டி20ல டை ஆன போட்டிகள்ல வீழ்த்தப்பட்டதே இல்லைன்ற பல வருஷ ரெக்கார்டை அப்படியே வச்சுருக்கு இந்தியா!
டெட் ரப்பர் தானேனு நினைச்ச இந்தியா ஆஃப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி எல்லாவித மசாலாவும் தூவப்பட்ட பக்கா பிரியாணியாக பெங்களூர்ல பரிமாறப்பட்டது. ரோலர் கோஸ்டர்லயும் ரோப் கார்லயும் எந்த சப்போர்டும் இல்லாம அந்தரத்தில மிதக்கவிட்டு சுத்தல்ல விட்டா என்ன ஃபீல் வருமோ அதைக் கொடுத்துடுச்சு.
தொடக்கத்துல மளமளனு விழுந்த விக்கெட்டுகள், அதை தடுத்து நிறுத்தி நம்ப முடியாததை நிகழ்த்திய ரோஹித் - ரிங்கு பார்ட்னர்ஷிப், இந்தியாவுக்கு சமமாக ஃபைட் பண்ண ஆஃப்கனும் குல்பதீபோட அரைசதமும், டை ஆன போட்டி கேட்ட சூப்பர் ஓவர், தாயத்திற்கு மறுதாயமாக சூப்பர் ஓவருக்கே சூப்பர் ஓவர், நடுவுல ரோஹித்தோட ரிட்டயர்ட் அவுட் சர்ச்சை, எல்லாத்தையும் மௌனிக்க வைக்க ரவி பிஷ்னாய் கொடுத்த அற்புதமான எண்டிங்னு பல யூ டர்ன்களை போட்டி பார்த்தது.
சூப்பர் ஓவர்னாலே ரசிகர்களோட ஆர்வத்தை இரட்டிப்பாக்கி எண்டர்டெய்ன் பண்றதுதானே? பஞ்சாப் - மும்பைக்கு நடுவுல ஐபிஎல்ல நடந்த சூப்பர் ஓவர் தொடங்கி அத்தனையும் இதற்கான எடுத்துக்காட்டுதான். இது இந்தியாவைப் பொறுத்தவரை கூட முதல் முறையல்ல!
2007-ல முதல் டி20 உலகக்கோப்பைல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி டை ஆக, அதை பௌல் அவுட் முறைல இந்தியா வென்றது. டி20 கிரிக்கெட்டே புதுசாக இருந்த ரசிகர்களுக்கு இந்த அம்சம் அதீத ஆர்வத்தை ஏற்படுத்துவதாக மாறி ஒவ்வொரு நொடியையும் சுவாரஸ்யம் ஆக்குச்சு.
நியூசிலாந்துக்கும் டை ஆகும் போட்டிகளுக்குமான வரலாறும் துரதிர்ஷ்டமும் 2019 உலகக்கோப்பைல இருந்து தெரிஞ்சது தான். 2020-லயும் அது அவங்களுக்கு சாதகமா இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை இந்தியா சூப்பர் ஓவர்ல வென்றது. 180 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து 179 ரன்கள் அடிக்க போட்டி டை ஆனது. அதன்பிறகு நியூசிலாந்து 17 ரன்களை சூப்பர் ஓவரில் நிர்ணயிக்க ரோஹித் அடிச்ச இரு இமாலய சிக்ஸர்கள் வெற்றியை இந்தியா பக்கம் சேர்த்துச்சு.
அங்கேயே கோப்பையை வென்றது இந்தியா. இதுல சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா அதே தொடர்ல அதற்கடுத்த போட்டியும் டை ஆகி இந்தியா அப்போட்டியை சூப்பர் ஓவர்ல வென்றது தான். இதுல 14 ரன்கள் இலக்காக வைக்கப்பட அதை கேஎல் ராலோட பேக் டு பேக் சிக்ஸர் மற்றும் பவுண்டரியும் கோலி அடிச்ச பவுண்டரியும் சுலபமா ஜெயிக்க வச்சது. அதற்கடுத்த போட்டியையும் வென்று ஐந்து போட்டிகளை உடைய அந்த டி20 தொடரை இந்தியா 5/0னு ஜெயிச்சது.
2022-ல நியூசிலாந்துக்கு எதிராக மழையால் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்கோரை இந்தியா எட்டிய அப்போட்டியும் டை ஆச்சு. இப்போ ஆஃப்கனுக்கு எதிராக இரு சூப்பர் ஓவர்களைக் கண்ட போட்டிலயும் இந்தியா வென்றுள்ளது.
ஆகமொத்தம் அதிக டி20 போட்டிகளை வென்ற இந்தியக் கேப்டன்ற சாதனையை ரோஹித் ஷர்மா நிகழ்த்த, டை ஆன டி20 போட்டிகள்ல தோற்றதே இல்லைன்ற ரெக்கார்டை இந்தியாவும் படைச்சுருக்கு.....