
மகாராஸ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சோம்நாத் ஷிண்டே என்ற சப்-இன்ஸ்பெக்டர், ட்ரீம்11 என்ற ஆன்லைன் கேமில் பங்கேற்று ரூ. 1.5 கோடி வென்று கோடீஸ்வரரானதால் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போட்டியில் வென்றதன் மூலம் அந்த பணத்தை வைத்து ஒரு புதிய வீடு வாங்கவும், தனக்கு இருந்த கடனையும் அடைக்க முடிவு செய்துள்ளார். மேலும், தனக்கு கிடைத்த பணம் குறித்து, போலீஸ் சீருடையில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு ஒரு பிரஸ்மீட்டும் அளித்துள்ளார்.
இதையடுத்து, புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறை அவர் மீது தவறான நடத்தை மற்றும் காவல் துறையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டி அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் ஜெண்டே அனுமதியின்றி ஆன்லைன் கேம் விளையாடியதும், போலீஸ் சீருடையை அணிந்துகொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக விசாரணைக்கு தலைமை தாங்கிய காவல்துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் தெரிவித்தார். மேலும், "இது மற்ற காவல்துறையினருக்கு ஒரு எச்சரிக்கை. இதே முறையில் ஆன்லைன் கேம்களை விளையாடினால் அவர்களும் இது போன்ற ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" என்று அவர் எச்சரித்தார்.
- மு.குபேரன்.