'காக்கிச்சட்டை என்றாலே ரத்தம் மட்டும்தானா ? தக்காளிச் சட்னியும் தான். கொஞ்சம் காமெடியான சம்பவங்களும் எங்களுக்கு உண்டு!' என்ற சொன்னார்கள் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள். இதோ அப்படி ஒரு சம்பவம்...
''30 நாளா ஒரு கோவில் கலசத்தைக் காணலை. சந்தேகப்பட்டு ஊருக்குள்ள போயி விசாரிச்சா ஊரே சேர்ந்து அந்த கோவிலுக்குப் பக்கத்துல இருக்குற ரெண்டு பேரை கையைக் காட்டுச்சு. ‘சாயங்காலம் ஆனா, இந்த ரெண்டு பேரும் கோவிலை சும்மா சும்மா வெறிச்சுப் பார்த்து உட்கார்ந்திருப்பாங்க’னு ஊரு சொன்னுச்சு.
ஆளுகளை தூக்கிட்டு வந்து விசாரிச்சா பேந்த பேந்த முழிச்சாங்க. வேற மாதிரி விசாரிச்சா, ‘ஐயோ சாமி நாங்க எடுக்கலை !’னு அழுது ஒப்பாரி வெச்சுட்டாங்க. வீட்டுக்குப் போயி செக் பண்ணினா கோவில் கலசத்தோட வரைபடம், அதோட பலன்கள் பற்றிய குறிப்புகள்னு எக்கச்சக்கமா புராஜெக்ட் ஒர்க்கே போட்டு வெச்சிருக்கானுங்க.
’உண்மையிலேயே அவங்க அதை அடிக்கலை . ஒருவாரம் கழிச்சு தூக்குறதா ப்ளான். கருகிப்போன மொபைல் ஒண்ணை வெச்சிருந்தானுங்க. 'என்னங்கடா இது'னு கேட்டால், ‘கலசத்துக்குள்ள வெச்சு கருகிப்போச்சுனு காட்ட!'னு சொன்னாய்ங்கே..! செம காமெடி.
'முதல்வாட்டி திருட ப்ளான் போட்டோம்யா'னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. நம்புறதா இல்லை இன்னும் விசாரிக்குறதான்னே புரியலை. அப்புறம் ஒரு பத்துநாள் பல கோணங்கள்ல அந்த வட்டாரம் முழுக்க விசாரணை நடந்தப்போ வேறொரு க்ரூப் மாட்டிக்கிச்சு.
இவனுங்க போட்ட ப்ளானை ஒரு டீக்கடையில தெரிஞ்சுக்கிட்டு இவனுங்களுக்கு டஃப் கொடுத்து முந்தியிருக்கானுங்க. பாவம்னு விடவும் முடியலை. செம காமெடியா இருந்தானுங்க ரெண்டு பேரும். எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது போல!''