காய்கறிகள் மற்றும் பொருட்களின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக தக்காளி விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மக்களைக் கவரும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையில், "பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்; 5 நபர் சாப்பிடும் அளவில் உள்ள பக்கெட் பிரியாணிக்கு 1 கிலோ தக்காளி; 3 நபர் சாப்பிடும் அளவில் உள்ள பக்கெட் பிரியாணிக்கு 1/2 கிலோ தக்காளி" என ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளியின் கடும் விலைவாசி உயர்வால் இந்த சலுகை என்றும் இது வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி என்றும் பிரியாணி கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும் சேலத்தில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக 349 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டது. இதனை பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இந்த சலுகை இரண்டு நாள் மட்டுமே என்பதால் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்கி அத்துடன் தக்காளியையும் இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் பகுதியில் செல்போன் கடை வைத்திருக்கும் உபேந்திர குமார் தன்னுடைய கடையில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக, மொபைல்ஃபோன் விற்பனை குறைந்திருந்தது, ஆனால் தற்போது தக்காளிக்காகவே வாடிக்கையாளர்கள் மொபைல்ஃபோன் அதிகமாக வாங்க வருவதாக கூறினார்.
இது போன்ற ஆஃபர்கள் நல்ல பலனை தருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு கடைகளில் பிரியாணிக்கு, பரோட்டாவிற்கு, ஏன் ஹெல்மட்டிற்கும் தக்காளி இலவசம் போன்ற ஆஃபர்கள் செல்கின்றன.