சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதே ஒருகாலத்தில் பலரது கனவாக இருந்தது. ஆனால் தற்பொழுது வாகனத்தையே வீடாக்கி அதில் குடியிருப்பதை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். அந்த ட்ரெண்டிங் வாழ்க்கையை வாழ தங்கள் அனைத்து சொத்துக்களையும் விற்றுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிகள் .
அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் மற்றும் மெலடி ஹென்னெஸ்ஸி. தம்பதிகளான இவர்கள் 2020 ஆம் ஆண்டு முதல் மோட்டார் ஹோம் (motor home) மூலம் உலகை சுற்றி வருகின்றனர். வண்டியிலேயே பயணம் செய்து சலித்துப்போன இருவரும் கடல் வழியில் கப்பலில் பயணம் மேற்கொள்ள நினைத்தனர். அந்த சமயம் பேஸ்புக் பக்கத்தில் ராயல் கரிபீயன் கப்பலில் ஒன்பது மாதங்கள் அதாவது 274 நாட்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்வதற்கான விளம்பரம் வந்துள்ளது.
கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் கூடுதலாக இருக்கும் என்பதற்காக அதனை சமாளிக்க தங்கள் வீடு பொருட்கள் என அனைத்து சொத்துக்களையும் விற்று அந்த பணத்தில் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்திருக்கின்றனர். இதுவரை இவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்பசிபிக் பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கின்றனர்.
அவர்கள் பேசுகையில் தற்பொழுது எங்களிடம் வீடு இல்லை, வீட்டிற்கான செலவுகளும் இல்லை. வாகனமும் இல்லை, அதற்கான இன்சூரன்ஸும் இல்லை. எங்களிடம் தற்பொழுது டெலிபோன் பில், ஷிப்பிங் பில், கிரெடிட் கார்டு பில் மட்டுமே இருக்கிறது. இது நிலத்தில் வாழ்வதைவிட இந்த வாழ்க்கைக்கான செலவு மலிவானதாகவே உள்ளது என தெரிவித்தனர்.
"நாங்கள் கடலில் இருப்பதை விரும்புகிறோம். அதனால் அடுத்த வருடம் 'Village vis' என்ற கப்பலில் பயணம் செய்ய சொந்தமாக ஒரு கேபினை வாங்க இருக்கிறோம். இது அடுத்த 15 வருடம் எங்கள் வீடாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.
- ர.ராஜ்குமார்.