பாகிஸ்தானோட Pace பௌலிங் பல பெருமைகள அவங்களுக்கு பெற்றுத் தந்திருக்குன்னாலும் 1992-ம் ஆண்டில் வாசிம் அக்ரமோட ஒரு ஸ்பெல் ஒரு உலகக் கோப்பையையே அவங்களுக்கு வாங்கித் தந்தது.
லீக் சுற்றுல முதல் ஐந்து போட்டிகள்ல இரண்டை மட்டுமே வென்று மரண அடி வாங்கி இருந்தது பாகிஸ்தான். கிட்டத்தட்ட தொடரை விட்டே வெளியேறிய நிலைதான். ஜெயிப்போம்ன்ற எண்ணம் அவங்களுக்கே கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்திருந்தது. ஆனா கேப்டன் இம்ரான் கான், "Cornered Tigers மாதிரி வெறியோட ஆடி நீங்க யாருன்னு உலகத்துக்கு காட்டுங்கன்"னு சொல்ல, அது தந்த மோடிவேஷன் ஃபைனல் முடிஞ்சு கோப்பையை கைல ஏந்துற வரை பாகிஸ்தான் வீரர்களை விட்டு வடியவே இல்லை.
அரையிறுதில நியூஸிலாந்து, இறுதிப் போட்டியில இங்கிலாந்துனு பெரிய அணிகளையும் மண்ணை கவ்வ வச்சு தன்னோட முதல் உலகக்கோப்பையிலேயை பாகிஸ்தான் வென்றது. இதுல பல பேரோட பங்கும் இருக்குன்னாலும் பேட்டிங், பௌலிங் இரண்டுலயுமே ஜொலிச்சு மேன் ஆஃப் தி மேட்ச் ஆகவும் டாக் ஆஃப் தி டவுனாகவும் மாறிய வாசிம் அக்ரம் தான் ரியல் ஹீரோ.
முதல்ல பாகிஸ்தான் தான் பேட்டிங் பண்ணுச்சு. ஓப்பனர்கள் ரெண்டு பேருமே சிங்கிள் டிஜிட் தான் அடிச்சாங்க. ஆனா காயத்தைப் பொருட்படுத்தாம கேப்டன் இன்னிங்ஸ் ஆடுன இம்ரான், ஜாவித் மியான்தத் தோட அரை சதங்கள் ஓரளவு அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட வச்சது. அதே சமயம் கடைசி ஓவர்கள்ல வாசிம் அக்ரமோட கேமியோ தான் அணிக்கு டிஃபெண்ட் செய்ற அளவிலான ரன்களைக் கொடுத்துச்சுன்னு சொல்லனும்.
18 பந்துகள்ல 33 ரன்கள், கண் சிமிட்டுற கேப்ல இலக்கை 250-க்கு எடுத்துட்டுப் போச்சு. அங்கேயே அக்ரம் கொண்டாடப்பட்டார். அதற்கும் மேலாக கிக் ஸ்டார்ட் கொடுக்கணும்னு நினைச்ச இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்குற மாதிரி ஸ்விங் கிங் கோட மேஜிக்கல் பால் இயான் போத்தமை காலி பண்ணுனது அவரை இன்னமும் ஜொலிக்க வச்சது. இன்ஸ்விங்கர்ஸா போட்டு செட் செஞ்சு திடீர்னு ஒரு அவுட் ஸ்விங்கர் மூலமாக இயான் போத்தமை அக்ரம் அனுப்பி வச்சுட்டாரு.
இதுவே பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட தொடக்கத்தைக் கொடுத்தாலும் அவரோட இரண்டாவது ஸ்பெல்தான் இன்னமும் ஸ்பெஷல். 20-வது ஓவர்ல கிரகாம் கூச் விக்கெட் விழுந்த பிறகு கொஞ்ச நேரத்தில இங்கிலாந்து நன்றாகவே செட்டில் ஆகிடுச்சு. 96 பால் இருக்கு 112 ரன்கள் எடுத்தா போதும்னு இலக்கை நெருங்கிவிட்டு இருந்தாங்க. ஆனால் இம்ரான் கான் கொஞ்சமும் தாமதிக்காம அக்ரமைக் கொண்டு வந்தாங்க. அவர் வீச வந்ததும் ஒரே ஓவர்ல ஒட்டுமொத்தமா எல்லாமே மாறுச்சு.
ஆலன் லாம்ப்பை அக்ரமோட ரிவர்ஸ் ஸ்விங் சத்தமே இல்லாம தட்டித் தூக்கிடுச்சு. அதன் பிறகு அதே ஓவர்ல, ஒரே பந்து இடைவெளியில அடுத்த இடிய இங்கிலாந்து மேல இறக்குனாரு. அரவுண்ட் தி விக்கெட்ல வந்து இறங்கின அந்த இன்ஸ்விங்கர் க்றிஸ் லூயிஸோட ஸ்டம்பை மட்டும் இல்ல இங்கிலாந்தோட கோப்பைக் கனவையும் அடிச்சு நொறுக்கியது. இங்கிலாந்து கைல இருந்த வெற்றியை அக்ரமோட இந்த இரு பந்துகளும் தட்டிப் பறிச்சு பாகிஸ்தானோட வசமாக்குச்சு.
பாகிஸ்தானோட ஃபாஸ்ட் பௌலிங்ல சகாப்தமா இன்னைக்கும் வாசிம் அக்ரம் கொண்டாடப்படறதுக்கு அந்த ஸ்பெல்லும் அது உண்டாக்கிய தாக்கமும் ஒரு காரணம்.