நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒற்றன் திரைப்படத்தில் வரும் ஒரு காமெடியில் நடிகர் வடிவேலு, "நான்தான் குமார் சாமி அக்கா மகன் மாடசாமி செட்டியார்" என்று கூறி ஐஜி வீட்டிற்கு செல்வார். ஆனால் அவருக்கு முன் நடிகர் அர்ஜுன், "நான்தான் குமார் சாமி அக்கா மகன் மாடசாமி செட்டியார்" என்று ஐஜி வீட்டில் இருப்பார். தற்போது அந்த காமெடியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சம்பவம் பீகார் கிரிக்கெட் அணியில் நடந்துள்ளது.
ராஞ்சி கோப்பையின் எலைட் குரூப் "பி" இல் இடம்பெற்ற மும்பை மற்றும் பீகார் அணிகளுக்கு இடையேயான போட்டி, பாட்னாவின் மொயின்-உல்-ஹக் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் தொடக்க நாள் ஆட்டத்தில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணி, பீகார் அணியை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது இரண்டு பீகார் அணிகள் மைதானத்திற்கு வந்ததால் போட்டி நடுவர்கள் மற்றும் வீரர்களுக்கிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக எந்த அணி விளையாடுவது என்று இரு பீகார் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பினால் உள்ளூர் போலீசாரின் தலையீடு தேவைப்பட்டுள்ளது.
இறுதியாக போட்டி காலை 11 மணியளவில் தொடங்கியது. மேலும் இந்த குழப்பத்திற்கு காரணம் பீகார் கிரிக்கெட் சங்கத்தில் (Bihar Cricket Association) உள்ள இரு பிரிவுகளுக்கு இடையே உள் மோதல்களால் மைதானத்திற்கு இரு அணிகள் வந்ததாக தகவல் வெளியானது. ஒரு அணியை பீகார் கிரிக்கெட் சங்கத்தில் தலைவர் ராகேஷ் திவாரியும், மற்றொரு அணியை சங்க செயலாளர் அமித் குமாரும் தேர்வு செய்தனர்.
இறுதியாக பல்வேறு குழறுபடிகளுக்கு பிறகு சங்கத்தின் தலைவர் திவாரி தேர்வு செய்த அணியே மும்பைக்கு எதிராக விளையாடியது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் கிரிக்கெட் சங்கத்தில் தலைவர் திவாரி, "சங்கத்தின் செயலாளர் அமித் குமார் இடைநீக்கத்தில் இருக்கிறார். அதனால் அமித் குமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி பங்கேற்கத் தகுதியற்றது. நாங்கள் சரியாக தகுதியின் அடிப்படையில் பீகாரில் வளர்ந்து வரும் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்தோம்." என்று கூறியுள்ளார்.
"நாங்கள் தேர்ந்தெடுத்த அணியில் சாகிப் ஹுசைன் இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 வயது ப்ராடிஜி விளையாட்டில் அறிமுகமாகிறார். 2013 ஸ்பாட் பிக்சிங் வழக்கில் புகார் அளித்த ஆதித்யா வர்மாவே ஸ்டேடியத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம். அவருக்கு கிரிக்கெட் சங்கத்தில் லஞ்சம் கொடுப்பது மட்டுமே அவருடைய வேலை. நாங்கள் அமித் குமாரின் அவரின் மகனைத் தேர்வு செய்யாததால் எங்களுக்கு தொல்லையை ஏற்படுத்தி வருகிறார்" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
- மு.குபேரன்.