தினசரி நாளிழல்களில் வெளியாகும் 'மணமகன்/மணமகள் தேவை' விளம்பரங்கள் பெரும்பாலும், மணமகன் அல்லது மணமகளின் கல்வித் தகுதி, மதம், பழக்கவழக்கம் மற்றும் வேலை போன்ற அடிப்படை தகுதிகளையே பெரிதும் மையப்படுத்தியிருக்கும்.
ஆனால், தற்போது சோஷியல் மீடியா செலிப்ரிட்டியான ரியா வெளியிட்ட 'மணமகன் தேவை' என்ற ஒரு சுவாரஸ்யமான கட்டுப்பாடுகளுடைய திருமண விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசங்களிடையே பேசுபொருளாகி வருகிறது.
அந்த விளம்பரத்தில், "என் பெயர் ரியா. நான் ஒரு தகுதியான ரீல்ஸ் பார்ட்னர் + மணமகனைத் தேடுகிறேன். தனக்கு துணையாக வருபவர் கேமரா முன் வெட்கப்படக்கூடாது. ரீல்ஸ் நடிப்பதில் வல்லவராகவும், சமூக வலைத்தளத்தில் தன்னுடன் ஜோடியாக ரீல்களை உருவாக்குவதில் ஆர்வத்தை கொண்டிருப்பவராகவும் இருக்க வேண்டும்." என்று கோரியுள்ளார்.
"தற்போது 'MOI-MOI' போன்ற ட்ரெண்டிங் இசையை கொண்ட வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக இருக்கக் கூடாது. என்னை தொடர்புகொள்வதற்கு முன், "Amazon mini TV's 'Half Love Half Arranged'-ஐ பார்த்து, நான் எந்த வகையான ஆண்களை விரும்பமாட்டேன் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்." என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வரும் மணமகன் தான் எடுக்கும் சமூக ஊடக ரீல்ஸ்களை எடிட் செய்யும் 'பிரீமியர் ப்ரோ' என்ற எடிட்டிங் சாப்ட்வேரை பயன்படுத்துவதில் திறமையானவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- மு.குபேரன்.