்கோம், ரசிக்க வைக்கும். பௌலிங் அப்போவும் இது நடந்துருக்கு. கிரேம் ஸ்மித்துக்கு கெய்ல் பௌலிங் போட ஓடிவர, அவர் சைட் ஸ்க்ரீன அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றதுக்காக அவர சைகைல தடுத்து நிறுத்த, ஓடிவந்த கெய்ல் அப்படியே பாதி பிட்ச் வரை, அந்த ப்ரீ டெலிவரி ஸ்ட்ரைடோடவே ஓடினாரு.
இன்னொரு தடவ நான்-ஸ்ட்ரைக்கர் எண்ட்ல இருந்த மார்கன் பந்து வீசப்படறதுக்கு முன்னாடியே ஓட முயற்சிக்க, கெய்ல் பந்த வச்சு மான்கேடிங் பண்றமாதிரி ஆக்டிங் பண்ணி, அத டான்ஸ் மூவ்மெண்ட் ஆக்கி, அம்பயர்ல இருந்து அத்தனை பேரையும் சிரிக்க வச்சுருப்பாரு.
2021 உலகக்கோப்பைல ஆஸ்திரேலியாவோட மிட்செல் மார்ஷ ஆட்டமிழக்க வச்சபிறகு அவரோட கழுத்த பின்னாடி இருந்து கட்டிக்கிட்டு தன்னோட கடைசி சர்வதேச விக்கெட்டுக்கு தாங்க்ஸ் சொல்லிருப்பாரு. மார்ஷே ஆட்டமிழந்த சோகத்த மறந்து சிரிச்சாரு.
கெய்ல் - யுவ்ராஜோட க்யூட் நட்பும் ரசனையா வெளிப்பட்ருக்கு. ஐபிஎல்ல ஒருதடவ அவர கெய்ல் பேட்டோட விளையாட்டா அடிக்க முயற்சி பண்ணது, ஹிந்தி பேச கெய்ல் முயற்சி பண்ண வீடியோவ யுவ்ராஜ் வெளியிட்டதுனு நிறையவே இருக்கு. தான் ஃபேசியல் பண்றத ஒருதடவ கெயில் வீடியோ எடுத்துப் போட, அது அவர் கேட்டுக்காமலே லைக், ஷேர்னு சுத்துச்சு. "நான்தான் ஆல்டைம் கிரேட் ஆஃப் ஸ்பின்னர், அத முரளிதரனே ஒத்துப்பாரு"னு சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு அவரு சொன்ன விதத்த இப்போ கேட்டாலும் சிரிப்பு வரும்.
ஆடியன்ஸ அவரு சந்தோஷப்படுத்த பேட்டோ பாலோ இருக்கனும்னு இல்ல, அவரு வந்து நின்னாலே அந்த இடத்துல உற்சாகத்தீ பரவும். அம்பயர்ல இருந்து நியூஸ் ரிப்போர்ட்டர் ஒருத்தர விடமாட்டாரு. அவரோட மைக்(கெய்)ல் ஜாக்சன் மூவ்மெண்ட்ஸ் நம்மயும் ஆடவைக்கும். ஒருதடவ கேமரா மேன்ட்ட இருந்த கேமராவ வாங்கி, சகவீரர்கள அந்த பெண் ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்கறத கவர் பண்ணிருப்பாரு. ஈகோ, அகந்தை இதுக்கெல்லாம் அர்த்தமே தெரியாது. அதனாலயே இவரப் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 சாம்பியன்ஸாகி, கோப்பையோட போர்டு முன்னாடி போஸ் கொடுக்க, கெய்ல் தவறி முன்னாடி விழுந்துட்டாரு. ஆனா அதக் காட்டிக்காம அங்கயும் இங்கயும் தாவிக் குதிச்சு அதையும் டான்ஸ் மூவ்மெண்ட் ஆக்கிட்டாரு. `லைஃப்ல விழலாம், ஆனா விழுந்துட்டோம்னு மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்குள்ல அத நமக்கு சாதகமா மாத்திடனும்'ன்ற வாழ்க்கை பாடத்தையும் கெய்ல் சமயோசிதத்தோட அன்னைக்கு நடத்துனாரு. களத்துல அவரோட Cartwheel மூவ்மெண்ட் ரொம்பவே ஃபேமஸ். ஆகமொத்தம், எல்லாரோட மூடையும் லைட் ஆக்குறதுல அவருக்கு இணை அவரேதான்.
"என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்" பாட்டுக்கு உயிர்கொடுத்து அத ஒரு கேரக்டரா உலவ விட்டா அதுக்கு கெய்ல் அப்படின்றது மட்டும்தான் பொருத்தமான பெயரா இருக்கும்.