செப்டம்பர் 8 அன்று மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 2900 பொது மக்கள் இறந்துள்ளனர். ஆனால் கெட்டூ (KETTOU) என்ற கிராமத்தில், இரவில் நடத்தப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சியால் அந்த ஊர் மக்கள் அனைவரும் தப்பித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டு வருகிறது.
மொராக்கோ நாட்டின் கெட்டூ என்ற ஊரில் ஹபீபா அஜ்திர் மற்றும் முகமது பௌடாட் ஆகியோருக்கு சனிக்கிழமை அதாவது செப்டம்பர் 9 அன்று திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகளின் இல்லத்தில் ஒரு விருந்து நடத்தியிருக்கின்றனர்.
அந்நிகழ்ச்சியில், விருந்தினர் ஒருவரால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், சரியாக இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. அதோடு பாரம்பரிய உடையில் புல்லாங்குழல் மற்றும் ஆட்டுத்தோல் டிரம்ஸில் இசைக்கும் இசைக்கலைஞர்களின் திடீர் குழப்பம், பெரும் அலறல் சத்தம், இருட்டினால் வேகமாக ஆன் செய்யப்பட்ட ப்ளாஷ் லைட்டுகளைப் பார்க்க முடிந்தது.
எல்லோரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக இருந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. அதனால், சனிக்கிழமை திட்டமிட்டபடி திருமணம் நடத்தப்பட்டது. எனினும் கிராமவாசிகள் பலரின் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்துள்ளன. இதனால் அவர்களின் திருமணத்திற்காக அமைக்கப்பட்ட பெரிய பந்தல் தற்போது, வீடுகளை இழந்தவர்களின் தங்குமிடமாகச் செயல்பட்டு வருகிறது.
- மு. இசக்கிமுத்து.