Weekend Vibes: சாம்பார் வடை புராணம்..!

மெதுவடை மீது சாம்பார் ஊற்றி ஊறவைத்தால் அதுதானே சாம்பார் வடை! இதுக்கெல்லாம் ஒரு பதிவா எனக் கேட்கும் அறுசுவை அறியா குழந்தைகளாக நீங்கள்.! ஆம் எனில் கடந்து போய் விடவும்! இல்லை எனில் தொடர்ந்து படிக்கவும்.!
Sambar vadai
Sambar vadaiTimepass

பொதுவாக சாம்பார் வடை என்பது மெதுவடை மீது சாம்பார் ஊற்றித் தருவது என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! உங்களுக்கு கிரிக்கெட் தெரிந்திருந்தால் அதிலிருந்து ஒரு உதாரணத்தை தருகிறேன்!

நல்ல சாம்பார் வடை என்பது கிரிக்கெட் ஆட்டத்தின் “பிட்ச்” போல, நல்ல பிட்ச் அமைந்து இருப்பின் அருமையான மேட்ச் ஆடுவது போல, நல்ல சாம்பார் வடையும் ஒரு பிட்ச் போலவே! திரவத்தை அப்படியே உறிஞ்சும் ஃப்ளோட்டிங் பேப்பர் போல வடை இருப்பது நல்ல சாம்பார் வடைக்கு ஓர் அருமையான உதாரணம் அதெப்படி மெதுவடையை ஃப்ளோட்டிங் பேப்பர் போல பொறித்து எடுப்பது?? அந்தளவிற்கு நீங்கள் ஆழமாக யோசிக்கவேண்டாம்.!

மெதுவடையை சூடாகப் பொரித்து எடுத்துவிட்டு வெந்த வடைகளை இம்மீடியட்டாக சூடுநீரில் போட வேண்டும் 10 நிமிடங்கள் அந்த வடை அந்த வெந்நீரில் ஊறிவிட்டால் நான் சொன்ன அந்த ஃப்ளோட்டிங் ஃபார்மெட் வடைக்கு கிடைத்துவிடும். உப்பு சிறிது குறைவாய் பொரிக்கப்பட்ட வடை தன் எண்ணெய் ஆடைகளை குளித்த வெந்நீரில் களைந்துவிட்டு சீராக வெந்நீர் குடித்து உப்பியிருக்கும்.! அதை நமது வில்லன் நடிகர் நம்பியார் போல..

இரு கையால் பிழிவது போல நசுக்குவது போல அமுக்கி (ரொம்ப அழுத்தக்கூடாது காதலியின் இதழ்களை சுவைக்கும் காதலன் போல.. அழுத்திக் கடிக்கக்கூடாது மெல்ல மெல்ல உறிஞ்சவும்) சுத்தமாக அந்த வெந்நீர் வடிந்தபின்பு அதை மக்கன் பேடா போல தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கவும், ஆம்.! இதோ ஃப்ளோட்டிங் பேப்பர் பதத்தில் மெதுவடை ரெடி.! பிழிந்த அவ்வடையே எதையும் உறிஞ்சும் என்பதால் அதன் மீது நீங்கள் ஊற்றும்...

சாம்பார் எனில் அதை உறிஞ்சி அதே சுவையில் சாம்பார்வடை.! இரசம் எனில் அது இரசவடை.! தயிர் எனில் அது தயிர் வடை. ! சாம்பார் வடைக்கு அம்பானி வீட்டுக் காயான வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கித் தூவுவதும் இரசவடைக்கு பொரித்த அப்பளம் அல்லது வடகம் நொறுக்கித் தூவுவதும், தயிர் வடைக்கு பொன்னிற காராபூந்தியை தூவுவதும் (இல்லையெனில் கார ஓமப் பொடி) இவையனைத்தும் அதன் ருசியை தனித்துவமாக்கும்.!

எப்படி குலாப் ஜாமூன் ஜீராவில் மூழ்கி ஊறி உள்ளதோ அதே போல் வடை சாம்பாரிலோ இரசத்திலோ தயிரிலோ ஊறியிருக்கவேண்டும். வெறும் ஸ்பூன் கொண்டு வெட்டினாலே ஐஸ்க்ரீம் போல ஜம்மென குலாப் ஜாமூன் போல் கட்டாகும் சாம்பார் வடையே பதத்தில் மிகச்சிறந்தது! சிலர் சாம்பார் வைத்துவிட்டு அதன் பிறகு அதில் வடையை போடுவார்கள் அது சாம்பார் வடையே அல்ல.!

ஊறியும் ஊறாமலும் இருக்கும் நடுவில் உளுந்த மாவு தன் பற்களால்...வெண்ணிறமாய் சிரிக்க ஒருபுறம் கெட்டித்தட்டியும்.. ஒரு புறம் மென்மையாகவும் சினிமாவில் கோழை எம்.ஜி.ஆர். & வீர எம்ஜிஆர் போல டபுள் ஆக்ட்டை கொடுக்கும்! சில நேரங்களில் அது நன்கு ஊறிவிடும், பல நேரங்களில் ரிஷப் பாண்ட் பேட்டிங் போல நம்மை சோதிக்கும். வெந்நீரில் ஊறிய வடையை வைத்து போடப்படும் இந்த சாம்பார் வடை நீங்கள் சாப்பிடும் இட்லிகளை நிச்சயம் ஒன்றிரண்டு அதிகப்படுத்தும். அனைத்திற்கும் மேல் குழைவான..

நெய்ப் பொங்கலுடன் உண்டால் இன்னும் 2 கரண்டி கூடுதலாக பொங்கலை ருசிக்கத் தூண்டும். அரைத்துவிட்ட சாம்பாரில் ஊறிய வடை எனில் அஜீரணம் இருப்பவனும் 8 இட்லியோ அல்லது 2 பொங்கலோ சாப்பிடுவான் என்கிறது உணவுப் புராணம்.! நல்ல சாம்பார் வடை ஒரு காரம் புளிப்பு சுவையுள்ள கார குலாப் ஜாமூன் போன்றது. நான் சொன்ன பதத்தில் வடைகளை சுட்டு எடுத்து அதை வெந்நீரில் ஊற வைத்துப் பிழிந்து அதன் மீது சூடான..

அரைத்து விட்ட சாம்பார் ஊற்றி அதன் மீது 2 கரண்டி பசும் நெய் விட்டு சிறிது காராபூந்தி மற்றும் நறுக்கிய வெங்காயம் தூவி சாப்பிட்டால் அதுவே பேரானந்தம். அதை அடைய சுவாமி நித்தியானந்தாவின் ஆன்மிகத் தீவான கைலாசாவின் குடியுரிமை கிடைத்தால் கூட அது நமக்குத் தேவையில்லை என்போம்! இது போல நல்ல சாம்பார் வடையை ருசிப்பது உங்களுக்கு முக்தியளிக்கும் பரவசமான ஆனந்த நிலையைத் தரும் நீங்களும் உலகின் மிகச் சிறந்த வடாதிபதி ஆகிவிடலாம்.!

- _*'சாம்பார் வடை' சரவணன்_*

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com