Saudi Arabia Shock: பால்கனியில் துணிகளைக் காயப் போட்டால் 1000 ரியால் அபராதம்! |ஏன் தெரியுமா..?
சவூதி அரேபியா வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நாடாகும். சமீப காலமாக உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகிறது. அதற்காக அங்கு நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. திரையரங்குகளே இல்லாத நாடு என்ற பெயர் பெற்ற சவூதி அரேபியா அண்மை காலமாக திரையரங்குகளைத் திறந்து வருகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் நகரின் அழகை சிதைக்கும் வகையில் குடியிருப்புப் பகுதியின் பால்கனிகளில் துணிகளைத் துவைத்துக் காயப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது. மீறினால் 1000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் நாட்டில் உள்ள நகரங்களின் அழகியல் தோற்றத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டுள்ளது.
வணிக வளாகம், கடை வீதி போன்ற இடங்கள் இருக்கும் பகுதியில் குடியிருப்போர் இவ்வாறு துணிகளைக் காயப்போடுவதால் நகரின் அழகு கெட்டு விடுவதாக சொல்கிறது. மொட்டை மாடியில் காயப் போட்டு கொள்ள எவ்வித கட்டுப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த அபராதத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 22 ஆயிரத்து 33 ரூபாய் ஆகும்.
கடந்த ஆண்டு இதே போல் அபுதாபியிலும் அந்நாட்டு அரசு துணிகாயப்போட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-சா.முஹம்மது முஸம்மில்