இந்த டேபிள்மேட் வந்தாலும் வந்தது. ‘சாப்பாட்டுத் தட்டை இதன் மேல் வைத்து சிந்தாமல் சாப்பிடலாம்’, ‘ஹோம்வொர்க் செய்யலாம்’, ‘லேப்டாப் வைக்கலாம்’ என்று உலகத்தில் யாருக்குமே தெரியாத பல அரிய விஷயங்களைச் சொல்லித்தருகிறார்கள். டேபிள்மேட் போல் சேர்மேட்டும் வந்தால்...
உட்காருவதற்கு:
அதிக தூரம் அலைந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் உட்காரணும்போல் இருக்கிறதா? இதோ எங்கள் சேர்மேட்டில் உட்கார்ந்து உங்கள் களைப்பினைப் போக்கலாம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவர் வேண்டுமானாலும் எங்கள் சேர்மேட்டில் உட்கார முடியும் என்பது தனிச் சிறப்பு!
மியூசிகல் சேர் விளையாட:
எங்கள் சேர்மேட்டைப் பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மியூசிகல் சேர் விளையாட்டு விளையாடிக் குதூகலிக்கலாம். சேர்மேட் சேர்களைச் சுற்றி வருவது மிகவும் எளிது.
சுற்றியபடியே சட்டென அமரும்போது சாய்ந்திடாதபடி ஹெவி பாட்டம் கிரிப் டெக்னாலஜி பயன்படுத்தப்-பட்டுள்ளது. வீட்டையும் அடைக்காத படி அடக்கமான அளவில் சேர்மேட் உள்ளது!
முதுகு வலி தீர:
இது விஞ்ஞானப்பூர்வமாக பரிசீலிக்கப்பட்டு 75 டிகிரி சாய்வதற்குத் தோதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சாய்மானப் பகுதி முதுகுத்தண்டுவடத்தில் மென்மையாக உரசுவதனால் பல்லாண்டுகளாக தீராத முதுகு வலி பிரச்னைகள் நிரந்தரமாக அகல வாய்ப்புள்ளது!
ஏறி நிற்க:
கைக்கு எட்டாத உயரத்திலுள்ள அலமாரியிலிருந்து ஏதேனும் பொருளை எடுக்க வேண்டுமா? மேலே ஒட்டடை அடிக்க வேண்டுமா? எங்கள் சேர்மேட்டைப் பயன்படுத்தி, அதன் மேல் கால் வைத்து ஏறி நின்று வெகு சுலபமாக இரண்டையும் செய்து முடிக்கலாம்!
பாடம் நடத்த:
பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், எங்கள் சேர்மேட்டில் அமர்ந்து பாடம் நடத்துவது மிகவும் எளிது. அதேபோல், எங்கள் சேர்மேட்டில் அமரும்போது ஆசிரியருக்கான மிடுக்கும் மாணவர்கள் மத்தியில் மரியாதையும் ஏற்படுகிறது.
போர்டில் எழுதிப் போட்டு விட்டு உடனே வந்து சேர்மேட்டில் அமரலாம். அதே போல நடந்தபடியே பாடம் நடத்தும் ஆசிரியர்களும் வெகு எளிதாக எங்கள் சேர்மேட்டில் அமரலாம்!
தைரியம் பொங்க:
காவல் நிலையங்களில் எங்கள் சேர்மேட்டைப் பயன்படுத்தும்போது, அதில் அமரும் ஏட்டையா முதல் இன்ஸ்பெக்டர் கள் வரை அனைவருக்கும் வீரம் பீறிட்டு எழுவதை நீங்கள் உணரலாம். அதற்கேற்ப பின்பக்க சாய்மானத்தை மீண்டும் 90 டிகிரிக்கே செட் பண்ணிக்கொள்ளலாம்.
அதேபோல் நீதிமன்றத்தில், பல விசித்திரமான வழக்குகளில் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள், சேர்மேட்டில் அமர்ந்தால் உடனுக்குடன் பல்வேறு யோசனைகள் தோன்றித் தெளிவான தீர்ப்பளிக்க உதவுகிறது!
சட்டமன்றம், மாநகராட்சி மன்றம் போன்ற இடங்களில் சேர்மேட் பயன்படுத்தினால், கடுமையான விவாதங்களின்போது எதிர்தரப்பினரின் மீது தூக்கியெறிவது சுலபம். அதற்கேற்ப குறைந்த எடையில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சேர்மேட்கள் உள்ளன. இந்த சேர்மேட் சேர்களினால் பிறருக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாதபடி பாதுகாக்க முடியும் என்பதும் இதன் சிறப்பாகும்!