விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள நாவற்குளம் பகுதியில் அண்மையில் ஒருநாள் இளைஞர் ஒருவர், மாஃப்டியில் 'போலீஸ்' எனக்கூறி, அவ்வழியாக வாகனங்களில் வந்தோரை மடக்கி விசாரித்திருக்கிறார். அதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் ஆரோவில் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அங்கு நிஜ போலீஸ் விரைந்து வந்திருக்கிறது.
அந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, காக்கி உடைகள், தொப்பி, பெல்ட் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவரை அலேக்காக தூக்கிய ஆரோவில் போலீஸ், ஸ்டேஷனில் வைத்து விசாரித்தது. அந்த இளைஞர், அதே நாவற்குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (24) என்பதும், 12-ம் வகுப்பு படித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், தமிழக போலீஸில் சேருவதற்கு அவர் இரண்டு முறை முயற்சி செய்ததும், அவற்றில் தோல்வியை கண்டவர்... காவல்துறை பணிமீது இருந்த ஆசையிலும், அதன்மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற தவறான எண்ணத்திலும் அவரே போலீஸ் உடைகளை தயாரித்து, அப்பகுதியில் தனிப்பட்ட போலீஸாகவே செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 6 மாதங்களாக போலீஸ் போல நடித்து பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து வசூல் வேட்டையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். காவல்துறையினரின் பெயரை தவறாக பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி வந்த இளைஞர் சத்தியசீலனை தற்போது நிஜ போலீஸ் கைது செய்து, 3 பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது.
- அ.கண்ணதாசன்.